உலக மண்வள நாள்

உலக மண்வள நாள் (World Soil Day) ஒவ்வோர் ஆண்டும் திசம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.[1] 2050 ஆம் ஆண்டிற்குள் உலகத்தின் மக்கள் தொகை ஆயிரம் கோடியை எட்டக்கூடும் என்பதால் அதற்கேற்றாற் போன்று உணவு உற்பத்தியையும் பெருக்க வேண்டும். இருக்கின்ற வளங்களையும் சேதாரமின்றிப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மண் வளம் குறித்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்நாள் மண் வளங்களை நிலையான முறையில் நிர்வகிப்பதைக் கருத்தில் கொள்ளுமாறு தனிநபர்களை அறிவுறுத்துகிறது. மண் சிதைவு, மண் அரிப்பு, கரிமப் பொருட்களின் இழப்பு மற்றும் மண் வளம் குறைதல் போன்ற குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிப்பது, ஆரோக்கியமான மண்ணின் மதிப்பை முன்னிலைப்படுத்துவது, மண் வளங்களின் நிலையான மேலாண்மையை மேம்படுத்துவது போன்றவை இந்நாள் கொண்டாடப்படுவதன் முக்கிய குறிக்கோள்களாகும்.[2]

வரலாறு தொகு

2002 ஆம் ஆண்டு முதல் உலக மண்வள நாள் அனுசரிப்பு தொடங்கியது. ஒவ்வோர் ஆண்டும் அதிகமான மக்கள் ஒன்றிணைந்து இக்கொண்டாட்டத்தை அர்த்தம் உள்ளதாக ஆக்குகிறார்கள்.[3] [4]2014 ஆம் ஆண்டில் 42 நிகழ்வுகள் நடைபெற்ற நிலை மாறி 2021 ஆம் ஆண்டில் 125 நாடுகளில் சுமார் 781 கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளன. உலக மண்வள நாளுக்கான ஆர்வம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.[5]

மண்ணின் முக்கியத்துவம் தொகு

ஓர் அங்குலம் கனமுடைய மண் உருவாக குறைந்தபட்சம் 500 ஆண்டுகள் ஆவதாகக் கணிக்கப் பட்டுள்ளது. ஒரு கைப்பிடி அளவுள்ள மண்ணில் 45 விழுக்காடு கனிமப்பொருட்களும், 25 விழுக்காடு நீர், 25 விழுக்காடு வளியும், 5 விழுக்காடு நுண்ணுயிர்களும் நிறைந்துள்ளன. மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் ஒரு கிராம் மண்ணில் 5 ஆயிரத்திலிருந்து 7 ஆயிரம் வரையிலான பாக்டீரியாக்களும், ஒரு ஏக்கர் மண்ணில் ஐந்திலிருந்து 10 டன் வரையிலான எண்ணிக்கையில் பல்வேறு வகையான உயிர்களும் வாழ்கின்றன. பயிர் நிலமென்றால் ஏக்கர் ஒன்றில் 1.4 டன் மண்புழுக்கள் வாழ்வதுடன், அப்புழுக்கள் ஆண்டொன்றுக்கு 15 டன் அளவிற்கு செறிவான மண்ணை உருவாக்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாவர இனங்களுக்குத் தேவையான நைட்ரசன், பாசுபரசு, சுண்ணாம்பு, இரும்பு, மக்னீசியம், துத்தநாகம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற கனிமச் சத்துக்கள் மண்ணில் நிறைந்துள்ளன. பொழிகின்ற மழைநீரை மண்ணுக்குள் ஈர்த்துக் கொள்ளவும், காற்றின் மூலமாகக் கிடைக்கும் நுண்ணுாட்டங்களைப் பெற்றுக் கொள்ளவும் மண்வளம் செறிந்த தன்மையில் இருக்க வேண்டும்.

தாவரங்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம் மண் நமது உயிர் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு கைப்பிடி மண்ணில், இந்த பூமியில் உள்ள மக்கள் தொகையை விட அதிக நுண்ணுயிர்கள் உள்ளன. இவற்றின் ஆற்றலால், இந்த மண்ணானது உயிர்ப்புடன் இருப்பதுடன், மற்ற உயிர்களையும் உயிர்வாழச் செய்து, வளர்த்து இந்த உலகத்தைப் பசுமையாக வைத்திருக்கிறது. முக்கிய ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்கிறது. மண்ணின் கரிம கார்பனைப் பாதுகாப்பதன் மூலம் அல்லது அதிகரிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தைக் குறைக்கிறது. உணவு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் அனைத்து தாவரங்களும் மண்ணில் வளரும், இது உணவு அமைப்புகளின் அடித்தளமாகவும் செயல்படுகிறது.

அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவளிப்பதற்குத் தேவையான விவசாய நிலம் நமக்கு கிடைக்காமல் குறைந்து வருகிறது. தேவையற்ற செயற்கை உரங்கள் என்ற பெயரில் இரசாயனப் பொருட்கள் கலப்பதால் மண்ணின் வளமான தன்மை மாறி, மண் உயிரிழந்து வருகிறது. மண்ணரிப்பு, வேதி உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு அதிகரிப்பு, தொழிற்சாலைக் கழிவுகள், கால்நடைகளின் அளவுக்கு மீறிய மேய்ச்சல், கடல்நீர் ஊடுருவல் போன்ற செயல்பாடுகளே மண் வளம் சீர்கேடு அடைவதற்கான காரணங்களாகும். தொழில்மயமாக்கலும் போதிய விவசாய நில மேலாண்மை இல்லாமலிருப்பதும் மண்ணின் தரத்தை குறைக்கும் முக்கிய காரணிகளாகும்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. "உலக மண்வள நாள்: `மௌன வசந்தம்' மனிதர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை என்ன?". ஆனந்த விகடன். https://www.vikatan.com/news/environment/lessons-which-we-should-learn-from-rachel-carson-s-silent-spring-book. பார்த்த நாள்: 6 December 2022. 
  2. "மண் வளத்தை பாதுகாப்பது அனைவரின் கடமை". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/environment/910119-protecting-soil-fertility-is-everyone-s-duty-today-is-world-soil-day.html. பார்த்த நாள்: 6 December 2022. 
  3. "உலக மண்வள நாள் விழா". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/State/world-sand-develpement-function-851768. பார்த்த நாள்: 6 December 2022. 
  4. "உலக மண்வள நாள் நிகழ்ச்சி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-12-06.
  5. "World Soil Day 2022: History, significance and theme of the day". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2022-12-06.
  6. "World Soil Day 2021: Aim, importance, history, theme, significance, quotes and messages". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_மண்வள_நாள்&oldid=3615183" இலிருந்து மீள்விக்கப்பட்டது