உத்தம அளவு மக்கள் தொகை கோட்பாடு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உத்தம அளவுக்கோட்பாடு: மக்கட் தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் அதன் விளைவாக தலா வருமானத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கும்மிடையே உள்ளத் தொடர்பினை உத்தம அளவுக்கோட்பாடு வெளிப்படுத்துகிறது. நவீன பொருளியலறிஞர்களான சிட்விக், கேனன்,டால்டன் மற்றும் ராபின்ஸ் போன்றவர்கள் இக்கோட்பாட்டை ஆதரித்தார்கள்.
வரைவிலக்கணமும் பொருளும்: இயற்கை வளங்கள்,மூலதனப் பொருட்களினிருப்பு,மற்றும் தொழில் நுட்ப நிலை ஆகியவற்றிற்கேற்ற சிறந்த மக்கட் தொகையே உத்தம அளவு மக்கள் தொகை எனலாம். இந்த மக்கட்தொகை அளவில் தலா உற்பத்தி (உண்மையான தலா வருமானம்) உச்சத்தில் இருக்கும்.
வேறு வகையாகக் கூறினால், 'தலா உற்பத்தி உச்சத்தில் இருக்கும் நிலையில் உள்ள மக்கட் தொகையே உத்தம அளவு மக்கள் தொகை எனலாம். உத்தம அளவைவிட மக்கட்தொகை குறைவாக இருப்பின் அது மக்கள் தொகை குறைவாக உள்ள நாடு எனவும்,அதிகமாக இருந்தால், அது மிகை மக்கள் தொகை கொண்ட நாடு எனவும் அழைக்கலாம்.
விளக்கம்: ஒரு நாட்டில் இயற்கை வளங்களும், மூலதன கருவிகளும், தொழில் நுட்பநிலை ஆகியவை மாறாமல் நிலையாக இருப்பதாகக் கொள்வோம். இவ்வளங்களோடு ஒப்பிட மக்கள் தொகை சிறியதாக இருக்கும் என்போம். மக்கட்தொகை அதிகரிக்குமானால், நாட்டில் தொழிலாளர்களும் அதிகரிப்பர்.மேற்கூறிய நிலையான வளங்களுடன் கூடுதலான தொழிலாளர்கள் சேர தலா உற்பத்தி அதிகரிக்கும். ஆரம்ப கட்டத்தில், சிறப்பு தேர்ச்சி காரணமாகவும், இயற்கை வளங்களை செம்மையாகப் பயன்படுத்துவதாலும் தலா உற்பத்தி வேகமாக அதிகரிக்கும். தொடர்ந்து மக்கள் தொகை அதிகரித்தால், அனைத்து வளங்களும் முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு நிலை உருவாகும். அப்பொழுது தலா வருமானம் உச்சத்தில் இருக்கும். இந்த அளவினையே உத்தம அளவு மக்கட்தொகை என்கிறோம்.
இதைவிட அதிகமாக மக்கட்த்தொகை அதிகரித்தால் அந்நாடு மிகை மக்கட் தொகை கொண்ட நாடாகக் கருதப்படும்.மேலும் தலா உற்பத்தி குறையத் தொடங்கும். வளங்கலோடு ஒப்பிட அதிக தொழிலாளர்கள் இருப்பது தெரியும். கொடுக்கப்பட்ட வளங்கள் மற்றும் மூலதனப் பொருட்கள் அதிக தொழிலாளர்களிடையே பகிர்ந்து கொள்ளும் போது தனியொருவர்க்கு கிடைக்கும் மூலப்பொருளின் அளவு குறையும். ஆகவே சராசரி உற்பத்தி குறையும். தலா உற்பத்தியின் அளவு குறையும்பொழுது, தலா வருமானம், மக்களின் வாழ்க்கைத் தரம் முதலியனவும் குறையும். மிகை மக்கட்தொகையானது, குறைவான வாழ்க்கைத் தரம், மறைமுக வேலையின்மை, உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றிற்கு வழி வகுக்கும். குறைவான மக்கட் தொகை, மிகை மக்கட் தொகை இரண்டுமே குறைபாடுகளைக் கொண்டாதாகும். தலா உற்பத்தி உச்ச நிலையில் உள்ள உத்தம அளவு மக்கட்தொகையே ஒரு நாட்டிற்கு மிகச் சிறந்த மக்கட்தொகையாகும்.