ஈதர்

(ஈத்தர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஈதர்கள் (Ethers) என்பவை ஈதர் என்றழைக்கப்படும் வேதி வினைக்குழுவைக் கொண்டுள்ள கரிமச் சேர்மங்களைக் குறிக்கின்றன. ஓர் ஆக்சிசன் அணு இரண்டு ஆல்க்கைல் அல்லது அரைல் குழுக்களுடன் இணைந்திருப்பதை ஈதர் குழு என்பர். R–O–R′ என்ற பொதுவாய்ப்பாட்டை ஓர் ஈதர் கொண்டிருக்கிறது. இங்கு இடம்பெற்றுள்ள R மற்றும் R′ என்பவை ஆல்க்கைல் அல்லது அரைல் குழுக்களைக் குறிக்கிறது. ஈதர்களை மேலும் இரண்டு வகைகளாகப் பிரிக்க இயலும். ஆக்சிசனின் இரண்டு பக்கமும் இடம்பெற்றுள்ள ஆல்க்கைல் குழுக்கள் ஒரே மாதிரியாக இருந்தால் அந்த ஈத்தரை எளிய ஈதர் அல்லது சீரான ஈதர் என்கிறார்கள், ஒருவேளை இவை வெவ்வேறு வகையான ஆல்க்கைல் குழுக்களாக இருந்தால் அந்த ஈத்தரை கலப்பு ஈதர் அல்லது சமச்சீரற்ற ஈதர் என்கிறார்கள்[1]. ஈதர்களுக்கு எளிய உதாரணமாக டை எத்தில் ஈதர் என்ற சேர்மத்தைக் கூறுவார்கள், இது ஒரு கரைப்பானாகவும் மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது. இதையே பொதுவாக ஈதர் (CH3–CH2–O–CH2–CH3). என்பார்கள். கரிம வேதியியலில் ஈதர்கள் பொதுவானவையாகும். அதிலும் குறிப்பாக உயிர் வேதியியலில் இவை பரவலாக எங்க்கும் நிறைந்திருக்கின்றன. கார்போவைதரேட்டுகளிலும் லிக்னின் எனப்படும் கரிம பலபடிகளிலும் ஈதர்கள் இணைப்புகளாக இருக்கின்றன.

ஈதர்களின் பொதுக் கட்டமைப்பு. R மற்றும் R' என்பவை ஏதாவதொரு ஆல்க்கைல் அல்லது அரைல் குழுவைக் குறிக்கின்றது.

கட்டமைப்பும் பிணைப்பும்

தொகு

ஈதரின் கட்டமைப்பில் C–O–C இணைப்புகள் காணப்படும். இதன் பிணைப்புக் கோணம் 110° ஆகும். C–O பிணைப்புகளுக்கு இடையில் உள்ள இடைவெளி 140 பைக்கோ மீட்டர் ஆகும். C–O பிணைப்பின் சுழற்சிக்கு எதிரான தடை குறைவு. ஈதர்களில் உள்ள ஆக்சிசன், ஆல்ககால், மற்றும் தண்ணீர் ஆகியவற்றிலுள்ள பிணைப்புகள் ஒரே மாதிரியானவையாகும். இனைதிறன் பிணைப்புக் கொள்கையின் படி ஆக்சிசனில் தோன்றும் கலப்பினம் sp3 ஆகும். கார்பனைக் காட்டிலும் ஆக்சிசன் அதிக மின்னெதிர் தன்மையைக் கொண்டதாகும். இதனால் ஈதர்களுக்கான ஆல்பா ஐதரசன்கள் எளிய ஐதரோ கார்பன்களைக் காட்டிலும் அமிலத்தன்மை மிக்கவையாக உள்ளன. மேலும் இவை கீட்டோன்கள் மற்றும் ஆல்டிகைடுகள் போன்ற கார்பனைல் குழுக்களுக்கான ஆல்பா ஐதரசன்களைக் காட்டிலும் மிகக் குறைவான அமிலத்தன்மையையும் கொண்டவையாகவும் இவை காணப்படுகின்றன. R மற்றும் R′ நிலைகளில் இடம்பெற்றுள்ள குழுக்களின் அடிப்படையில் ஈதர்கள் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன: 1. எளிய ஈதர்கள் சமச்சீர் ஈதர்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. உதாரணம் டை எத்தில் ஈதர், டை மெத்தில் ஈதர்.

2. கலப்பு ஈதர்கள் அல்லது சமச்சீரற்ற ஈதர்கள்

பெயரிடல்

தொகு

ஐயூபிஏசி முறை பெயரிடலில் ஈதர்கள் ஆல்காக்சி ஆல்க்கேன்கள் என்ற பொதுவாய்ப்பாட்டைப் பயன்படுத்தி பெயரிடப்படுகின்றன. உதாரணமாக CH3–CH2–O–CH3 என்ற ஈதர் மெத்தாக்சியீத்தேன் என பெயரிடப்படுகிறது. ஒரு சிக்கலான மூலக்கூறின் பகுதியாக ஈதர் இருக்குமேயானால் அதை அந்த பதிலீட்டினுடைய ஆல்காக்சியாக அழைப்பார்கள். எனவே –OCH3 என்ற குழு மெத்தாக்சி என்று கருதப்படுகிறது. எளிய ஆல்க்கைல் தனி உறுப்பு முதலில் எழுதப்படுகிறது. எனவே CH3–O–CH2CH3 சேர்மத்தை மெத்தாக்சி(CH3O)ஈத்தேன்(CH2CH3) என்ற பெயரால் அழைக்கிறார்கள். எளிய ஈதர்களுக்குப் பெயரிடுகையில் பெரும்பாலும் ஐயூபிஏசி முறை பெயரிடல் பின்பற்றப்படுவதில்லை. பாரம்பரியமாக அவை கலந்து இடம்பெற்றுள்ள இரண்டு பதிலீடுகளைச் சொல்லி அதைத் தொடர்ந்து ஈதர் என்ற சொல்லைச் சேர்த்து அழைக்கப்பட்டு வந்தன. எத்தில் மெத்தில் ஈதர் (CH3OC2H5), டைபீனைல் ஈதர் (C6H5OC6H5) என்பன உதாரணங்களாகும். மற்ற கரிமச் சேர்மங்களின் பெயர்களைப் பொறுத்த வரையில், பொதுவான ஈதர்களின் பெயர் ஐயூபிஏசி பெயரிடலுக்கு முன்னர் அழைக்கப்படு வந்த பெயர்களை முறைப்படுத்தி அழைக்கப்படுகிறது. டை எத்தில் ஈதர் எளிமையாக ஈதர் என்று அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் அது விட்ரியாலின் இனிப்பு எண்ணெய் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. மெத்தில் பீனைல் ஈதர் அதேபோல அனிசோல் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அனிசு எனப்படும் சோம்பு விதைகளில் காணப்பட்டதால் அதை அனிசோல் என்று அழைத்தார்கள். பியூரான்கள் அரோமாட்டிக் ஈதர்கள் என்ரு வகைப்படுத்தப்படுகின்றன. அசிட்டால்கள் மற்றொரு வகையான ஈதர்களாகும். இவற்றின் பண்புகளும் வரையறுக்கப்பட்டுள்ளன.

பாலி ஈதர்கள்

தொகு

ஒன்றுக்கு மேற்பட்ட ஈதர் குழுக்களைக் கொண்டுள்ள ஈதர்கள் பாலி ஈதர்கள் அல்லது பல்லீத்தர்கள் எனப்படுகின்றன. கிரீடம் போன்ற தோற்றத்தைக் கொண்ட வளைய பல்லீத்தர்கள் எளிய பல்லீத்தர்களுக்கு உதாரணமாகும். சிலவகை நச்சுகள் மிகப்பெரிய பல்லீத்தர்கள் அல்லது ஏணி பல்லீத்தர்கள் எனப்படுகின்றன. பல்லீத்தர்கள் பொதுவாக பலபடிகள் எனப்படுகின்றன. அவற்றின் பிரதானமான சங்கிலியில் ஈதர் வினைக்குழுவை அவை பெற்றிருக்கும். குறைவு முதல் நடுத்தர மோலார் நிறை கொண்ட பலபடிகளுக்கு கிளைக்கால் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

தொடர்புடைய சேர்மங்கள்

தொகு

C–O–C இணைப்புகள் கொண்ட பல வகையான சேர்மங்கள் ஈதர்கள் என வகைப்படுத்தப்படுவதில்லை. எசுத்தர்கள் (R–C(=O)–O–R′) , எமி அசிட்டால்கள் (R–CH(–OH)–O–R′), கார்பாக்சிலிக் அமில டை ஐதரைடுகள் (RC(=O)–O–C(=O)R′) போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

இயற்பியல் பண்புகள்

தொகு

ஈதர் மூலக்கூறுகள் தங்களுக்குள் கூடி ஐதரசன் பிணைப்பை உண்டாக்குவதில்லை. இதனால் இவற்றுடன் தொடர்புடைய ஆல்ககால்களைக் காட்டிலும் குறைவான கொதினிலையைக் கொண்டுள்ளன. ஈதர்கள் மற்றும் அவற்றின் சமபகுதி சேர்மங்களான ஆல்ககால்களின் கொதிநிலைகளுக்கு இடையிலான வேறுபாடுகள் கார்பன் சங்கிலிகளின் நீளம் அதிகரிக்க அதிகரிக்க குறைகிறது. விரிவடைந்த கார்பன் சங்கிலியின் கார்பனில் இடம்பெற்றுள்ள ஐதரசன் பிணைப்பினால் வண்டர் வால் விசையின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது இதற்கு காரணமாகும். ஈதர்கள் இலேசான் முனைவுத்தன்மை கொண்டவையாக உள்ளன. C–O–C பிணைப்பின் பிணைப்புக் கோணம் 110° ஆகும். C–O இருமுனையிகள் இதனால் இரத்து செய்யப்படுவதில்லை.

ஆல்க்கீன்களைக் காட்டிலும் ஈதர்கள் அதிக முனைவுத் தன்மையும், ஆல்ககால்கள், எசுத்தர்கள் அல்லது அமைடுகளைக் காட்டிலும் குறைவான முனைவுத் தன்மையும் கொண்டவையாக உள்ளன, ஆக்சிசன் அணுக்களின் மீதுள்ள இரு தனி இணை எலக்ட்ரான்கள் நீர் மூலக்கூறுகளுடன் ஐதரசன் பிணைப்பை உருவாக்குகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "ethers". Compendium of Chemical Terminology Internet edition.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈதர்&oldid=3969991" இலிருந்து மீள்விக்கப்பட்டது