இளங்கோ (வேங்கையின் மைந்தன்)

இளங்கோ அகிலனின் வேங்கையின் மைந்தன் புதினத்தின் கதாநாயகன். கொடும்பாளூர் குலத்தில் தோன்றியவன். கொடும்பாளூரை ஆண்ட வேளிர்கள் முதலாம் இராஜராஜ சோழன் மற்றும் இராஜேந்திர சோழன் காலத்தில் சோழ நாட்டிற்கு உறுதுணையாய் நின்றவர்கள். அவர்கள் வீரமும் கடமையுணர்வும் உணர்ச்சிகளுக்கு இடங்கொடாத உறுதியான மனமும் உடையவர்களாய் சித்தரிக்கப்படுகின்றனர். அத்தகைய கொடும்பாளூர் சிற்றரசர் மதுராந்தக வேளாளரின் மகனாக ஆசிரியர் இப்புதினத்தில் இளங்கோவை அறிமுகம் செய்கிறார். ஈழத்திலிருந்து பாண்டிய நாட்டு முடியை மீட்ட இராஜேந்திரரின் வெற்றியை மையமாகக் கொண்டு எழுப்பப்பட்ட இக்கதையில் அம்மன்னனின் ஒவ்வொரு சாதனையிலும், வெற்றியிலும் பெரும் பங்காற்றும் வீரக் கதாநாயகனாக இப்புதினத்தின் மூன்று பாகங்களிலும் உலா வருகிறான் இந்த கொடும்பாளூர் இளவரசன்.

பண்புகள் தொகு

ஒரு வரலாற்றுப் புதினத்தின் நாயகனாக விளங்கத் தேவையான அனைத்து குணாதிசியங்களையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கதாபாத்திரம் இளங்கோ. இளங்கோவின் சிறப்புக் குணங்களாகக் இக்கதையில் ஒரு வாசகர் காணக்கூடியவை:

வீரம் தொகு

வீரம் விளையும் மண்ணில் தோன்றிய இளங்கோவின் வீரம் அவன் இராஜேந்திர சோழருக்காகப் பங்குகொண்ட ஒவ்வொரு போரிலும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. போர்க்களத்துக்குள் புகுந்ததும் அக்களம் முழுவதையும் தனதாக்கிக் கொண்டு போர்புரிவதும் தனது படையை ஒரு சிறந்த தலைவனாக வழி நடத்தும் திறனும் வெற்றி அல்லது வீர மரணம் என்ற அவனது கொள்கையும் இக்கதையில் தரப்பட்டுள்ள விதம் வாசிப்போரைக் கதாநாயகன்பால் ஈர்க்கிறது. பாண்டியன் முடி மீட்ட ஈழத்துப் போர், ஈழத்தில் மீண்டும் தலைதூக்கிய கலகங்கள், கடாரம் வென்ற கடற்போர் ஆகியவற்றில் இந்நாயகனின் வீரச் செயல்களும் வெற்றியும் மூன்று பாகங்களிலும் முக்கியக் கருத்துக்களாக அமைந்துள்ளன.

கடமை தொகு

கடமை என வந்துவிட்டால் அதைத் தவிர வேறொன்றும் கண்ணுக்குப் புலப்படாத குணம் இந்த கொடும்பாளூர் வேளிர்களுக்கு. அவ்வழியில் வந்த இளங்கோவும் கடமையை நிறைவேற்றுவதில் உயிரைக்கூட துச்சமாகக் கருதுபவன். இவன், அனைத்து போர்களிலும் கலந்து கொண்டு எதிரிகளை வென்று புலிக்கொடியை நாட்டுவதையேத் தனது தலையாயக் கடமையாகக் கொண்டவனாய் கதைக்குள் வலம் வருகிறான்.

காதல் தொகு

இக்கதையில் இவனுக்கு காதலிகள் இருவர். ஒருத்தி இராசேந்திர சோழரின் மூத்த பெண் அருள்மொழிநங்கை; மற்றொருத்தி ஈழநாட்டு மன்னன் மகிந்தரின் பெண் ரோகிணி. முன்னவள் தன் மீது அன்பு செலுத்துகிறாள் என்பது இவனுக்குக் கதையின் மூன்றாம் பாகத்தில் தான் தெரிய வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் அருள்மொழி நங்கை தன் மீது காட்டும் அன்பை ஒருவித மரியாதையாகவும் பரிவாகவும் நினைத்து விடுகிறான்.

பாண்டியன் முடிமீட்க ஈழத்தின் மீது படையெடுத்த போது அங்கு ரோகிணியைச் சந்திக்க நேர்கிறது. அவர்கள் இருவருக்கிடையில் அன்பும் காதலும் மலர்ந்தாலும் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அவர்களுக்கிடையே பூசலையும் போராட்டங்களையும் வளர்க்கின்றன. இளங்கோவின் கடமைக்குப் பின்புதான் வேறெதுவும் என்ற முரட்டுத்தனமும் பிறந்த நாட்டின் மீது கொண்ட பற்றுக்கும் தான் காதலிப்பவன் நாட்டின் நன்மைக்கும் இடையே ஊசலாடும் ரோகிணியின் தெளிவின்மையும் இருவரையும் பலமாக அலைக்கழிக்கின்றன. ஆனால் அனைத்து இடர்களையும் தாண்டி அவர்களிடையே மலர்ந்த காதல் பலமாக வேரூன்றி விடுகிறது. இராஜேந்திர சோழரும் வல்லவரையரும் அரசியல் லாபத்திற்காக இவர்கள் நெருங்கிப் பழகுவதை மறைமுகமாக ஆதரிக்கின்றனர்.

கடமையைக் கண்ணாகக் கருதும் இளங்கோவின் இதயத்துக்குள்ளும் காதல் என்னும் மெல்லுணர்வு அவனை வலுவாக ஆட்டி வைப்பதை இக்கதை முழுவதும் உணரலாம்.

நட்பு தொகு

இப்புதினத்தில் வீரமல்லன், மாங்குடி மருதன் என இருவர் இளங்கோவின் நெருங்கிய நண்பர்களாய் வருகின்றனர். ஆபத்தான ஒரு சமயத்தில் தன் உயிரைக் காத்த காரணத்தால் வீரமல்லன் மேல் இளங்கோ கொண்ட நட்பு நெருக்கமாகிறது. பழம்பெரும் குடியான முத்தரையர் வம்சத்தில் தோன்றிய வீரமல்லன் நாடில்லா வீரனாக இருப்பது அவன் மேல் அதிகப் பரிவைத் தூண்டுகிறது இளங்கோவுக்கு. சோழமன்னரிடம் பரிந்துரைத்து அவனது நாட்டைப் பெற்றுத்தருவதாகவும் அதுவரை பொறுமையாகவும் பொறுப்புடனும் இருக்கும்படியும் வீரமல்லனுக்குக் கூறுகிறான். தங்களுடையதைப் போல் ஒரு சிற்றரச வம்சத்தைச் சேர்ந்த இளங்கோவின் மேம்பட்ட நிலையையும் தனது நாடற்ற நிலையையும் எண்ணி வீரமல்லன் அசூயை கொண்டு எதிரிகள் பக்கம் மாறிவிட்டாலும் இளங்கோவின் மனதில் அவன் தனது நண்பன் என்ற எண்ணம் மாறவில்லை. அவன் மேல் வெறுப்பு ஏற்படுவதற்குப் பதில் அவனது அவசரபுத்தியை நினைத்து வருத்தம்தான் அடைகிறான். இராமருக்கு அனுமன் துணை போன்று இளங்கோவிற்கு அவனது நண்பன் மாங்குடி மருதன். தனது நிழல் போல் தன்னைப் பாதுகாத்துத் தொடரும் தன் நண்பன் மாங்குடி மருதனிடமும் இளங்கோ கொண்டுள்ள நட்பு ஆழமானது.