இழநம்பிக்கை
இழநம்பிக்கை (Pessimism) என்பது ஒரு வித குற்றம் காணும் அல்லது தோல்வி உடைய மனப்பான்மையாகும். இழநம்பிக்கையாளர்கள் ஒரு கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் விரும்பத்தகாத விளைவுகளேயே எதிர்நோக்குகிறார்கள். இது, பொதுவாக சூழல் சார்ந்த இழநம்பிக்கை எனக் குறிப்பிடப்படுகிறது. அல்லது இத்தகைய மனப்பான்மை உடையவர்கள் வாழ்க்கையில் விரும்பத்தக்க விளைவுகளைக் காட்டிலும் விரும்பத்தகாத விளைவுகளே நடக்க இருப்பதாக நம்புகிறார்கள். பொதுவாகவே இழநம்பிக்கையாளர்கள் வாழ்விலோ, ஒரு குறிப்பிட்ட சூழலிலோ எதிர்மறையான விடயங்களில் மட்டுமே கவனத்தைக் குவிக்கிறார்கள். ஒரு பொதுவான உதாரணமானது, "இந்தக் கோப்பை பாதி காலியாக உள்ளதா? அல்லது பாதி நிரம்பியுள்ளதா? என்ற கேள்விக்கு, ஒரு இழநம்பிக்கையாளர் பாதி காலியாக உள்ளது என்றும், நன்னம்பிக்கையாளர் பாதி நிரம்பியுள்ளது என்றும் பதிலளிப்பர். வரலாறு முழுவதுமே, இழநம்பிக்கை மனநிலையானது, முக்கிய சிந்தனை வெளிப்பாடுகளிலும், தனது விளைவுகளைக் கொண்டிருந்தேயிருக்கிறது.[1]
மெய்யியல் ரீதியான இழநம்பிக்கை (Philosophical pessimism) என்பது இந்த உலகத்தை நிச்சயமான நன்னம்பிக்கைக்கு எதிரான பார்வையில் நோக்குவதாகும். இவ்வகையான இழநம்பிக்கை என்பது பொதுவான இச்சொல்லின் பொருள் உணர்த்துவது போன்ற மனவெழுச்சி சார்ந்த மனநிலையைக் குறிப்பதல்ல. பதிலாக, இது முன்னேற்றத்தின் குறியீடாக விளங்குகின்ற, நம்பிக்கை சார்ந்த நன்னம்பிக்கையின் வேண்டுதல்களுக்கு நேரடியாகச் சவால் விடுக்கும் உலகளாவிய மெய்யியலின் பிரிவாகும். மெய்யியல் இழநம்பிக்கையாளர்கள் பெரும்பாலும் இருத்தலியல் மறுப்புவாதிகளாகவும், வாழ்வில் உள்ளார்ந்த பொருள் அல்லது மதிப்பு ஏதும் இல்லை என்று நம்புபவர்களாககவும் இருக்கிறார்கள். இருப்பினும் இந்த நிலைக்கு அவர்களின் துலங்கல்கள் அகன்ற அளவில் வேறுபட்டதாகவும், பெரும்பாலும் வாழ்வை உறுதி செய்வதாகவும் உள்ளன.
மெய்யியல் இழநம்பிக்கைக் கோட்பாடு
தொகுமெய்யியல் இழநம்பிக்கை என்பது மனதின் நிலைப்பாடோ அல்லது உளவியல்ரீதியான நிலைப்பாடோ அல்ல, ஆனால், இந்த கருத்தியலானது, உலகின் இரசிக்கத்தகாத உண்மைகளை எதிர்கொள்வதற்கும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத, விரும்பத்தகாத விளைவுகளுக்கு வழிவகுக்கும், நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை (முன்னேற்றத்திற்கான யோசனைகள், சமயம் சார்ந்த நம்பிக்கை போன்றவை) நீக்குவதற்கும் முயலும் உலகளாவிய நன்னெறியாகும். மெய்யியல் சார்ந்த இழநம்பிக்கைக்கு முன்னோடியான கருத்துகள் பழங்கால உரைகளான இழநம்பிக்கையின் உரையாடல் போன்றவற்றில் காணப்படுகின்றன. மேற்கத்திய மெய்யியலில், தத்துவார்த்த அல்லது இழநம்பிக்கையியல் என்பது தனித்த ஓரியல்பான இயக்கமல்ல, ஆனால், ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்ற ஒத்த சிந்தனையாளர்களின், ஒரே குடும்ப சாயலைக் கொண்ட குழுக்களாகும்.[2] தத்துவவியல் சார் இழநம்பிக்கைவாதிகள், மனிதனின் சுய விழிப்புணர்வை நேரத்துடன் கட்டுண்ட விழிப்புணர்வுடன் பிணைத்துப் பார்க்கிறார்கள். இது வெறும் உடல் ரீதியிலான வலியைக் காட்டிலும் அதிக துன்பங்களுக்கு இட்டுச் செல்கிறது. பல உயிரினங்கள் நிகழ்காலத்தில் வாழும் போது, மனித இனமும் இன்னும் சில விலங்கினங்களும் இறந்த காலம் மற்றும் எதிர்காலத்தில் ஆழ்ந்து கிடக்கிறார்கள். இதுவே மிக முக்கியமான வேறுபாடாக இருக்கின்றது. மனிதர்கள் தங்களுக்கு முடிவாக நிகழ்கின்ற தத்தமது விதியைப் பற்றிய முன்னறிவைக் கொண்டிருப்பதால், இந்த "பயங்கரம்" ஒவ்வொரு நொடியிலும் அவர்களின் வாழ்வின் நிலையற்ற தன்மையையும், அவ்வாறு நிகழும் மாற்றங்களைக் கட்டுப்படுத்த இயலாத தன்மையையும் நினைவூட்டுவதாக அமைகிறது.[3] வரலாற்று முன்னேற்றத்தின் தாக்கத்தின் காரணமாக மெய்யியல் சார் இழநம்பிக்கையியல் பார்வை சாதகமான சூழலைவிட எதிர்மறையான சூழ்நிலையாகவே இருக்கின்றது. விஞ்ஞானம் போன்ற சில பகுதிகள் "முன்னேற்றமடைகின்றன" என்பதைத் தத்துவார்த்த நம்பிக்கையற்றோர் மறுக்கவில்லை, ஆனால் இது மனித நிலைமையை ஒட்டுமொத்தமாக முன்னேற்றுவதற்கு வழிவகுத்தது என்பதை மறுக்கின்றனர். இந்தப் பொருளில், இழநம்பிக்கையாளர், வரலாற்றை முரண்பாடுகளைக் கொண்டுள்ளதாக கருதுகிறார்; வெளித்தோற்றத்தில் சிறப்பாக இருக்கும் போது, அது உண்மையில், முன்னேற்றமடையவில்லை, அல்லது மோசமாகிக் கொண்டுள்ளது என்பதே உண்மை.[4]