உம்மைத் தொகை
தமிழில் ஆறு தொகைநிலைத் தொடர்கள் உள்ளன. அவற்றில் ஒன்று உம்மைத்தொகை. இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் "உம்" என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகை எனப்படும். ஆறு தொகைநிலைத் தொடர்களில் இந்த உம்மைத்தொகை ஒன்று மட்டும் 'இருசொல் நடை' கொண்டது. [1] ஏனையவை 'ஒருசொல் நடை' கொண்டவை. [2] இருசொல் நடை என்பது விட்டிசைக்கும். ஒருசொல் நடை என்பது விட்டிசை இல்லாமல் ஒலிக்கப்படும்.
உம்மைத் தொகை என்பது அளவுப் பொருளில் இரண்டு சொற்கள் தொடர்ந்து வர அவற்றின் இடையிலும் இறுதியிலும் உம்மையாகிய உருபு மறைந்து நிற்பது உம்மைத் தொகை எனப்படும். அவ்வளவுகள் எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு ஆகும். [3]
எடுத்துக்காட்டு
தொகு- ஒன்றேகால் - எண்ணல் அளவை உம்மைத் தொகை
- கழஞ்சு கர்ணம் - எடுத்தல் அளவை உம்மைத் தொகை
- மரக்கால் படி - முகத்தல் அளவை உம்மைத் தொகை
- அடி அங்குலம் - நீட்டல் அளவை உம்மைத் தொகை
இவற்றை விரித்துக் கூறும் பொழுது, ஒன்றும் காலும், கழஞ்சும் கர்ணமும், மரக்காலும் படியும், அடியும் அங்குலமும் என விரியும்.
மற்ற தொகைநிலைத் தொடர்களில் காணப்படாத தனிச் சிறப்பு இவ்வும்மைத் தொகைக்கு உண்டு. மற்ற தொகைநிலைத் தொடர்களில் உருபு இரண்டு சொற்களுக்கு இடையில் மட்டுமே மறைந்து வரும். உம்மைத் தொகையில் இரண்டு சொற்களுக்கு இடையிலும் இரண்டாம் சொல்லின் இறுதியிலும் உம் என்னும் உருபு மறைந்து வருவதைக் காணலாம்.