உடைக்கும் சில்லு

உடைக்கும் சில்லு (Breaking Wheel) என்பது, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களைச் சித்திரவதை செய்து கொல்வதற்கான சில்லு வடிவம் கொண்ட ஒரு கருவி ஆகும். தண்டனை பெற்றவர்களை இச்சில்லில் கட்டி பரத்தாலான கோல்களால் அடித்துக் கொல்வர். புனித கதரீன் இதிலேயே உயிர்த்தியாகம் செய்தமையால் இதைக் கதரீன் சில்லு எனவும் அழைப்பதுண்டு. ஐரோப்பாவில் மத்திய காலத்திலும், நவீன காலத் தொடக்கத்திலும் இது பயன்பாட்டில் இருந்தது. 19 ஆம் நூற்றாண்டு வரை இந்த வழக்கம் நீடித்தது.[1][2][3]

உடைக்கும் சில்லு
நவீன காலத் தொடக்கத்தில், உடைக்கும் சில்லைப் பயன்படுத்தி பீட்டர் இசுட்டம்பு என்பவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக் காட்சி.

அமைப்பும் பயன்பாடும்

தொகு

இது பல ஆரைக் கால்களைக் கொண்ட பெரிய வண்டிச் சில்லை ஒத்தது. சில சமயங்களில் தண்டனை விதிக்கப்பட்டவரைச் சில்லில் கட்டி மரக்கோல்களால் அல்லது நீளமான இரும்புக் கம்பிகளால் அடிப்பர். இதற்கு மாற்றாகச் சில வேளைகளில் தண்டனை பெற்றவரை இரண்டு மரவளைகளை "X" வடிவில் பொருத்திய "புனித ஆன்ட்ரூவின் சிலுவை"யில் கட்டி அடித்தபின் சிதைந்த உடலைச் சில்லில் கட்டிக் காட்சிக்கு வைப்பர். சில மரண தண்டனைகளின் போது தண்டனைக்கு உள்ளாகுபவர்களின் கால் கைகளை மரக்குற்றிகளில் உயர்த்தி வைத்தபின்னர் அவை முறியும்படி அவற்றின் மீது சில்லால் அடிப்பதும் உண்டு.

பிரான்சில், தண்டனை பெற்றவரை வண்டிச் சில்லில், கால் கைகள் சில்லின் ஆரைக்கால்களின் மீது பொருந்துமாறு வைத்து வண்டிச் சில்லை மெதுவாகச் சுழல விடுவர். பின்னர், பெரிய சம்மட்டிகள் அல்லது இரும்புக் கோல்களைப் பயன்படுத்தி எலும்புகள் முறியுமாறு செய்வர். இது ஒவ்வொரு காலுக்கும் கைக்கும் பல தடவைகள் திருப்பித் திருப்பிச் செய்யப்படும். சில வேளைகளில் தண்டனை பெற்றவரின் மார்பிலும், வயிற்றிலும் இறக்கும்வரை அடிக்குமாறு பணிப்பதும் உண்டு. இது "கருணை அடி" எனப்படும். இந்த அடி இல்லாவிட்டால் தண்டனைக்கு உள்ளானவர் இரத்தப் போக்காலும், தாகத்தாலும் இறக்கும்வரை பல மணி நேரங்கள் அல்லது பல நாட்கள் கூட உயிருடன் இருந்து வருந்தவேண்டி இருக்கும். சில தருணங்களில் சிறப்புக் கருணையின் பேரால் இரண்டு மூன்று அடிகளுக்குப் பின்னர் கழுத்தை இறுக்கிக் கொல்லுமாறு பணிப்பதும் உண்டு. கை கால்கள் உடைந்து குற்றுயிராகக் கிடக்கும் உடல்களின் கால் கைகளைச் சில்லின் ஆரைக் கால்களிடையே பின்னி, உடலைப் பறவைகள் தின்பதற்கு ஏதுவாக, அச் சில்லை உயரமான கம்பத்தில் ஏற்றிவிடுவர்.

புனித ரோமப் பேரரசில், கொடுமையான கொலைக் குற்றம் செய்தவர்களுக்கே "உடைக்கும் சில்லில்" தண்டனை வழங்கப்பட்டது. குற்றம் மிகக் கடுமையாக இல்லாவிட்டால் "மேலிருந்து கீழ்" முறையில் அடிக்குமாறு பணிக்கப்பட்டது. இதன்படி கழுத்தில் அடிக்கத்தொடங்குவர். இதனால் முதல் அடியிலேயே இறப்பு நிகழும். கடுமையான குற்றங்களுக்குக் "கீழிருந்து மேல்" முறையில் அடிக்குமாறு பணிக்கப்படும். இதன்படி அடி காலில் இருந்து தொடங்கும். எவ்வாறு, எத்தனை அடிகள் அடிக்கவேண்டும் என்பதைத் தீர்ப்பிலேயே குறிப்பிட்டிருப்பர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Althoff, Gerd; Goetz, Hans-Werner; Schubert, Ernst (1998). Menschen im Schatten der Kathedrale: Neuigkeiten aus dem Mittelalter [People in the shadow of the cathedral: News from the Middle Ages] (in German). Darmstadt: Wissenschaftliche Buchgesellschaft. p. 332. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783534142217.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. Schild, Wolfgang (1997). Die Geschichte der Gerichtsbarkeit: vom Gottesurteil bis zum Beginn der modernen Rechtsprechung; 1000 Jahre Grausamkeit; Hintergründe, Urteile, Aberglaube, Hexen, Folter, Tod [The history of the judicature: from the judgment of God to the beginning of modern jurisprudence; 1000 years of cruelty; Backgrounds, judgments, superstition, witches, torture, death] (in German). Hamburg: Nikol Verlagsgesellschaft mbH. p. 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783930656745.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. Sporschil, Johann (1847). Geschichte des Entstehens: des Wachsthums und der Grösse der österreichischen Monarchie. Vol. 2. Leipzig: Oscar Banckwitz. pp. 162–163.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடைக்கும்_சில்லு&oldid=4164054" இலிருந்து மீள்விக்கப்பட்டது