எண்ணிம ஒளிப்படவியல்
எண்ணிம ஒளிப்படவியல் (Digital photography) என்பது, ஒளிப்படவியலின் ஒரு வடிவம் ஆகும். இது காட்சிகளைப் படம் பிடிப்பதற்கு எண்ணிமத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்தத் தொழில்நுட்பம் அறிமுகமாகும் வரை ஒளிப்படங்கள் எடுப்பதற்கு ஒளிப்படச் சுருளைப் பயன்படுத்தி வந்தனர். இப்படச் சுருளில் வீழ்த்தப்படும் தெறியுரு படம் கழுவும் முறைகள் மூலம் தெரியக்கூடிய படமாக மாற்றப்படும். மாறாக எண்ணிம ஒளிப்படங்களை, வேதியியல் வழிமுறைகளைப் பயன்படுத்தாமல், எண்ணிம மற்றும் கணினித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, காட்சிப்படுத்தவும், அச்சிடவும், சேமித்து வைக்கவும், மாற்றங்கள் செய்யவும், அனுப்பவும் முடியும்.[1][2][3]
எண்ணிம ஒளிப்படமுறை, பல எண்ணிமப் படமாக்கல் வடிவங்களில் ஒன்று. எண்ணிமப் படிமங்களை ஒளிப்படக் கருவிகளால் மட்டுமன்றி, ஒளிப்படவியல் சாராத பிற கருவிகளாலும் எண்ணிம ஒளிப்படங்களை உருவாக்க முடியும். துருவிகள், வானொலித் தொலைநோக்கிகள் என்பவற்றிலிருந்து பெறப்படும் படிமங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள். வழமையான ஒளிப்படங்களைத் துருவல் செய்தும் எண்ணிம ஒளிப்படங்களை உருவாக்கலாம்.
உணரிகளும் சேமிப்பகங்களும்
தொகுவெவ்வேறு நிற வடிப்பான்களூடாக வருகின்ற ஒளியை உணரிகள் உணர்ந்து கொள்கின்றன. எண்ணிம நினைவுச் சாதனங்கள் இந்தத் தகவல்களை சி.ப.நீ நிறவெளிகளாகவோ மூலத் தரவுகளாகவோ சேமிக்கின்றன. உணரிகள் இரண்டு வகையாக உள்ளன:
- மின் பிணைச் சாதனம் (CCD)
- நிரப்பு உலோக ஆக்சைடு குறைக்கடத்தி (CMOS)
பல்வினைத்தன்மையும் இணைப்புத்தன்மையும்
தொகுநேரியல் வரிசை வகையைச் சேர்ந்த சில உயர் நிலை ஒளிப்படக்கருவிகளையும், கீழ் நிலை வலைப் படக்கருவிகளையும் தவிரப் பிற எண்ணிம ஒளிப்படக்கருவிகளில் எண்ணிம நினைவகக் கருவியே படிமங்களைச் சேமிப்பதற்குப் பயன்படுகின்றது. இப் படிமங்களைப் பின்னர் கணினிக்கு மாற்ற முடியும்.
எண்ணிம ஒளிப்படக் கருவிகள் படம் எடுப்பதுடன், ஒலியையும், நிகழ்படங்களையும் கூடப் பதிவு செய்யக் கூடியன. சில வலைப் படக்கருவியாகவும் பயன்படுகின்றன. சில படங்களை நேரிடையாகவே அச்சுப்பொறிக்கு அனுப்பி அச்சிடக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளன. சிலவற்றைத் தொலைக்காட்சிப் பெட்டிக்கு இணைத்துப் படங்களை நேரடியாகப் பார்க்கவும் முடியும்.
செயற்றிறன் அளவீடுகள்
தொகுஎண்ணிமப் படிமம் ஒன்றின் தரம் பல்வேறு காரணிகளில் தங்கியுள்ளது. இவற்றுட் பல காரணிகள் எண்ணிமமல்லாத படிமங்களுக்கும் பொதுவானதே. படத்துணுக்கு (pixel) எண்ணிக்கை இவற்றுள் முக்கியமான ஒன்று. இது பொதுவாக மெகாபிக்சல் அலகில் அளவிடப்படுகிறது. ஒரு மெகாபிக்சல் என்பது ஒரு மில்லியன் படத்துணுக்குகளுக்குச் சமமானது. எண்ணிம ஒளிப்படக் கருவிகளை ஒப்பிடும் வசதிக்காக "எண்ணிம ஒளிப்படக்கருவி சந்தைப்படுத்துனர் சங்கங்களால்" இந்த அளவீட்டு முறை உருவாக்கப்பட்டது. ஆனால் இது எண்ணிம ஒளிப்படக் கருவிகளின் தரத்தைக் குறிக்கும் முக்கிய அளவீடு அல்ல. மூலத் தரவுகளை நிறச் சமநிலை கொண்டதும், பார்ப்பதற்கு நன்றாக இருக்கக்கூடியதுமான படிமங்களாக உருவாக்கும் பணியைச் செய்வதும், ஒளிப்படக் கருவியினுள் உள்ளதுமான செயற்பாட்டுத் தொகுதியே மிகவும் முக்கியமானது. இதன் காரணமாகவே சில 4+ மெகாபிக்சல் ஒளிப்படக் கருவிகள் அதனிலும் கூடிய மெகாபிக்சல் அளவைக் கொண்ட ஒளிப்படக் கருவிகளிலும் கூடிய தரமான படங்களைத் தருகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Merrin, William (2014). Media Studies 2.0. Routledge. pp. 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0415638630.
- ↑ Middleditch, Steve; Hand, Di (2012). Design For Media: A Handbook for Students and Professionals in Journalism. Routledge. pp. 328. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1405873666.
- ↑ Rachel Nuwer. "The Inventor of Videotape Recorders Didn't Live to See Blockbuster's Fall". Smithsonian இம் மூலத்தில் இருந்து 2020-10-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201025205229/https://www.smithsonianmag.com/smart-news/the-inventor-of-videotape-recorders-didnt-live-to-see-blockbusters-fall-180947594/.