எருவை (புள்)

எருவை என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் புள்ளில் பல வகை உண்டு. எழால், கழுகு, கருடன், பருந்து, செம்பருந்து, வல்லூறு, புல்லூறு போன்றவை எருவைப் பறவையின் இனங்கள். எருவை என்னும் புல்லும் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படுகிறது.

சங்கப்பாடல்களில் எருவைப்புள்

தொகு
எருவை ஒரு புலால் உண்ணி.[1]
எருவையின் மூக்கு வளைந்திருக்கும்.[2]
கழுகு வேறு. செஞ்செவி எருவை வேறு.[3]
எருவை வேறு, பருந்து வேறு. எருவைக்குத் தலை பெரிதாக இருக்கும்.[4]
இரத்த நிறம் கொண்ட எருவை ஒருவகை.[5]
இதனைக் குருதி நிறம் கொண்ட எருவை என்னும் பொருள் படும்படிக் குருதி எருவை எனக் குறிப்பிடுவர். [6]
கழுத்து வெள்ளையாய் இருக்கும் எருவை இனமும் உண்டு.[7] இதனை இக்காலத்தில் கருடன் என்கின்றனர்.
பெண்-எருவையின் கழுத்தில் புள்ளிச் சிறகுகள் இருக்கும். ஆண்-எருவை எழால் என்னும் புல்லூறு-பறவையோடு சேர்ந்து பறப்பது உண்டு.[8]
எருவை உயிருள்ள மனிதர்களையும் தாக்கும்.[9]
காட்டு வழியில் செல்வோர் எருவையிடம் கவனமாக இருக்க வேண்டும். [10]
ஆண்-எருவையைச் சேவல் என்பர்.[11]
எருவையின் சிறகு வலிமையானது.[12]
பறையொலி கேட்டால் எருவை பறந்து ஓடும்.[13]
போர்க்களங்களில் இறந்தவர்களின் பிணத்தைத் தின்பதற்காக வானில் வட்டமிடும்.[14]
போர் வெற்றியின் அடையாளமாக நடப்படும் வெற்றித் தூணை எருவை தன் இருக்கையாகப் பயன்படுத்திக் கொள்ளும். [15]

அடிக்குறிப்பு

தொகு
  1. நிணன் அருந்து செஞ்செவி எருவை - புறம் 373
  2. கொடுவாய்ப் பேடைக்கு அல்கு இரை தரீஇய மான்று வேட்டு எழுந்த செஞ்செவி எருவை - அகம் 3
  3. கழுகொடு செஞ்செவி எருவை திரிதரும் - புறம் 370
  4. கொலைவில் ஆடவர் போலப், பலவுடன் பெருந்தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் அஞ்சுரம் – அகம் 97
  5. நெய்த்தோர் அன்ன செவ்விய எருவை - ஐங்குறுநூறு 335
  6. குரூஉச்சிறை எருவை குருதி ஆர - பதிற்றுப்பத்து 67
  7. வால்நிற எருத்தின் அணிந்த போலும் செஞ்செவி எருவை - அகம் 193
  8. புள்ளி எருத்தின் புன்புடை எருவைப்பெடை புணர் சேவல் குடுமி எழாலொடு கொண்டு கிழக்கு இழிய - பதிற்றுப்பத்து 36
  9. தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர செஞ்செவி எருவை அஞ்சுவர இறுக்கும் - அகம் 77
  10. இனம் தீர் எருவை ஆடு செவி நோக்கும் (வம்பலர்) - அகம் 285
  11. எருவைச் சேவல் - நற்றிணை 298
  12. எருவை இருஞ்சிறை இரீஇய - அகம் 291
  13. சிறுகுடி மறவர் சேக்கோள் தண்ணுமைக்கு எருவைச் சேவல் இருஞ்சிறை பெயர்க்கும் - அகம் 297
  14. பறந்தலை விசும்பு ஆடு எருவை - புறம் 64
  15. எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண் - புறம் 224
"https://ta.wikipedia.org/w/index.php?title=எருவை_(புள்)&oldid=2815118" இலிருந்து மீள்விக்கப்பட்டது