இரிங்கெல்மான் அளவுகோல்

இரிங்கெல்மான் அளவுகோல் (Ringelmann scale) புகையின் தோற்ற அடர்த்தியை அளக்க உதவும் ஓர் அளவு கோலாகும். 1888 ஆம் ஆண்டு பாரிசு நகரைச் சேர்ந்த மேக்சிமிலியன் இரிங்கெல்மான் இந்த அளவு கோலை உருவாக்கினார். வெண்மையான மேற்பரப்பின் மீது வலையிணைப்பாக அமைந்துள்ள கருப்புக் கோடுகளைப் பயன்படுத்தி அடர்த்தியின் ஐந்து நிலைகளை இவ்வளவுகோல் வழியாக உய்த்துணரமுடியும். தொலைவிலிருந்து பார்க்கும் போது நன்கு அறியப்பட்ட சாம்பல் நிறத்தின் பல்வேறு நிலைகளுடன் இவற்றை இரண்டறக்கலந்து காணமுடியும். இதற்காக உறுதி செய்யப்பட்ட வரைபடம் எதுவும் உருவாக்கப்படவில்லை. ஆனால், இரிங்கெல்மான் இதற்கென தனியாக ஒரு குறியீட்டு முறையை வழங்கியுள்ளார். வெண்மை நிறம் புகை அளவை 0 எனக் குறிக்கிறது. 1 மில்லி மீட்டர், 2.3 மில்லி மீட்டர், 3.7 மில்லி மீட்டர், 5.5 மில்லிமீட்டர் அகல கோடுகளில் வரையப்பட்டுள்ள 10 மில்லிமீட்டர் அளவுள்ள சதுரவலையிணைப்புகள் புகையின் அளவை முறையே 1 முதல் 4 வரையில் அளவிட உதவுகிறது. முழுமையான் கருப்பு நிறம் புகையின் அளவை 5 எனக்காட்டுகிறது. அமெரிக்காவின் சுரங்கச் செயலகம் 1967 ஆம் ஆண்டு சுற்றறிக்கை எண் 8333 இல் ஒரு பிரபலமான குறியீட்டு முறையை வெளியிட்டது. இரிங்கெல்மானின் குறியீட்டு முறையை பிரித்தானியதர அளவீட்டு நிறுவனம் சற்று நவீனமாக மேம்படுத்தியது. இதன்மூலம் பெறப்பட்ட தரவுகள் உறுதியான எல்லைகளைக் கொண்டிருந்தது. புகையின் கருமையான தோற்றம், வெளிவிடப்படும் கழிவில் உள்ள குறிப்பிட்ட ஒரு பொருளின் அடர்த்தியையும் அளவையும் அடிப்படையாகக் கொண்டது என அறியப்பட்டது. நோக்கரின் பார்வையுடன் சூரிய ஒளியின் திசை போன்ற இயற்கையான வெளிச்ச நிபந்தனைகள் கணக்கில் கொள்ளப்பட்டு புகையின் உட்கூறுகளை அறியமுடிந்தது. வரைதாளின் வெண்மையும் பயன்படுத்தும் மையின் கருமை முதலிய அம்சங்களும் கவனிக்கப்பட்டன.

இவ்வளவு கோலைப் பயன்படுத்தும்போது, அதிகபட்ச ஒளிபுகா நிலையில் இருந்து நோக்கர் அளவுகோலின் இறகை பார்த்து இரின்கெல்மான் எண் அளவை உறுதி செய்கிறார். இரிங்கெல்மான் 0, 1, 2, 3, 4 மற்றும் 5 என்ற எண்கள் முறையே ஒளிபுகாத்தன்மை அளவுகள் 0, 20, 40, 60, 80 மற்றும் 100 ஆகிய அளவுகளுக்குச் சமமானதாகக் கொள்ளப்படுகிறது[1]

மேற்கோள்கள் தொகு

  1. Randolph, Karen; et al. (February 3, 2012). "Visible Emissions Field Manual EPA Methods 9 and 22" (PDF). United States Environmental Protection Agency. பார்க்கப்பட்ட நாள் April 20, 2013.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிங்கெல்மான்_அளவுகோல்&oldid=3200288" இலிருந்து மீள்விக்கப்பட்டது