இளவெளிமான்
இளவெளிமான் என்பவன் சங்ககால மன்னர்களில் ஒருவன். வள்ளல் வெளிமானின் தம்பி. வெளிமான் காலமான பின்னர் இளவெளிமான் அரசனானான். புலவர் பெருஞ்சித்திரனார் இளவெளிமானைக் கண்டு பரிசில் வேண்டினார். அவன் ஏதோ கடமைக்குச் சிறிது கொடுத்தான். அதனைப் பெறப் புலவருக்கு மனமில்லை. பெறாது திரும்ப முடிவெடுத்து இரண்டு பாடல்கள் பாடியுள்ளர்.
நீர் பருகுவது போன்ற வேட்கையுடன் புலவரை வரவேற்றிருக்க வேண்டும். அருகில் இருக்கக் கண்டும் அறியாதவன் போலப் பரிசில் தருகிறான். பரிசில் நல்கும் உள்ளம் அவனுக்கு இல்லை. உலகம் பெரிது. பேணுநரும் பலர் உள்ளனர். - என்று எண்ணிக்கொண்டு சென்றுவிட்டார். [1]
யானையை வேட்டையாட எண்ணிய புலி யானை கிடைக்கவில்லை என்று எலியை வேட்டையாடக் குறி பார்க்காது. நான் பாடிய பாடல் இளவெளிமான் செவியில் ஏறிவிட்டது. பலன் கிடைக்கப்போகிறது என எண்ணியிருந்தேன். ஆனால் சோறு சமைத்த பானை நெருப்பைத் தருவது போல் இவன் தருகிறான். ஆறு போல் பாய்ந்து வேறு இடத்தில் பரிசில் பெற்றுக்கொள்ளலாம். – என எண்ணிக்கொண்டு சென்றுவிடுகிறார்.[2]
அடிக்குறிப்பு
தொகு- ↑
எழு இனி, நெஞ்சம்! செல்கம்; யாரோ,
பருகு அன்ன வேட்கை இல்வழி,
அருகில் கண்டும் அறியார் போல,
அகம் நக வாரா முகன் அழி பரிசில்
தாள் இலாளர் வேளார் அல்லர்?
'வருக' என வேண்டும் வரிசையோர்க்கே
பெரிதே உலகம்; பேணுநர் பலரே;
மீளி முன்பின் ஆளி போல,
உள்ளம் உள் அவிந்து அடங்காது, வெள்ளென
நோவாதோன்வயின் திரங்கி,
வாயா வன் கனிக்கு உலமருவோரே. (புறநானூறு 207) - ↑
'நீடு வாழ்க?' என்று, யான் நெடுங் கடை குறுகி,
பாடி நின்ற பசி நாட்கண்ணே,
'கோடைக் காலத்துக் கொழு நிழல் ஆகி,
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல்
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று' என
நச்சி இருந்த நசை பழுதாக,
அட்ட குழிசி அழல் பயந்தாஅங்கு,
'அளியர்தாமே ஆர்க' என்னா
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய,
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்
வாழைப் பூவின் வளை முறி சிதற,
முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க,
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை,
வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே:
ஆங்கு அது நோய் இன்றாக; ஓங்கு வரைப்
புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின்,
எலி பார்த்து ஒற்றாதாகும்; மலி திரைக்
கடல் மண்டு புனலின் இழுமெனச் சென்று,
நனியுடைப் பரிசில் தருகம்,
எழுமதி, நெஞ்சே! துணிபு முந்துறுத்தே. புறநானூறு 237