உடை (மரம்)

தாவர இனம்

உடை, ஒடை, குடைவேலம் அல்லது குடை மரம் (umbrella thorn [1]) என்பது ஒருவகை மர மாகும். இதன் தாவரவியல் பெயர் Acacia planifrons, என்பது ஆகும். இது அக்கேசியா இன, பபேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம் ஆகும். இது இந்தியா மற்றும் இலங்கையை தாயகமாக கொண்டது.

சங்க இலக்கியமான புறநானூற்றுப் பாடல்களில் காணப்படும் உடை என்னும் இச் சிறுமரத்தைக் குடை மரம் என்பர். இது வேலமரத்தின் இனத்தைச் சார்ந்தது. இதன் இலைகள் மிக மிகச் சிறிய சிற்றிலைகள் ஆகும். இம்மரத்தின் கிளைகளில் நீண்ட வலிய முட்கள் உடையதாக இருக்கும்.

விளக்கம் தொகு

உடை மராமானது சுமார் ஏழு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய முள் புதர் தாவரமாகும்.[2] இது ஒரு சிறு மரமாகும். இது குடைபோலக் கவிழ்ந்து கிளை பரப்பித் தழைத்த உச்சியைக் கொண்டது. இந்த மரத்தின் பட்டைகள் சாம்பல் மற்றும் பழுப்பு நிற அடையாளங்களுடன் தடிமனாக இருக்கும். இதன் இலைகள் கூட்டிலைகளாகும். அவை இரட்டைச் சிறகுகளாக, எதிரெதிராக இருக்கும். கூட்டிலைகள் ஒரு அங்குலத்துக்கும் குறைவான நீளமுடையன. சிற்றிலைகளானது (.06×.01) அங்குளம் என மிகச்சிறியவை. இலைச்செதில்கள் இரண்டும் இரு நீளமான வலிய முட்களாக மாறியிருக்கும். இலைகளின் விளிம்புகள் மழுங்கிய விளிம்புகளாக இருக்கும். இதன் மலர்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் காய்கள் இருபுற வெடி கனிகளாகும்.[3]

இலக்கியங்களில் தொகு

இத்தாவரமானது சங்க இலக்கியங்களில் உடை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உடை என்னும் இந்த சிறுமரம். கிளைகளில் உள்ள இலைக் கணுவில் எல்லாம் நீண்ட இரு முட்கள் கொண்டதாக இருக்கும். இதன் இலை மிகச் சிறியது; இதன் முள்ளைச் 'சுரையுடை வால்முள்' என்று கூறுவர். இந்த முள்ளை ஊகம்புல்லின் நுனியில் கோத்து அதை அம்பு ஆக்கி அதனை வில்லில் பூட்டிக் குறவர் குடிச் சிறுவர் எலியை எய்வர் என்று கூறுவர் ஆலத்துர்கிழார்.

சிறியிலை உடையின் சுரையுடை வால்முள்
ஊக நுண்கோல் செறித்த அம்பின் -புறநானூறு. 324:4-5

'இருங்கடல் உடுத்த இப்பெரிய மாநிலத்தின் நடுவே, உடையினது சிறிய இலைகூடப் பிறர்க்கு உரித்தாதல் இன்றித் தாமே ஆண்ட மன்னர்கள் இடு திரை மணலினும் பலர்’ என்று சிறுவெண்தேரையார் பாடுகின்றார்.

இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
உடையிலை நடுவனது இடைபிறர்க்கு இன்றி
தாமே ஆண்ட ஏமங் காவலர்
இடுதிரை மணலினும் பலரே -புறநானூறு. 36 3:1-4

இதன் இலை கூட்டிலை ஆகும். சிற்றிலைகள் மிகச் சிறியவை. இது ஒருவகை வேலமரமாகும் என்று பிங்கல நிகண்டு கூறும்; இம் மரம் சிறு குடைபோலப் பரவிக் கிளைத்துத் தழைத்திருக்கும். ஆதலின், இதனைக் குடை வேல மரமென்றனர் போலும்.[4]

தாவர அறிவியல் தொகு

தாவர இயல் வகை

பூக்கும் இரு வித்திலைத் தாவரம்

தாவரத் தொகுதி

காலிசிபுளோரே (Calyciflorae)

தாவரக் குடும்பம்

லெகுமினேசி (Legminosae)

தாவரத் துணைக் குடும்பம்

மைமோசாய்டியே (Mimosodeae)

தாவரப் பேரினப் பெயர்

அக்கேசியா (Acacia)

தாவரச் சிற்றிரினப் பெயர்

பிளானிபிரான்ஸ் (Plaifrons)

சங்க இலக்கியப் பெயர்

உடை

உலக வழக்குப் பெயர்

'ஒடை' என்பார் காம்பிள்

பிற்கால இலக்கியப் பெயர்

குடைவேலம்

ஆங்கிலப் பெயர்

பாபுல் (Babul) (Umbrella-thornbabul)

தாவர இயல்பு

சிறு மரம், குடைபோலக் கவிழ்ந்து கிளை பரப்பித் தழைத்த முடியுடையது:

இலை

கூட்டிலை, ஒரு அங்குளத்துக்கும் குறைவான நீளமுடையது; சிற்றிலைகள் (.06×.01) அங்குளம்-மிகச்சிறியவை. இலைச்செதில்கள் இரண்டும் இரு நீளமான வலிய முட்களாக மாறியிருக்கும்.

குறிப்புகள் தொகு

  1. "ILDIS LegumeWeb (version 10)".
  2. "Multipurpose Tree Seeds : Acacia planifrons". Archived from the original on 2019-10-20. பார்க்கப்பட்ட நாள் 2019-10-14.
  3. "Acacia planifrons Wight & Arn".
  4. சங்க இலக்கியத் தாவரங்கள் (நூல்), 311-312, டாக்டர் கு. சீநிவாசன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடை_(மரம்)&oldid=3878597" இலிருந்து மீள்விக்கப்பட்டது