ஊன்று மரையாணி

ஊன்று மரையாணி (anchor bolt) என்பது ஒரு கட்டிடத்தின் அல்லது அமைப்பின் காங்கிறீற்றுப் பகுதியுள் அல்லது கற்கட்டுப் பகுதியுள் தலைப்பகுதி இருக்க, புரியைக் கொண்ட மறுமுனை வெளியே துருத்திக்கொண்டு இருக்கும் படி அமைக்கப்படும் ஒரு உலோக ஆணி ஆகும். இது ஒரு அமைப்புடன் வேறொரு அமைப்பையோ, இயந்திரங்களையோ, வேறு இது போன்றவைகளையோ இணைப்பதற்குப் பயன்படுகின்றது. ஊன்று மரையாணிகளில் பலவகைகள் உள்ளன. இவற்றுட் பல உற்பத்தி நிறுவனங்களின் தனியுரிமையுடன் கூடிய வடிவமைப்புக் கொண்டவை. பொதுவாக இவை அனைத்துமே புரி வெட்டப்பட்ட ஒரு முனையைக் கொண்டவை. இம்முனையில் சுரைகள் மூலம் வேறு பகுதிகளைப் பொருத்த முடியும்.[1] ஊன்று மரையாணிகள், பொதுவான கட்டிடங்கள், அணைகள், பல்வேறு பெருவகைக் கட்டுமானங்கள் போன்ற எல்லா வகைக் கட்டுமான வேலைகளிலும் பரவலாகப் பயன்படுகின்றன.[2]

வார்க்கும்போது வைத்துக் கட்டும் ஊன்று மரையாணி
பொறிமுறைசார் ஊன்று மரையாணி

எளிமையான ஊன்று மரையாணிகள் காங்கிறீற்று வார்க்கும்போது வைக்கப்படுவனவாகும். அருகில் உள்ள படத்தில் இருப்பது போல், பெரும்பாலான ஊன்று மரையாணிகள் அறுகோண வடிவான தலையுடன் கூடிய புரியாணிகள் ஆகும். தலைப்பகுதி, காங்கிறீட்டு வார்க்கும்போதே வேண்டிய இடத்தில் வைத்துக் கட்டப்படுகின்றது. வேறு வடிவமைப்புக்களும் உள்ளன. சில வடிவமைப்புக்களில் தலைக்குப் பதிலாக அம்முனை முனை வளைந்து இருக்கும். வார்க்கும்போது வைக்கப்படும் ஊன்று மரையாணிகளே மிகவும் வலுவானவை. ஆனால், வார்க்கும்போது இவற்றைச் சரியான இடத்தில் வைப்பது இலகுவானதல்ல. அதனால், பாரமான இயந்திரங்களை காங்கிறீற்றுத் தளங்களில் பொருத்துவது போன்ற வேலைகளுக்கே பெரும்பாலும் இம்முறை பயன்படுகின்றது. தற்காலத்தில், வார்க்கும்போது ஆணிகளைப் பொருத்த உதவுவதற்காகப் பல வகையான சாதனங்கள் புழக்கத்தில் உள்ளன. இவை பெரும்பாலும் கூட்டு நெகிழிகளினால் செய்யப்பட்டவை.

காங்கிறீட்டு இறுகிய பின்னர் பொருத்துவதற்கு இரண்டு வகையான ஊன்று மரையாணிகள் உள்ளன. இவை பொறிமுறை ஊன்று மரையாணிகள், வேதிமுறை ஊன்று மரையாணிகள் என்பனவாகும். இவற்றுள் வேதிமுறை ஊன்று மரையாணிகள் கூடிய வலுவானவை. எனினும், இவற்றைப் பொருத்துவதில் கூடிய கவனம் தேவை. பிசின் ஊன்று மரையாணிகள் எனவும் அழைக்கப்படும் வேதிமுறை மரையாணிகளில் பெரும்பாலும் இப்பாக்சிப் பிசின்கள் பயன்படுகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. http://www.bia.org/BIA/technotes/t44.html[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-10-07. பார்க்கப்பட்ட நாள் 2009-12-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊன்று_மரையாணி&oldid=4177022" இலிருந்து மீள்விக்கப்பட்டது