இராமானுஜர் மணிமண்டபம்
இராமானுஜர் மணிமண்டபம் என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம், சேலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எருமபாளையம் ஏரிக்கரையில் இராமானுசருக்கு அவரது ஆயிரமாவது பிறந்த நாளையொட்டி அமைக்கப்பட்ட மணிமண்டபக் கோயில் ஆகும்.
இராமாணுசர் மணிமண்டபக் கோயில், சேலம் நகரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில், சேலம் உடையாப்பட்டி புறவழிச் சாலையில் எருமபாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மணி மண்டப வளாகத்தில் நுழைந்து படியேறிச் சென்றால் முதன்மை மண்டபத்தின் மீது பேருருவாக 18 அடி உயர திருமேனியாக இராமாணுசரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மணிமண்டப வளாகத்தில் ஈசான (வடகிழக்கு) மூலையில் திருவரங்க ரங்கநாதருக்கும், நைருதி (தென்மேற்கு) மூலையில் திருமலை திருவேங்கடமுடையானுக்கும், அக்னி (தென்கிழக்கு) மூலையில் காஞ்சி வரதராச பெருமாளுக்கும், வாயு (வடமேற்கு) மூலையில் மேலக்கோட்டை சம்பத்குமார சுவாமியையும் எழுந்தருளச் செய்துள்ளனர். மணிமண்டபம் மற்றும் பெருமாள் கோயில்கள் தினமும் காலை ஒன்பது மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை நான்கு மணி முதல் இரவு ஏழு மணி வரையிலும் திறக்கப்படுகிறது.
இந்த மண்டபத்தில் உள்ள சிறப்புத் திரையரங்கில் பக்தர்களுக்கு இராமாணுசரின் வாழ்க்கை வரலாறு காண்பிக்கப்படுகிறது. குழந்தைகள் விளையாட சிறு பூங்கா, செயற்கை நீருற்று, நூலகம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. 20 அடி உயர மணிமண்டபத்துக்கு செல்ல வயதானவர்களுக்கு மின்தூக்கி வசதி, வளாகத்தைச் சுற்றி வர மின்கல ஊர்தி போன்ற வசதிகள் உள்ளன.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ எஸ். விஜயகுமார் (13 சூலை 2017). "ராமானுஜரின் விஸ்வரூபம்". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 13 சூலை 2017.