உலோக நாணயம்

நாணயம் என்பது அரசுகளால் வழங்கப்படும் ஒரு பண வடிவமாகும். வழக்கமாக உலோகங்களால் உருவாக்கப்படும் நாணயங்கள், தட்டை வடிவில் இருக்கும். நாணயங்களும் வங்கித்தாள்களும் சேர்ந்தே நவீன பண முறைமைகளை உருவாக்குகின்றன. பொதுவாக நாணயங்கள் குறைந்த பண மதிப்புடையவையாக இருக்கும். பெரும்பாலான பண முறைமைகளில், ஆகக் கூடிய மதிப்புடைய நாணயத்தின் மதிப்பு, ஆகக் குறைந்த மதிப்புடைய வங்கித் தாளின் மதிப்பை விட குறைவாகவே இருக்கும்.


வரலாறு

தொகு

நாணயவியல் (Numismatics) என்பது நாணயத்தின வரலாறு, சிறப்புகள்போன்ற வற்றை ஆராயும் அறிவுத்துறை ஆகும். இந்தத்துறை மேனாட்டில் பதினான்காம் நூற்றாண்டு காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது அன்று முதல் அறிஞர்களும், அரசாங்கமும் புராதன நாணயங்களைச் சேகரிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தன எனலாம். இது நாணயங்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு துணை புரிந்தன. இக்கால கட்டத்தில் உலகெங்கும் நடைபெறுகின்ற பொருட் காட்சிசாலைகளில் நாணயவியலுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளதையும் காண முடிகின்றது. இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் மாநகரிலுள்ள பண்டைய நாணயத் தொகுதியே உலகில் அதிகமானதும் சிறந்ததுமாகும். இந்தியாவிலுள்ள பொருட் காட்சிசாலைகளிலும் பண்டைய நாணயத் தொகுதிகள் உள்ளன. நாணயவியல் தொடர்பான பல சிறந்த நூல்களும் இதழ்களும் பிரசுரிக்கப்பட்டன. பல நாடுகளில் நாணயவியல் கழகங்களும் இயங்கி வருகின்ன.

நாணயங்கள் மேனாட்டிலும் கீழ் நாட்டிலும் இ.மு. எட்டாம் நூற்றாண்டில் தோன்றி உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் பரவியுள்ளன. நாணயங்களை விரும்புவதும், பாதுகாப்பதும் பண்டைக்காலம் முதல் இன்று வரை மக்களிடையே தென்படுகின்ற இயல்பு நிலையாகும். புராதன காலத்தில் பணத்தைச் சேமித்து வைக்க வங்கிகள் இருக்கவில்லை.அதனால் அக்காலத்து மக்கள் நாணயங்களை கலங்களில் அல்லது பைகளில் ஒன்று சேர்த்து பூமியில் புதைத்து வைத்தனர். தொல்பொருளியலாளர் பல்வேறு இடங்களில் தோண்டும் போது பண்டைய நாணயத் தொகுதிகளைக் கண்டெடுத்துள்ளனர்.

நாணயங்களால் அறியப்படுபவை

தொகு

தொல்பொருள் ஆராய்ச்சிக்கு புராதன நாணயங்கள் கைகொடுத்து உதவுகின்றன. புராதன சின்னங்களுள் நாணயங்கள் உன்னத இடத்தை வகிக்கின்றன. தென் இந்தியாவில் ரோமானிய நாணயங்கள் காணப்படுவதினால் அந்நாட்டுடன் ரோமானியர் வணிகம் செய்தனர் என்பது உறுதியாகின்றது. அரேபியர் ஸ்காண்டி நேவியாவுடன் வணிகம் மேற்கொண்டனர் என்பது அந்நாட்டில் ஏராளமாகக் காணப்படும் அரேபிய நாணயங்களைக் கொண்டு அறிய முடிகின்றது.

நாணயங்களில் தென்படுகின்ற அரசர்களுடைய உருவங்கள் ஆட்சியையும், மதத்தைப் பற்றியும் அறிய உதவுகின்றன. ஒரு நாட்டின் நாணயங்களில் பொறித்துள்ள தேவதைகளின் உருவங்கள் அந்நாட்டு மக்களின் புராண இதி காசச் செய்திகளைக் கூட அறிவிக்கின்றன. ஒரு நாட்டின் சிற்பக்கலை, ஓவியக் கலைகளின் வளர்ச்சியையும் அவற்றின் பல்வேறு காலங்களையும் அந்நாட்டின் நாணயங்கள் வாயிலாக அறிய வாய்ப்பு உண்டு.

நாணய வணிகம்

தொகு

பண்டைக்காலத்தில் வாழ்ந்த மக்கள் தொடக்கத்தில் நாணயங்களைக் கொண்டு வணிகம் மேற்கொள்ளவில்லை.அக்கால வாணிகத்தின் அடைப்படை பண்டமாற்று ஆகும். ஆனால் இம்முறையில் குறைபாடுகள் காணப்பட்டன. ஆதலால் மக்கள் பண்ட மாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். அதற்கு மாறாக வேறு வழிமுறையை நாட்டினர். அந்தப் பொருள் கெட்டுப்போகாததாகவும் எங்கும் கொண்டு போகக் கூடியதாகவும் எல்லோருக்கும் ஒரு குறிப்பிட்ட மதிப்புடையதாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும் எனக் கருதினர். இத்தகைய பொருள்தான் நாணயம் ஆகும். பண்டைய நாணயங்கள் ஆரம்பத்தில் செம்பு போன்ற சாதாரண உலோகங்களில் தயாரிக்கப்பட்டன. அவை மலிவாக எளிதில் பெறக்கூடியனவாதலினால் தங்கம், வெள்ளி போன்ற அரிய உலோகங்களிலும் வடிவமைத்தனர்.

நாணயங்கள் தொடக்கத்தில் சில குறிப்பிட்ட உருவங்களைக் கொண்டிருந்தன. உலோகத்துண்டுகளை எடைபோடுவதற்குத் தராசு (BALANCE) கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் நாணயங்களும் குறிப்பிட்ட நிறைவுடையனவாக மாறின. இந்தியாவில் முதன் முதல் உருவான நாணயங்களில் மன்னர்களின் தோற்றம் பொறிக்கப்படவில்லை. சில குறிகளைக் காண முடிகின்றது. ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் மைசூர் பகுதியை குறுகிய காலமே ஆண்டனர். அவர்கள் வெளியிட்ட நாணயங்கள் பல தரப்பட்டனவாகவும் கலை வேலைப்பாடுள்ளவனாகவும் திகழ்ந்தன.

திப்பு சுல்தான் முதலில் வராகன்களையும் பணங்களையும் வெளியிட்டார். பின்னர் தங்கத்தில் அரை மொகராக்களும், வெள்ளியில் ஒன்று, அரை, கால், அரைக்கால், காலரைக்கால் பெறுமதியுள்ள நாணங்களையும் செம்பில் நாற்பது, இருபது, பத்து, ஐந்து, இண்டரைக் காசுகளும் வெளியிட்டார். திப்பு தம் செப்பு நாணயங்களில்யானைச் சின்னம் பொறித்தார். இவருடைய நாணயங்களில் இருதசாப்தங்கள் காணப்பட்டன.

இந்தோ ஐரோப்ப்பிய நாணயங்கள்

தொகு

இந்தோ ஐரோப்பிய நாணயங்கள் பற்றி சிறிது ஆராய்வோம். அயல் நாட்டினர் இந்தியாவுடன் குறிப்பாக தென்னிந்தியாவுடன் வாணிகத் தொடர்பு பன்னெடுங்காலமாகவே நடைபெற்று வந்தது என்றும் கண்டறியப்பட்டது.

ரோமானியர்

தொகு

இரண்டாயிரம் ஆண்களுக்கு முன்பே ரோமானியர் தமிழ் மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டிய வேந்தர்களுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்ததாக தமிழ் இலக்கியம் கூறுகின்றது. ரோமானியர்களுடைய பொன் வெள்ளி நாணயங்கள் அதிக அளவில் தென்னிந்திய மாவட்டங்களில் கிடைத்த போதிலும் ரோமானியர் நாணயச் சாலைகளை எங்கு அமைந்தனர் என்பது புதிராகவே உள்ளது.

போர்த்துகீசியர்கள்

தொகு

பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் இந்தியாவை சென்றடையும் வழியைக் கண்டுபிடிக்க ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு முயற்சித்தன. இறுதியில் போர்த்துக்கல் நாட்டினரான வாஸ்கோடாகாமா இம்முயற்சியில் வெற்றி கண்டார்.இதன் பின்னர் ஒருவர் பின் ஒருவராக பாரதத்திற்கு வரத் தொங்கினர். முதன் முதலில் ஐரோப்பியர் பாரதத்தைத்தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் நோக்குடன் வந்ததாகத் தெரியவில்லை. கீழை நாடுகளுடன் முக்கியமாக இந்தியாவுடன் வாணிகத் தொடர்பு கொள்வதே அவர்களது பிரதான நோக்கமாக இருந்திருக்கலாம். இதன் அடிப்படையில் பல நிறுவனங்கள் நிறுவப்பெற்றன.இவை இந்தியாவில் பல தொழிற்சாலைகளை நிறுவி நாளடைவில் அவற்றை நிர்வகிக்கவும் தொடங்கின. இந்திய முறையைப் பின்பற்றியே நாணயங்கள் வெளியிட வேண்டியதாயிற்று. கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த ஐரோப்பியர்கள் இவ்விதம் வெளியிட்ட பொன் அல்லது வெள்ளி பகோடாக்கள் பல கடவுள்களின் உருவங்களையும் பிறமதத்தவர்களின் சின்னங்களையும் கொண்டிருந்தன.

ஆயிரத்து ஐநூறாம் ஆண்டு போர்ச்சு கேசியர் தென்னிந்தியாவில் முதன் முதலில் கள்ளிக்கோட்டையில் தொழிற்சாலையொன்றை நிறுவினர். அவ்வேளையில் அவர்களுக்கு நாணயங்கள் வெளியிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்நாணயங்களின் மேல் மகுடத்தைத் தாங்கிய போர்ச்சுகேசிய பட்டயத்தையும் நாணயசாலையின் பெயரும் பொறிக்கப்பட்டிருந்தன.

பொன், வெள்ளி, செப்பு நாணயங்களின் மேல் சின்னத்தை ஒருபுறமும் சிலுவையை மறுபுறத்திலும் காணக்கூடியதாகவுமிருந்தது. பிற்காலத்தில் வெள்ளி நாணயத்தின் மேல் ஒருபக்கத்தில் மன்னனின் தலைகள் பொறித்துள்ளனர். வெள்ளி, செம்பு தவிர துத்தநாகம் போன்ற உலோகங்களிலும் நாணயங்கள் வெளியிடப்பட்டன. எனவே போர்ச்சுக்கேசிய நாணயங்களின் மேல் பாரத தேசத்தின் மொழியையோ, சின்னத்தையோ காண்பது அரிது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட பொன் வராகங்களின் மேல் மன்னனின் பெயரையும் மறுபுறம் கடவுளின் உருவத்தையும் காணலாம்.

டச்சுக்காரர்கள்

தொகு

பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் வந்து சேர்ந்த டச்சுக்காரர் நாகப் பட்டினம், பழவேற்காடு முதலிய இடங்களிலிருந்து பொன், வெள்ளி, செம்பு, ஈயம், துத்தநாகம் ஆகியவற்றால் செய்த நாணயங்களை வெளியிட்டனர். பொன் வராகன்களின் மேல் இரைவன் உருவத்தையும் பொறித்தனர்.

பிரெஞ்சுக்காரர்கள்

தொகு

பாரதத்திற்கு இறுதியில் வந்து சேர்ந்த பிரெஞ்சுக்காரர் புதுச்சேரியில் பாரிய தொழில் கிறுவகத்தையும் நாணய சாலையையும் நிர்மாணித்த பின் நாணயங்களை புழக்கத்திற்கு விட்டனர். சிலவற்றில் பிறைச்சந்திரன் வடிவத்தைக் கொண்ட பகோடாக்களையும் உலாவிட்டனர். வெள்ளி நாணயங்கள் பலவற்றின் மேல் ஒரு பூவிதழ் காணப்படுகின்றது. பாண்டிச்சேரிக்கு விருது வழங்கப்பட்ட ஆண்டு ஒருபுறத்திலும் காணலாம். செப்புக் காசுகளின் மேல் ஒருபுறம் புதுச்சேரி என்ற தமிழ் விருதையும் மறுபுறம் பிரெஞ்சு பூவிதழ் உருவத்தையும் அல்லது சேவல் சின்னத்தையும் காணலாம்.

பிரித்தானியர்கள்

தொகு

பிரித்தானியரின் செப்புக்காசுகள் மிக எளிதில் கிடைத்தன. பதினேழாம் நூற்றாண்டில் நாணயங்கள் அதிகமாக வெளியிடப்படவில்லை என்றும் பிற்காலத்தில் தான் அதிகமாக வெளிவந்தன என்றும் தெரிய வருகின்றது. தென்னிந்திய நாணயங்கள் சிறப்பன மரபுகளைக் கொண்டவை. அரச பரம்பரையினரின் சின்னங்களை வைத்து இவர்களைச் சுலபமாக அறிந்து கொள்ளலாம். வராகனைப் பகோடா என்று மேற்கு நாட்டவர் கூறுவர். இது போர்ச்சுத்கேசிய பதத்திலிருந்து மருவியதாகவும் தெரிய வருகின்றது.

நாணய சேகரிப்பு

தொகு

பழங்காலத்தில் உபயோகிக்கப்பட்ட கால், அரை, ஒன்று, ஐந்து, பத்து மதிப்பான நாணயங்கள் மதிப்பிழந்துள்ளன. இந்நாணயங்களைப் பார்வையிட விரும்பியவர்கள் பழைய நாணயங்களை சேகரித்து வைக்கும் பழக்கம் உடையவர் களிடம் அல்லது அருங்காட்சியகத் தில் பார்வையிடலாம்.

உசாத்துணை

தொகு

காட்சியகம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலோக_நாணயம்&oldid=3235704" இலிருந்து மீள்விக்கப்பட்டது