இராமு தேவர்

இந்திய தேசிய ராணுவம்

இராமு தேவர் என்பவர் நேதாஜி பிரித்தானிய அரசை எதிர்க்க உருவாக்கிய இந்திய தேசிய இராணுவம் என்ற படைப்பிரிவின் ஒற்றர்.

பள்ளிப் பருவம் தொகு

இவர் இராமநாதபுரம் மாவட்டம் தும்படைக்கா கோட்டையில் இராமலிங்க தேவர் என்பவருக்கு பிறந்தார்.தனது ஏழாம் வயதில் தந்தை மலேசியாவில் உள்ள பினாங்கிற்கு வேலைக்கு சென்றதால் இவரும் அவரோடு இருக்க நேர்ந்தது. அங்கு ஆரம்ப கல்வியை முடித்து, தொடக்க கல்வியான கேம்பிரிட்ஜ் வரை படித்தார்.

நேதாஜி பிரச்சாரம் தொகு

இவரது பதினேழாம் வயதின் போது நேதாஜி பிரித்தானிய அரசை எதிர்க்க உருவாக்கிய இந்திய தேசிய இராணுவம் என்ற படைப்பிரிவிற்கு இளைஞர்களை இராணுவ பயிற்சி பெறுமாறு பிரச்சாரம் செய்து வந்தார். அப்பகுதிகளில் மலாக்கா பிராந்தா, பினாங்கு பகுதிகளும் அடங்கும். அந்த பிரச்சாரத்தை கேட்ட இராமு தேவர் தனது பதினேழாம் வயதில் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தார்.

ஒற்றர் படை பயிற்சி தொகு

இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தவர்களில் மிகவும் இளையவர் இவர் என்பதால் இவருக்கு ஒற்றர் படையில் இடம் கிடைத்தது. இந்திய தேசிய இராணுவத்தின் ஒற்றர் படையின் பயிற்சி பள்ளியான சுவராசு பள்ளியில் பயிற்சி எடுத்தார்.

ஒற்றர் படை இரகசியம் வெளியாதல் தொகு

முதலில் பிரித்தானிய அரசுக்கு நேதாஜி ஒற்றர் படை வைத்திருந்தது அவ்வளவு உறுதியாக தெரியாமல் இருந்தது. 1944ல் சுவராசு தவிர்த்து மற்றொரு இந்திய தேசிய இராணுவ ஒற்றர் படையை சேர்ந்த 12 பேர் குசராத் மாநிலத்திற்கு நீர் மூழ்கி கப்பலில் வந்த போது பிரித்தானிய இந்திய அரசாங்கத்தில் பிடிபட்டனர். இதனால் நேதாஜி படையின் ஒற்றர்களின் இரகசியம் வெளியானது. இதனால் கிழக்குக் கடற்கரை இந்தியா முழுதும் பிரித்தானிய ஒற்றர்களின் மறைமுக கண்கானிப்பு அதிகமாகியது.

இராமு தேவர் பிடிபடுதல் தொகு

இதே நேரத்தில் இராமு தேவருடன் ஒற்றர் படையைச் சேர்ந்த குமரன் நாயர் மற்றும் சேது மாதவன் மூவரும் பர்மா வழியாக இந்தியாவிற்கு வர முயன்றனர். பர்மா எல்லையின் சிட்டகாங் அருகே இவர்களைப் பிரித்தானிய இந்திய இராணுவம் சுற்றி வளைத்தது. இவர்கள் மூவரும் தப்பிச் செல்ல முயன்ற போது குமரனுக்குக் காலில் குண்டடி பட்டதால் அவரை மற்ற இருவரும் காப்பாற்ற முயன்ற போது மூவருமே பிடிபட்டனர்.

சிறையில் சித்தரவதை தொகு

மூவருமே வங்கச் சிறையில் அடைபட்டனர். அங்கு நடந்த சித்ரவதைக் கொடுமையால் சேது மாதவன் வங்கச் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். அதனால் இராமுவையும் குமரனையும் அலிப்பூர் சிறைக்கு மாற்றினர்.

வழக்கு விசாரணை தொகு

இருவரின் வழக்கும் அலிப்பூர் சிறைச்சாலையிலேயே நீதிபதி கிருசுனா இராவ் தலைமையில் நடந்தது. பிரித்தானிய அரசு சார்பாக எத்திராசு என்ற வழக்குரைஞரும், இராமு மற்றும் குமரனுக்காக கசுதூரி என்ற வழக்குரைஞரும் வாதாடினர். முடிவில் இருவருக்கும் தூக்கு தண்டனை வழங்க பிரித்தானிய அரசு உத்தரவிட்டது. இருந்தாலும் இராமுவிற்கு 18 வய்தே ஆனதால் கருணையோடு இவ்வழக்கை அணுக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னையில் இராமு தேவர் தொகு

அவரின் வழக்கை கருணையின் அடிப்படையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இருந்தாலும் இருவருக்கும் தூக்கு தண்டனை விதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு அதன்படி இருவரும் தூக்கிலிடப்பட்டனர். இருவரின் சடலங்களும் சென்னை ஓட்டேரி மைதானத்தில் புதைக்கப்பட்டது.

இராமுவின் தாய் தொகு

1948 வரை தன் மகன் தூக்கிலிடப்பட்டதை இராமு தேவரின் தாய் அறியாமலேயே இருந்தார். சுதந்திரம் அடைந்த பிறகே இந்த செய்தியை தாய் அறிந்தார். அதனால் மனநிலை பாதிக்கப்பட்ட அவரின் தாய் 1984ஆம் ஆண்டு மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலேயே உயிர் துறந்தார்.

குமரன் நாயர் தெரு தொகு

குமரன் நாயரின் வீர மரணத்திற்கு மரியாதை செலுத்திய கேரள அரசாங்கம் அவர் வளர்ந்த தெருவிற்கு அவரின் பெயரையே சூட்டி வீர வணக்கம் செய்துள்ளது.

மூலம் தொகு

  • சுதந்திர தின சிறப்பு மலர் (15 ஆகத்து 2012). "நேதாஜியின் ஒற்றர் படையின் ஒப்பற்ற வீரர் ராமு தேவர்". தினத்தந்தி (கோவை மட்டும்): pp. 5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமு_தேவர்&oldid=3096018" இலிருந்து மீள்விக்கப்பட்டது