இராணி முத்து வீராயி நாச்சியார்

இராமநாதபுரம் ஜமீனின் ஜமீன்தாரினி

இராணி முத்து வீராயி நாச்சியார் என்பவர் இராமநாதபுரம் ஜமீனின் ஜமீன்தாரினி ஆவார். இவர் விஜயரகுநாத இராமசாமி சேதுபதிக்கு அடுத்த ஜமீன்தாரினியான பொறுப்பேற்றவர் ஆவார். இவர் விஜயரகுநாத இராமசாமி சேதுபதியின் சகோதரி ஆவார்.

வாரிசாக நியமிக்கப்படுதல் தொகு

விஜய இராமசாமி சேதுபதி கி.பி. 1830இல் இறப்பதற்கு முன்னர் தமது சகோதரியும் சுவீகாரத் தாயாருமான முத்து வீராயி நாச்சியாரைத் தமது வாரிசாக நியமித்தார். இதனைச் சுட்டிக்காட்டி இராணி முத்து வீராயி நாச்சியார் விடுத்த வேண்டுதலுக்கிணங்க மதுரைச் சீமை கலெக்டர் விவேஷிங் ஜமீன்தாரியை இவரிடம் ஒப்படைக்கப் பரிந்துரை செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட கும்பெனித் தலைமை இராமநாதபுரம், ஜமீன்தாரியை இராணி முத்து வீராயி நாச்சியாரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

வாழ்கைக் குறிப்பு தொகு

இராணி முத்து வீராயி நாச்சியார் திறமையாக சமஸ்தான மேலாளரான இஸ்மாயில் சாகிபுடன் இணைந்து சமஸ்தான அலுவல்களைத் திறம்பட ஆற்றினார். பல ஆண்டுகளாகப் பற்றாக்குறையினால் அவதிப்பட்டு வந்த சமஸ்தானம் நிதி வசதியுடன் கூடியதாக மேம்பட்டது. இந்நிலையில் மறைந்த விஜயரகுநாத இராமசாமி சேதுபதியின் விதவை மனைவியான பர்வதவர்த்தனி நாச்சியாரும் வேறு சிலரும் இராணி முத்து வீராயி நாச்சியாருக்கு எதிராகப் பல வழக்குகளைத் தொடர்ந்தனர். இதேசமயம் எட்டையபுரம் பாளையக்காரர் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் தெற்கு எல்லையில் பல ஆக்கிரமிப்புகளைச் செய்து வந்தார். இவையனைத்தையும் இராணி முத்து வீராயி நாச்சியார் உரியவர்களின் ஆலோசனையோடு சமாளித்துவந்தார்.

இந்த முறண்பாடுகளால் இராணி முத்து வீராயி நாச்சியாருக்கும் விதவை இராணியான பர்வதவர்த்தனிக்கும் உறவுகள் சீர் கெட்டன. இறுதியில் இராணியின் மாமியாரான முத்து வீராயி நாச்சியாரும் பர்வதவர்த்தனி நாச்சியாரும் சமரச உடன்பாட்டினைச் செய்துகொண்டனர். அதன்படி இராஜசிங்க மங்கலம் வட்டகையில் உள்ள பிடாரனேந்தல் பகுதிக்கு இராணி முத்து வீராயி நாச்சியாரைச் உட்பிரிவு ஜமீன்தாரினியாகச் செய்யப்பட்டதுடன் இராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் சர்வ சுதந்திரத்துடன் வசிப்பதற்கான உரிமையும் வழங்கப் பெற்று மாதந்தோறும் ரூ. 1000 ஐ இராமநாதபுரம் சமஸ்தானக் கருவூலத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கும் இராணி பர்வதவர்த்தனி நாச்சியார் ஒப்புதல் அளித்தார். மேலும் ஏற்கனவே முத்து வீராயி நாச்சியார் சுவீகாரப் புத்திரனாக ஏற்றுக் கொண்டிருந்த சிவசாமி சேதுபதியை இராமநாதபுரம் பட்டத்திற்கு உரிமை கோருவது இல்லை என ராணி முத்து வீராயி நாச்சியார் இணக்கம் தெரிவித்தார். இது நடந்தது 29. மார்ச் 1850 இல். இந்த உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கு முன்னர் இராணி பர்வதவர்த்தனி நாச்சியார் சிவஞானத்தேவரின் மகனும் புதுமடம் கிராமத்தில் உள்ள தனது தங்கை வீராயியின் மகனுமான முத்து இராமலிங்கத்தை 24. மே 1847இல் தனது வாரிசாக ஏற்றிருந்தார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. IV இராணி முத்து வீராயி நாச்சியார் மற்றும் V ராணி சேது பர்வதவர்த்தனி நாச்சியார் (2003). சேதுபதி மன்னர் வரலாறு. இராமநாதபுரம்: சர்மிளா பதிப்பகம். பக். 97-99. https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZl9jZMy.TVA_BOK_0004058.