இள நாகனார்
இளநாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.
இவர் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பு நற்றிணையில் மூன்று பாடல்கள் உள்ளன.
அவை 151 (குறிஞ்சி), 205 (பாலை), 231 (தெய்தல்) என்னும் எண்ணிட்ட பாடல்களாக உள்ளன.
இவர் உள்ளுறை உவமம், இறைச்சிப் பொருள்களைக் கொண்டு அகப்பொருள் கருத்தை விளக்குவதில் வல்லவர் என்பது இவரது பாடல்களால் விளங்கும்.
- ஒரு பக்கம் போர் நிகழ்ச்சி - புலியைக் குத்திய யானை தன் கொம்பிலுள்ள கறையை அருவியில் கழுவிக்கொண்டிருக்கும்.
- மற்றொரு பக்கம் காதல் நிகழ்ச்சி - ஒரு பக்கம் குரங்குக் கூட்டம் கொழுந்துத் தளிர்களைப் பறித்துத் தின்றுகோண்டிருந்தது. ஒரு ஆண் குரங்கு செம்முக மந்தியை மிளகுக் கோடி மறைவில் திருட்டுத்தனமாக முன்பொருகால் புணர்ந்தது. இதை நினைத்த மந்தி பின்னர் தன் காதலனை வரும்படி குறிசெய்துவிட்டு அருவியை நோக்கியவாறு குனிந்துகொண்டது. ஆண் குரங்கோ வேங்கைப் பூவுக்கு நடுவில் தன்னை மறைத்துக்கொண்டு மந்தியின் பறட்டை மயிரைப் கோதிக்கொண்டிருந்தது.
இந்தக் காட்சிகளைச் சொல்லி, இரவில் தலைவன் தனியே வரவேண்டாம் என்கிறாள் தோழி.
- பூம்பொறி உழுவை (வரிப்புலி) யானையைத் தொலைக்கும். செத்துக்கிடக்கும் யானையை 'ஆளி' என்னும் யாளிச்சிங்கம் அருவிப் பாறைப் பக்கம் இழுத்துச் செல்லும்.
இப்படிப்பட்ட கானத்தில் மாந்தளிர் போன்ற மேனி கொண்ட உன்னவளை, நெஞ்சே! ஈந்து முள் குத்தும் பாதையில் உன்னுடன் கூட்டிச்செல்ல நினைக்கிறாயே, சரியா - எனத் தலைவன் தன் நெஞ்சுக்குச் சொல்கிறான்.
- வெண்ணிறக் கடற்காக்கை கூட்டம் கூட்டமாகப் பறந்து கடலில் முழுகி மேயும்.
- வடமீனை 'எழுமீன்' எனல் தமிழ்வழக்கு. இதனைத் தமிழ்மகளிர் தொழுவர்.
- இரவில் தோன்றும் எழுமீன் போலப் பகலில் கடற்காக்கைகள் பறக்கும்.
- ஊர்க் குரீஇ (ஊர்க்குருவி) குஞ்சு பொறித்த பின் கிடக்கும் முட்டை போலப் புன்னை பூக்கும்.
புன்னை பூக்கும் கானல் தலைவன் நம்மையே சுற்றிச் சுற்றி வருகிறான்.