எப்பெசுடசு

எப்பெசுடசு (/hɪˈfεstəs/) என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் கூறப்படும் ஒரு கடவுள் ஆவார். இவர் பன்னிரு ஒலிம்பியர்களுள் ஒருவரும் சியுசு மற்றும் எராவின் மகனும் ஆவார். இவர் கொல்லர்கள், கைவினைஞர்கள், சிற்பிகள் ஆகியோரின் கடவுளாகவும் உலோகங்கள், உலோகவியல், நெருப்பு மற்றும் எரிமலைகள் ஆகியவற்றின் கடவுளாகவும் திகழ்கிறார்.[1]. இவருக்கு இணையான ரோமக் கடவுள் வல்கன் ஆவார்.

எப்பெசுடசு
இடம்ஒலிம்பிய மலைச்சிகரம்
துணைஅப்ரோடிட், அக்லயா
பெற்றோர்கள்சியுசு மற்றும் எரா
சகோதரன்/சகோதரிஅப்ரோடிட், அப்பல்லோ, ஏரெசு, ஆர்ட்டெமிசு, ஏதெனா, டயோனிசசு, எய்லெய்தியா, என்யோ, எரிசு, எபே, டிரோயின் எலன், எராகில்சு, எர்மெசு, பெர்சிஃபோன், பெர்சியுசு
குழந்தைகள்தாலியா, இயுக்லியா, இயுபிமி, ஃபிலோப்ரோசைன், கபெய்ரி மற்றும் இயுதெனியா

இவர் ஒலிம்பசுவில் உள்ள அனைத்துக் கடவுள்களுக்கும் ஆயுதங்களைத் தயாரித்துத் தருகிறார். எப்பெசுடசு தொழில் கடவுளாக இருப்பதால் ஏதென்சு போன்ற தொழில்நகரங்களில் வாழும் கிரேக்க மக்கள் அவரை வழிப்பட்டு வந்தனர்.

தொன்மவியல்

தொகு

ஒலிம்பசு மலைச்சிகரத்தில் எப்பிசுடசுவிற்குத் தனியாக அரண்மனையும் தொழிற்சாலையும் இருந்தது. இவர் கிரேக்கக் கடவுள்களுக்குப் பல வலிமையான ஆயுதங்களைச் செய்து கொடுத்திருக்கிறார். இவர் எர்மீசுவின் பெடாசோசு(இறகுள்ள தலைக்கவசம்), தலாரியா(இறகுள்ள காலணி), ஏகிசு(மார்புக்கவசம்), அப்ரோடிட்டின் இடைக்கச்சை, ஈலியோசின் தேர் ஆகியவற்றைச் செய்திருக்கிறார். எப்பெசுடசு ஆட்டோமெடான் எனப்படும் தானியங்கி உலோகங்களைத் தனக்கு வேலை செய்ய உருவாக்கினார். திறமையுள்ள கொல்லனாக இருந்த எப்பெசுடசு ஒலிம்பிய மலைச்சிகரத்தில் உள்ள அனைத்து அரியாசனங்களையும் செய்தவர் ஆவார்.

மனைவி மற்றும் குழந்தைகள்

தொகு

அப்ரோடிட் மிகவும் அழகாக இருந்ததால் அவரை அடைய கடவுள்களுக்குள் போர் நிகழுமோ என்று பயந்த சியுசு அவரை அழகற்ற எப்பெசுடசிற்கு கட்டாயமாகத் திருமணம் செய்து வைத்தார். இதனால் மகிழ்ந்த எப்பெசுடசு அப்ரோடிட்டிற்குப் பல நகைகளைச் செய்து கொடுத்தார். ஆனால் அப்ரோடிட்டோ அவரை ஏமாற்றிவிட்டுப் பல ஆண் கடவுள்களுடன் உறவாடினார். மேலும் அவர் இறுதிவரை எப்பெசுடசுவுடன் உறவாடவில்லை. இதனால் விரக்தியடைந்த எப்பெசுடசு அவரை விட்டு பிரிந்தார். பிறகு அவர் சியுசு மற்றும் யுரோனிமின் மகளும் கிரேசுகளில் ஒருவருமான அக்லேயாவை மணந்துகொண்டார். இவர்களுக்கு இயுக்லியா, இயுபிமி, ஃபிலோப்ரோசைன் மற்றும் இயுதெனியா ஆகியோர் பிறந்தனர்.

எப்பெசுடசு மற்றும் ஏதெனா

தொகு
 
எப்பெசுடசு மற்றும் ஏதெனா

ஒருநாள் ஆயுதம் செய்து தருமாறு கேட்பற்காக கடவுள் ஏதெனா எப்பெசுடசுவின் தொழிற்சாலைக்கு வந்தார். அப்போது அவரது அழகில் மயங்கிய எப்பெசுடசு அவருடன் உறவாட முயன்றான். தன் கன்னித்தன்மையை காப்பாற்றிக்கொள்ள ஏதெனா தப்பித்துச் சென்றார். ஆனால் எப்பெசுடசு அவரைப் பின்தொடர்ந்தான். அப்போது எப்பெசுடசுவிற்கு வந்த விந்துத் திரவம் ஏதெனாவின் தொடையில் பட்டுவிட்டது. இதனால் பயந்த ஏதெனா அந்தத் திரவத்தை ஒரு கம்பளித் துணியால் துடைத்து பூமியில் வீசினார். அது பூமி கடவுள் கையா மீது பட்டதால் அவர் கர்ப்பமானார். இதன் மூலம் எரிச்தோனியசு பிறந்தான். இவனே பிற்காலத்தில் ஏதென்சின் அரசன் ஆனான்.

மேற்கோள்கள்

தொகு
  1. Walter Burkert, Greek Religion 1985: III.2.ii; see coverage of Lemnos-based traditions and legends at Mythic Lemnos.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்பெசுடசு&oldid=2493439" இலிருந்து மீள்விக்கப்பட்டது