எச்சில் (கோட்பாடு)

எச்சில் என்பது உமிழ்நீர். உணவு செரிமானத்துக்காக வாயில் ஊறும் உமிழ் வாயில் போட்டுக்கொள்ளும் புகையிலை போன்ற நச்சுப் பொருள்களால் உமிழ வேண்டிய தீய பொருளாக மாறிவிடும். அன்றியும் உடல் நோய்வாய்ப் படும்போது கோழையாக மாறி உமிழவேண்டிய ஒன்றாக ஆகிவிடும். இந்த நிலையில் இது வேண்டாத அருவருக்கத் தக்க எச்சில். இது எச்சப் பொருள். [1] வேண்டாத எச்சப் பொருளை, தகாத பொருளை 'எச்சில்' என்றனர். ஆசாரக்கோவை என்னும் நீதிநூல் எச்சில் பற்றிய சில செய்திகளைக் குறிப்பிடுகிறது.

ஒதுக்கத் தக்க எச்சில் எனத் தமிழ் மக்கள் நானகினைக் கொண்டனர். அவை உடல் கழிவுகளான சிறுநீர், மலம். ஆண்-பெண் உடல் உறவின்போது வெளிப்படும் விந்து, நாதப் பசைகள், வாயில் வரும் கோழை என்பவை. [2]

இந்த நான்கு வகையான எச்சிலைத் தூய்மைப்படுத்திக் கொள்ளா முன்னர் மேதைகள் பாடங்களை வாய்விட்டுப் படிக்கமாட்டார்கள். பிறரோடு பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள். படுக்கையில் படுத்து உறங்கமாட்டார்கள். [3]

எச்சில் பட்டுத் தூய்மைப்படுத்திக்கொள்ளாத நிலையில் இருப்பவர்கள் பசுவையோ, பார்ப்பாரையோ, (சமையல், விளக்குத்)தீயையோ, தெய்வத் திருமேனிகளையோ, தன் உச்சந்தலையையோ தொடக்கூடாது. [4]

இவர்கள் கண்ணால் பார்க்கத் தகாதனவும் உண்டு. அவை ஐந்து. 1 புலால்-உணவு, 2 வானத்து நிலா, 3 வளர்க்கும் நாய், 4 தோன்றும் ஞாயிறு, 5 வானத்தில் எரிந்து விழும் மீன் (எரிகல்) என்பன. [5]

அடிக்குறிப்பு

தொகு
  1. காக்கை எச்சமிட்டுவிட்டது என்று கூறும்போது இப் பொருளைத் தருவதிலிருந்து இதனை உணர்ந்துகொள்ளலாம்.
  2. எச்சில் பலவும் உள; மற்று அவற்றுள்,
    இயக்கம் இரண்டும், இணைவிழைச்சு, வாயில்-
    விழைச்சு, இவை எச்சில், இந் நான்கு. (ஆசாரக்கோவை 7)
  3. நால் வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து,
    ஓதார், உரையார், வளராரே,-எஞ் ஞான்றும்
    மேதைகள் ஆகுறுவார். (ஆசாரக்கோவை 8)
  4. ‘எச்சிலார், தீண்டார்-பசு, பார்ப்பார், தீ, தேவர்,
    உச்சந் தலையோடு, இவை’ என்ப; யாவரும்
    திட்பத்தால் தீண்டாப் பொருள். (ஆசாரக்கோவை 5)
  5. எச்சிலார், நோக்கார்-புலை, திங்கள், நாய், நாயிறு,
    அத்தக வீழ்மீனோடு, இவ் ஐந்தும்,தெற்றென,
    நன்கு அறிவார், நாளும், விரைந்து. (ஆசாரக்கோவை 6)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்சில்_(கோட்பாடு)&oldid=3399543" இலிருந்து மீள்விக்கப்பட்டது