எரிவளி

(எரிவாயு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எரிவளி (அல்லது எரிவாயு) (Fuel Gas) என்பது வெப்ப ஆற்றலைப் பெறுவதற்காக எரிக்கப்படும் பல வளிமங்களுள் எந்த ஒரு எரிமத்தையும் குறிக்கப் பயன்படும் பொதுவான பெயர். பெரும்பாலான எரிவளிமங்கள் ( மெத்தேன் அல்லது புரொப்பேன்), நீரியம், கார்பனோரொக்சைட்டு, அல்லது இவற்றின் கலவைகள் போன்ற நீரகக்கரிமங்களாகும். இத்தகைய வளிமங்கள் உருவான இடத்திலிருந்து நுகரிடத்திற்கு எளிதாக குழாய்கள் மூலமாக பரப்பவும் வழங்கவும் வாய்ப்புள்ள வெப்பம் அல்லது ஆற்றல் மூலங்களாகும்.

வளிம எரிவிளக்குகளில் எரிவளியின் நீலநிற தீச்சுடர்

எரிவளி நீர்ம எரிமங்களிலிருந்தும் திண்ம எரிமங்களிலிருந்தும் வேறுபட்டவை. சில எரிவளிமங்கள் சேமிப்பிற்காகவும் போக்குவரத்திற்காகவும் உயரழுத்தத்தில் நீர்மநிலையில் அடைக்கப்பட்டிருக்கலாம். திண்மநிலை எரிமங்களை எடுத்தாள்வதிலும் நீர்மநிலை எரிமங்கள் சிந்துவதிலும் உள்ள ஆபத்துக்கள் வளிமநிலையில் இல்லை என்ற பயன்களைத் இருந்தபோதும் இதன் பயன்பாட்டிலும் சில சிக்கல்கள் உள்ளன. எரிவளிமம் அறியப்படாதவாறு ஓரிடத்தில் சேகரிக்கப்பட்டு வளிம வெடித்தல் நிகழும் தீவாய்ப்பு உள்ளது. இதனால் வளிமக் கசிவை எளிதாக கண்டறியுமாறு பெரும்பாலான எரிவளிகளுக்கு வாசனைப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

தற்காலத்தில் மிகப் பெரும்பாலாகப் பயன்படுத்தப்படும் எரிவளிமம் இயற்கை எரிவளி ஆகும்.

வகைகள்

தொகு
 
நியூ ஓர்லியன்சில் 19வது-நூற்றாண்டுப் பாணியிலமைந்த எரிவளிம விளக்குகள்

மிகப் பொதுவாக எரிவளிமங்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை கிடைக்கும் மூலவளங்களையும் அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதையும் பொறுத்து வகை படுத்தப்படுகின்றன; இயற்கையாக கிடைப்பவை, மற்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுபவை.

தயாரிக்கப்படும் எரிவளிமங்கள்

தொகு

இந்த வகையில் செயற்கையான செய்முறைளைப் பயன்படுத்தி, பொதுவாக வளிமநிலைக்கு மாற்றி, எரிவளிகள் உண்டாக்கப்படுகின்றன. இவ்வாறு எரிவளி உண்டாக்கப்படும் இடம் வாயுத் தொழிற்சாலை எனப்படுகிறது. தயாரிக்கப்படும் வளிமங்களில் சில:

எதிர்காலத்தில் ஐதரசன் வளி ஓர் எரிவளியாகப் பயன்படும் சாத்தியங்களும் உண்டு.

இயற்கை வளியும் பெட்ரோலிய வளிமங்களும்

தொகு

இருபதாம் நூற்றாண்டில் பெரும்பாலும் மெத்தேன் அடங்கிய இயற்கை எரிவளி மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் எரிவளியாக உள்ளது. இது சிக்கலான தயாரிப்பு முறைகளில் பெறப்படாது புவியின் சேமிப்புகளிலிருந்து எளிதாக பெறப்படுகிறது. இதுவம் ஐதரசனும் சேர்த்து கலவையாக (HCNG) பயன்படுத்தப்படுவதும் உண்டு.

இயற்கை வளி அல்லது பாறை எண்ணெயை பிரிப்பதன் மூலம் கீழ்காணும் எரிவளிகள் கிடைக்கின்றன:

பயன்பாடு

தொகு

எரி வளிமங்கள் பல்வேறு பயன்பாடுகளில் பாவிக்கப்படுகின்றன. பண்டைய காலத்தில் வளிம விளக்குகளுக்கு பயன்படுத்தப்பட்டன. தெருவிளக்குகளும் கட்டிட அலங்கார விளக்குகளும் நகராட்சியின் வாயுத் தொழிற்சாலையிலிருந்து குழாய் மூலமாக அனுப்பப்பட்ட வளிமங்கள் மூலமாக எரிய வைக்கப்பட்டன. கல்லூரிகளிலும் ஆய்வகங்களிலும் உள்ள பன்சன் சுடரடுப்பு போன்ற வளிம சுடரடுப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. குளிர்காலங்களில் கதகதப்பிற்காக வளிம சூடாக்கிகளிலும் முகாம் அடுப்புகளிலும் வண்டிகளுக்கு எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெண்சுருட்டு பற்றவைப்புக் கருவிகளிலும் பெட்ரோல் வளிமநிலைக்கு மாற்றப்பட்டு பயன்படுதப்படுகின்றன.

இந்தியாவில்

தொகு
 
விளக்கொளி எரிகலன்

திரவ பெட்ரோலிய வாயு எனப்படும் எல்பிஜி வளி இந்திய சமையலறைகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய அரசுடைமையான வழங்கல் நிறுவனங்களால் விற்கப்படும் இவை 14.2கி எடையுள்ள சேமிப்பு உருளைகளில் வழங்கப்படுகின்றன. இந்திய அரசு வழங்கும் மானியங்களால் இவற்றின் சந்தைவிலையிலிருந்து மிகவும் குறைவான விலையில் விற்கப்படுகின்றன. இந்த மானியம் இலாபநோக்குள்ள வணிக அமைப்புகளுக்கு மறுக்கப்படும் வண்ணம் இவற்றிற்கு வழங்கப்படும் உருளைகள் நீல வண்ணத்தில் உள்ளன. தற்கால திருமண ஊர்வலங்களில் விளக்கொளி எரிகலன்களிலும் பயனாகின்றன.

இயற்கைவளி கிடைக்கும் மாநிலங்களில் சமையலுக்கான எரிபொருளாக இவை குழாய்களில் வழங்கப்படுகின்றன. வீட்டில் அமைக்கப்பட்டுள்ள அளவீட்டுக் கருவிகள் மூலம் நுகரப்பட்ட வளிமத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 
தானுந்து ஒன்றில் இயற்கை வளிம எரிகலன்.

இதன் சற்றே வேறு வடிவமான தானுந்து வளி (autogas) அல்லது அழுத்தப்பட்ட இயற்கை வளி (CNG) தானுந்துகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை பெட்ரோல் மற்றும் டீசலை விட முழுமையாக எரிக்கப்பட்டு வெளியேற்றப்படும் வளிக்கலவையில் நச்சுவளிகள் இல்லாதிருப்பதால் சுற்றுச்சூழலை மாசடைய வைக்காத எரிபொருட்களாகக் கருதப்படுகின்றன. தில்லி போன்ற சில முற்போக்கான நகராட்சிகள் பொதுப்பயன்பாட்டு வண்டிகள் அழுத்தப்பட்ட இயற்கைவளியால்தான் இயக்கப்பட வேண்டும் என சட்டம் இயற்றியுள்ளன.

இயற்கை வளி தானுந்து இயக்கத்தின் நன்மைகள்
  • இயற்கைவளியில் ஈயம் அல்லது பென்சீன் போன்றவை இல்லை; இதனால் தீப்பொறிச் செருகிகளில் ஈயக்கறை (lead fouling) படிவதில்லை.
  • இயற்கைவளிமத் தானுந்துகளுக்கான பராமரிப்புச் செலவு பிற நீரகக்கரிம-எரிபொருள்-தானுந்துகளை விடக் குறைவாக உள்ளது.
  • வளிம எரிபொருள் அமைப்புக்கள் நன்கு அடைக்கப்பட்டிருப்பதால் சிந்துதல், ஆவியாதல் போன்ற எரிபொருள் இழப்பு ஏற்படுவதில்லை.
  • இயற்கை வளிமம் தானுந்துப் பொறியினுள்ளே உராய்வைத் தடுக்க பயன்படுத்தப்படும் எண்ணெய்களுடன் கலக்காதிருப்பதால் அவற்றின் ஆயுளை நீடிக்கச்செய்கிறது.
  • வளிமநிலையில் இருப்பதால் காற்றுடன் எளிதாகவும் சீராகவும் கலக்கிறது.
  • குறைந்த மாசடைதலும் மிகுந்த செயல்திறனும்: இயற்கைவளி பெட்ரோலை விட குறிப்பிடத்தக்க அளவில் குறைந்த மாசுகளை (காட்டாக, காபனீரொக்சைட்டு (CO2), எரிக்கப்படாத நீரகக்கரிமங்கள், கார்பனோரொக்சைட்டு (CO), நைதரசன் ஆக்சைடுகள் (NOx), கந்தக ஆக்சைடுகள் (SOx), சிறுதுகள்கள்) வெளிவிடுகிறது. குறைந்த காபனீரொக்சைட்டுகள் மற்றும் நைதரசன் ஆக்சைடு வெளியீடுகளை கொண்டதால் இயற்கை வளிம்ப் பயன்பாடு பைங்குடில் வளிமங்களை மட்டுப்படுத்த உதவுகிறது.[1]

இருப்பினும் இயற்கை எரிவளி தானுந்துகளில் எரிபொருளுக்கான சேமிப்புக்கிடங்கு மற்றவற்றை விட கூடுதலான இடத்தை எடுத்துக்கொள்கிறது. தொழிற்சாலைகளில் இயற்கை வளித் தானுந்தாகவே தயாரிக்கப்பட்டவற்றில் வண்டியின் அடிப்பாகத்தில் இவை அமைக்கபடுகின்றன. இயற்கைவளித் தானுந்துகள் பாதுகாப்பானவையாகக் கருதப்படுகின்றன.[2][3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Source: Gas Authority of India Limited". Archived from the original on 2009-12-31. பார்க்கப்பட்ட நாள் 2013-06-28.
  2. "How Safe are Natural Gas Vehicles?" (PDF). Clean Vehicle Education Foundation. Archived from the original (PDF) on 2008-05-28. பார்க்கப்பட்ட நாள் 2008-05-08.
  3. "How Safe is Natural Gas?". Archived from the original on 2016-09-18. பார்க்கப்பட்ட நாள் 2008-05-08.
  4. "Fighting CNG fires" (PDF). Archived from the original (PDF) on 2008-05-28. பார்க்கப்பட்ட நாள் 2008-05-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிவளி&oldid=4105842" இலிருந்து மீள்விக்கப்பட்டது