உத்தரகாண்டம் (ஒட்டக்கூத்தர்)

உத்தரகாண்டம் என்பது கம்ப இராமாயணத்தின் இறுதிக் காண்டமாக ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டது.[1]

கம்பர் தம் இராமாயணத்தைப் பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் முடிய உள்ள ஆறு காண்டங்களில் நிறைவு செய்துள்ளார். யுத்த காண்டத்தின் நிறைவில், விடைகொடுத்த படலம் என்றொரு படலம் உள்ளது. அதில் சுக்ரீவன், அனுமன், வீடணன் முதலியோர்க்கு பரிசில்கள் கொடுத்து இராமன் விடை தந்து அனுப்பிய செய்தி கூறப்பட்டுள்ளது.

பரதனை யினைய கோவைச் சத்துருக் கனனைப் பண்டை விரதமா தவனைத் தாயர் மூவர் மிரிலைப் பொன்னை
வரதனை வலங்கொண் டேத்தி வணங்கினர் விடையுங் கொண்டெ
சரதமா நெறியும் வல்லோர் தத்தம் பதியைச் சார்ந்தார்

என்ற பாடல் மூலம் அறியலாம். அதன் பின்பு இராமர் பல்லாண்டு நெறி தவறாமல் ஆட்சி செய்ததை விளக்கி, இராமாயணத்தைக் கம்பர் நிறைவு செய்து விட்டார். அதன்பின் நிகழ்வுகளுக்கு ஒட்டக் கூத்தர் வடிவம் கொடுத்துள்ளார்.

ஒட்டக்கூத்தர்

தொகு

கலைமகளின் அருள் வாய்த்தமையால், அவர் உத்தரகாண்டத்தை இயற்றினார் என்று கூறுவர். இவருக்கு வாணிதாசன் என்ற பெயருண்டு. அது சோழ மண்டலச் சதகத்தில் சொல்லப்படுகின்றது. இவர் இயற்றிய பாடல்களின் மாண்பைக் கண்டு சோழன் இவரைத் தம் அவைக் களப் புலவராக ஆக்கிக் கொண்டார். இவர் தக்கயாகப் பரணி, மூவருலா ஆகிய நூல்களை இயற்றினார். உத்தர காண்டம் பதினேழு படலங்களைக் கொண்டது.

சிலப்பதிகாரம், அறம்பொருள் இன்பம் என்னும் முப்பொருளைக் கூறுகின்றது. ஆனால், வீடுபேற்றினை கூறவில்லை என்பர். அக்குறையை நீக்க சீத்தலைச் சாத்தனார் வீட்டின் பத்தைக் கூற மணிமேகலையெனும் காப்பியத்தைப் படைத்து நிறைவு செய்தார். ஆதலால் இவ்விருநூல்களை இணைத்து இரட்டைக்காப்பியம் என்பர். கம்பர் ஆறுகாண்டத்தைப் படைத்தார். அதன் பின் நிகழும் நிகழ்வுகளை ஒட்டக் கூத்தர் பதினேழு படலங்களில் நிறைவு செய்துள்ளார். இவ்விரண்டும் இணைந்த நிலையில், இராமனின் மாண்புகள் நிறைவுறுகின்றன. ஒரு காப்பியத்தோடு இன்னொரு காப்பியம் ஒன்றி இணைந்த நிலையில் தண்டியாரின் காப்பிய இலக்கணம் நிறைவுறுகிறது. ஆதலால் இவ்விரு நூல்களை இரட்டை இராமாயணக் காப்பியங்கள் எனலாம்.

இராமனது ஆட்சியின் மாண்பு, இராவணன் அடைந்த வீழ்ச்சியைப் பற்றிக் கூறுவதோடு, எத்தகைய பேராற்றல் படைத்தவனாய் இருந்தாலும் காமச் சேற்றில் வீழ்வானாயின் அவன் வீழ்ச்சி வல்லே அமைந்து விடும்.

எனைத்துணை யர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல் (திருக்குறள்.பா.144)
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாம் இல்லிறப்பான் பண் (திருக்குறள் பா.146)
எளிதென இல்லிறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்
விளியாது நற்கும் பழி (திருக்குறள்.பா.145)

மேற்கூறிய குறட்பாக்கள் இராவணனின் வாழ்வியலுக்குச் சான்றாகும்.

இராவணனின் இழிதகவு

தொகு

வேதவதி, தந்தையின் விருப்பத்தோடு திருமாலையே தன் கணவனாக எண்ணி உள்ளத்தால் தொழுது வணங்கித் தவஞ் செய்கிறாள். அவள் பேரழகைக் கண்ணுற்ற இராவணன் காமுற்றான். வேதவதி தன் நிலையை எடுத்தியம்பியும் இராவணன் கேளாமல் தன்னாற்றலை எடுத்துக்கூறித் தன்னை மணக்குமாறு கூறி அவள் கரத்தைப் பற்றினான். வெகுண்டெழுந்த வேதவதி “என் சொல்லை மீறி என் கையைத் தீண்டினாய் இனி, உனக்கும் இலங்கைக்கும் உறவினர்க்கும் கேடு உண்டாகத் தோன்றுவேன்“ என்று கூறித் தீயில் மூழ்கினாள். அவளே பின் சீதையாகப் பிறந்து இராமனை மணந்து, காட்டகம் புகுந்து இலங்கையில் சிறையிலிருந்து இராவணனும் குலமும் இலங்கையும் அழிவதற்குக் காரணமாகிறாள்.

சிலகாலம் சென்ற பின்பு, இராவணன் அளகாபுரிக்கு அருகில் சேனையோடு தங்கியிருக்கையில், அரம்பை தன் கணவன் நளகூபரனை நோக்கி அழகியல் அழைப்போடு சென்றாள். அவளைக் கண்ணுற்ற இராவணன் யார் நீ‘ என்கின்றான். அவள் தன் பெயரையும் தன் கணவன் பெயரையும் சொல்கின்றபோது அவளை அணையப் புகுகின்றான். அது போழ்து “நெறியற்ற செயலைச் செய்யாதீர் என்று தொழுது குபேரன் மகனாகிய நளகூபரன், உறவு முறையால் நின்மைந்தனே, ஆதலால் நீர் எனக்குக் குரு“, என்கிறாள். அச் சொற்கேளாமல் அவளை வலியப் போகவிடத்தினைத் துய்க்கின்றான்.

அவனை வெறுத்து அவள், இனி இவ்வுலகில் மாதர்தம் சிந்தை உடன்பாடின்றி, எவரைத் தீண்டினாலும், அவர்தம் கற்புக் கனலால் வெந்து வீழ்வாய்,“ எனச் சபித்தாள். இந்நிலையைக் கணவன்பால் கூற அவன் வெகுண்டு, இனி இராவணன், “பிறன் மனைவியைத் தீண்டினால் அவன் பொன் முடிகளோடு தலையெல்லாம் பொடியாகி வீழ்க“, எனச் சபிக்கின்றார்.

வருணனோடு போர்புரிந்து வெற்றியுடன் இலங்கை நோக்கிச் செல்கையில், அந்தணர்-கன்னியர், அசுர மகளிர், கந்தருவப் பெண்டிர் முதலியோரைக் காண்கின்றான். அவர்களை அனைவரையும் தம்புட்பக விமானத்தில் ஏற்றிக் கொண்டு இலங்கையை நோக்கிச் சென்றான். அதுபொழுது அவர்கள் நடுங்குகின்றனர். எங்கள் புதல்வியரை நடுங்கச் செய்தமையால் இராவணன் “இலங்கை நகர் பாழாக முடியுடனே தலையற்று வீழ்க“ என்று பெற்றோர்கள் சபிக்கின்றார்கள்.

இம்மூவகை நிகழ்வுகள் இராவணன் வீழ்ச்சிக்கு அடித்தளமாயமைகின்றன.

இராமன் பாராட்டல்

தொகு

இராமன் சீதைபால் கொண்ட அன்பினைச் சித்திர கூட மலையில் உள்ள பல்வகையான இயற்கைக் காட்சிகளைச் சீதைக்குக் காட்டும்போது ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு வகையாகச் சீதையை விளித்துத் தன் அன்பைப் புலப்படுத்துகின்றான்.

“வாளும் வேலும் விட்டாயின அணையகண் மயிலே!”
குருதி வாளெனச் செவ்வரி பரந்த கட்குயிலே!
உவரிவாயன்றிப் பாற்கடல் உதவிய அமுதே!
ஆடுகின்ற மாமயிலினும் அழகிய குயிலே!
வில்லி வாங்கியசீலை யெனப்பொலி நுதல்விளக்கே!
ஒருவில் பெண்மையென் றுரைக்கின்ற வுடலினுக்குயிரே!
நிலைந்த போதினும் அமுதுஒக்கும் நேரிழை
மடந்தை மார்களில் திலகமே!
தெரிவை மார்க்கொரு கட்டளையெனச் செய்ததிருவே

எனப் பலப்பட, சீதையின் உறுப்புக்களையும் பண்பு நலன்களையும் கற்பின் மாண்பினையும் விளக்கமாகக் கூறி மகிழ்கின்றான்.

சீதையின் மாண்பு

தொகு

அசோகவனத்தில் சீதை சிறையிருந்தாலும், மாசற்றவள் என்பதைத் தீப்புகுந்து காட்ட வேண்டும் என்று கூறியதும், அவ்வண்ணமே சீதை எரிபுகுந்து தூயவள் என்பதை நிலை நாட்டினாள். அதனால், இராமன், சீதையின் கற்பில் எள்ளளவும் ஐயமில்லாமல் சீதையை அரசியாகக் கொண்டு அயோத்தியை மாண்புற ஆட்சிபுரிகின்றான்.

சீதை வனம்புகல்

தொகு

மக்களுக்குச் சீதையின் பாலுள்ள கருத்து, மாறுபட்ட நிலையிலிருந்தது காமத்தினை நயந்து செய்யும் இராவணனது இலங்கையில் சிறையிருந்த சீதையை அயோத்தி அரசியாக அமர்த்தியது சற்றும் பொருத்தமாக இல்லை என்று கூறலாயினர். இம் மொழிகளைக் கேட்ட இராமன், தன் மனைவியைக் காட்டிலும் நாட்டு மக்களை உயிராக உன்னும் தன்மையினன். மக்களுக்காகவே மன்னவன், என்ற மாண்புறு சிந்தையோடு வாழும் இயல்பினன். இராமன், சீதையின்பால் எல்லையற்ற பேரன்பைக் கொண்டவன் இராமன் என்பதைச் சித்திர கூட மலையில், இயற்கைக் காட்சியைக் காண்கின்றபோது அவற்றினைச் சீதையோடு ஒப்பிட்டுப் பார்த்து மனமகிழ்ந்தவன். அத்தகையோன் இச்சொற்களைக் கேட்டதும் இலக்குவனனிடம் சீதையைக் காட்டகத்தே விட்டு விட்டு வருமாறு ஆணையிட்டான். உயிரினும் இனிய மனைவியை விட நாட்டு மக்களின் கருத்தையே உயரியதாகக் கொண்ட இராமனது, சிறப்பு மிகு கொள்கையை உலகிற்கு எடுத்துக் காட்டுவதுதான். உத்தரகாண்டத்தின் தனித்தன்மையாகும் என்பது ஒரு கருத்து. ராமாயணத்தில் அமைந்துள்ள ஆறுகாண்டங்களைவிட உத்தரகாண்டம் வேறுபட்ட, தனித்தன்மையுடையது. உத்தர காண்டத்தில் சொல்லப்படும் நிகழ்ச்சிகள் ஆறு காண்டங்களில் சொல்லப்படும் நிகழ்ச்சிகளுக்கு உரமூட்டுவனவாகவும் பெருமை சேர்ப்பனவாகவும் அமைந்துள்ளன. உலகியல் நிகழ்வுகளை மிகச் சிறப்பாக ஒட்டக்கூத்தர் சுட்டியுள்ளார். இந்நூலில் வருகின்ற செய்யுட்கள் இனிய இழுமென் ஓசையோடு இலங்கும். நன்னடை, உவமை, உருவகங்கள், தற்குறிப்பேற்றம், பிற அணிகள் ஆகியன நன்கமைந்துள்ளன. இதன் கண் அமைந்துள்ள செய்யுட்கள் பாவினத்தைச் சார்ந்தவையாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. இராமாயண உத்தரகாண்டம், பக்கம் 59