எதிர் காந்தப் பொருட்கள்

சில பொருட்கள் வெட்ட வெளியை விட சற்றே குறைந்த அளவு காந்த ஊடுமை பெற்றிருக்கும். அவற்றை எதிர்காந்தப் பொருட்கள் என வழங்குவர். பிசுமத்து, வெள்ளி, செம்பு, நீர், காற்று ஆகியவை எதிர்க்காந்தப் பொருட்களுக்கு சான்று. வெட்ட வெளியை விட சற்றே மிகுந்த அளவு காந்த ஊடுமை பெற்ற பொருட்களே துணைக் காந்தப் பொருட்கள். மேலும் சில பொருட்கள், வெட்ட வெளியை விட பல மடங்கு அதிக காந்த ஊடுமை பெற்றிருக்கும். அவையே இருப்புக் காந்தப் பொருட்கள் எனப்படும். இதன்படியே காந்தப் பொருட்கள் வகைபடுத்தப் படுகின்றன.[1]

எதிர் காந்தப் பொருட்களின் காந்தப்புலம் தொகு

ஓரணுவின் எதிர்மங்களில் தற்சுழற்சி, நீள் வட்டப்பாதை சுழற்சி ஆகியவற்றின் நிகரக் காந்த விளைவே அவ்வணுவின் காந்தத் தன்மையைத் தீர்மானிகிறது. ஓரணுவின் எதிர்மங்களின் சுழற்சிகளின் நிகரக் காந்த விளைவு சுழியாக இருப்பின் அவ்வணுவாலாய தனிமம் காந்தமல்லாப் பொருளாக விளங்கும். ஒரு காந்தப் புலத்தில் ஒரு புள்ளியில் காந்தவரி அடர்த்தியை அளந்து, அந்த காந்தப்புலத்தில் பிசுமுத்து, வெள்ளி, செம்பு ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றாலான ஒரு பொருளை வைத்த பின்னர் முன் அளந்த அதே புள்ளியில் மீண்டும் காந்தவரி அடர்த்தியை அளந்து பார்த்தால், அதன் மதிப்பு முன்பு கிடைத்த மதிப்பை விட சற்று குறைந்து இருப்பதைக் காணலாம். அதாவது, மேற்கூறிய பொருட்கள் காந்தப் புலத்தில் வைக்கப்படும்போது அந்த காந்தப்புலதிற்கு எதிராக இன்னொரு காந்தப் புலத்தை அதன் எதிர் திசையில் தோற்றுவிக்கிறது எனலாம். வேறு வகையில் கூறவேண்டுமானால், காந்தப் புலத்தில் வைக்கப்பட்ட பொருளின் அணுக்களில் உள்ள எதிர்மங்களின் சுழற்சி காந்தப் புலத்திற்கு எதிரான திசையில் இன்னொரு காந்தப் புலத்தைத் தோற்றுவிக்கும் வகையில் எதிர்மங்கள் சற்றே திருப்பப் படுகின்றன எனலாம். ஆகவே இத்தகைய பொருட்கள் எதிர்காந்தப் பொருட்கள் ஆகின்றன.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 அடிப்படை மின்னியல் - பேரா. இரா. கணேசன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்_காந்தப்_பொருட்கள்&oldid=3757774" இலிருந்து மீள்விக்கப்பட்டது