ஊட்டி நாராயண குருகுலம்

ஊட்டி நாராயண குருகுலம், நடராஜகுருவால் உருவாக்கப்பட்ட அத்வைத குருகுலம். நாராயணகுருவின் சிந்தனைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. நாராயண குருகுலம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இதன் தலைமையிடம் வற்கலா. ஊட்டி குருகுலம் இதன் இரண்டாவது கிளை.

இடம்

தொகு

நாராயண குருகுலம் ஊட்டி ஃபெர்ன் ஹில் பகுதியில் மஞ்சண கொரே கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கே நித்ய சைதன்ய யதியின்ன் சமாதி அமைந்துள்ளது. தியான மண்டபமும் நூலகமும் உள்ளது.

வரலாறு

தொகு

நாராயணகுருவின் ஆணைப்படி இந்தியா எங்கும் அலையும் துறவியாக பயணம் செய்த நடராஜகுரு ஆறுவருடம் அவ்வாறு பயணம்செய்தபின் 1947ல் ஊட்டிக்கு வந்தார். அங்கே அவர் தங்கியிருந்தபோது ஓரு பக்தர் அவரது பழைய தேயிலை தொழிற்சாலை இருந்த நிலத்தை அவருக்கு பிச்சையாக வழங்கினார். அங்கே ஒரு தகரக்குடிசையை தன் கையால் அமைத்து நடராஜகுரு தங்கினார். வெகுநாள் அந்த தகரக்குடிசை மட்டுமே அங்கே இருந்தது. அதுவே குருகுலம் என்றழைக்கப்பட்டது

உலகப்புகழ் பெற்ற தத்துவமேதை ஹென்றி பர்க்ஸனின் மாணவராக பாரீஸ் சார்போன் பல்கலைக்கழகத்தில் பயின்றவர் நடராஜகுரு. ஹென்றி பெர்க்ஸனின் இன்னொரு மாணவரான ஜான் ஸ்பியர்ஸ் வந்து நடராஜ குருவுடன் இணைந்துகொண்டார். மெல்லமெல்ல ஒரு சர்வதேசக்குருகுலமாக அது மாறியது. எட்டுவருடங்களுக்குப் பின்னர் குரு நித்ய சைதன்ய யதி மாணவராக வந்து சேர்ந்தார்

நித்ய சைதன்ய யதி தத்துவப்பேராசிரியராக இருந்தவர். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இலக்கியம் மற்றும் தத்துவப் பேராசிரியராக இருந்தார். நடராஜ குருவின் காலகட்டத்திலேயே வற்கலையில் நாராயணகுருகுலமும் ஈஸ்ட்வெஸ்ட் யுனிவர்சிட்டி என்ற தத்துவக் கல்வியமைப்பும் உருவாக்கப்பட்டது. நடராஜகுரு 1973ல் சமாதியடைந்ததும் நித்ய சைதன்ய யதி இந்தியா வந்து குருகுலத்தின் தலைமை பொறுப்பை ஏற்றார்.

1999ல் நித்ய சைதன்ய யதி மறைந்த பின் நாராயணகுருகுலத்தின் தலைமைப்பொறுப்புக்கு நடராஜகுருவின் இன்னொரு மாணவரான முனி நாராயணப் பிரசாத் வந்துள்ளார். அவர் வற்கலாவில் உள்ளார். வற்கலை குருகுலத்தில் நடராஜகுருவின் சமாதி உள்ளது. ஊட்டி குருகுலத்தின் பொறுப்பில் இப்போது சுவாமி தன்மயா உள்ளார். மேலை மருத்துவப் பட்டதாரியான இவர் மாற்று மருத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபாடுகொண்டவர்.

பணிகள்

தொகு

திட்டவட்டமான பணிகளோ வரம்புகளோ இல்லாத நெகிழ்ச்சியான அமைப்பு நாராயணகுருகுலத்தில் உள்ளது. ஆன்மீகக் கல்விபெறுபவர்கள் தங்கும் இடம் மட்டும்தான் அது. பொதுவாக அங்கே துறவிகள் தங்கி கல்வியிலும் தியானத்திலும் ஈடுபட்டிருப்பார்கள். நித்ய சைதன்ய யதியின் மாணவரான தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அங்கே தமிழ் மலையாள கவிதைப் பரிமாற்ற அரங்குகளை நடத்தியிருக்கிறார். இதுவரை 18 அரங்குகள் நடந்துள்ளன. தமிழிலக்கிய விவாத அரங்குகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன.


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊட்டி_நாராயண_குருகுலம்&oldid=1896463" இலிருந்து மீள்விக்கப்பட்டது