தெரியாத பொருளைத் தெளிவாக்குவதற்கு உவமை கையாளப்படும். உவமை பல வகையில் அமையும். அவற்றுள் உள்ளுறை என்பது ஒருவகை.

உள்ளுறை என்பது அகத்திணைப் பாடல்களில் அமைந்திருக்கும். புறத்திணைப் பாடல்களில் அது அமையுமாயின் அதனைப் 'பிறிது மொழிதல் அணி' (=ஒட்டணி) என்பர்.

'கடல் ஓடா கால்வல் நெடுந்தேர் கடல் ஓடும் நாவாயும் அன்ன நிலத்து' என்னும் திருக்குறளில் பிறிதுமொழிதல் அமைந்துள்ளது. ஒருவருடைய செல்வாக்கு எல்லா இடங்களிலும் செல்லுபடியாகாது என்னும் உண்மை 'தேர் கடலில் ஓடாது, கப்பல் தரையில் ஓடாது' என்னும் உவமைகளால் சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது.

தொல்காப்பியர் உள்ளுறை உவமத்தை 'உவமப் பொருளின் உற்றது உணரும் தெளிமருங்கு உளவே திறத்து இயலான' (தொல்காப்பியம் 1241) என்று குறிப்பிடுகிறார்.

சொல்லப்பட்ட உவமையைக் கொண்டு சிலவற்றை உய்த்துணர்ந்து கொள்ளவேண்டும் என்கிறார்.

ஓரம்போகியார் பாடிய ஐங்குறுநூறு மருதத்திணைப் புவிப்பத்து பாடல்களில் உள்ளுறை உவமைகளைக் காணலாம்.

எடுத்துக்காட்டு:


அம்பணத்து அன்ன யாமை ஏறிச்
செம்பின் அன்ன பார்ப்புப் பல துஞ்சும்
யாணர் ஊர! நின்னினும்
பாணன் பொய்யன் பல சூளினனே.

(ஐங்குறுநூறு 43) - இது பாடல்.


ஆமை முதுகின் மேல் அதன் குஞ்சுகள் பல ஏறிப் பரண் மேல் தூங்குவதுபோல் தூங்கும் ஊரை உடையவன் என்று தலைவன் இப்பாடலில் விளிக்கப்படுகிறான்.

தலைவன் பரத்தை மேல் உறங்குகிறான் என்னும் செய்தி இதனால் உய்த்துணர வைக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்ளுறை&oldid=1388015" இலிருந்து மீள்விக்கப்பட்டது