எவ்வொரா பொது நூலகம்
எவ்வொரா பொது நூலகம் போர்த்துகலில், எவ்வொரா மாவட்டத்தில் உள்ள எவ்வொரா நகரில் அமைந்துள்ளது. இது 1805 ஆம் ஆண்டில், ஒரு மதகுருவும் அறிஞருமான அதிமேற்றிராணியார் மனுவேல் என்பவரால் நிறுவப்பட்டது. இவர் போர்த்துக்கேய அறிவொளிக் காலத்தில் ஒரு பிரதிநிதியும் ஆவார். இந்த நூலகத்தில் இரண்டு நூற்றாண்டு வரலாற்றுச் சேகரிப்புகள் உள்ளன. இந்நூலகம், 2007 மார்ச் 29ன் 92 ஆம் இலக்கச் சட்டத்தின் படி பொது நூல்கள் நூலகங்கள் ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
வரலாறு
தொகுஇந்த நிறுவனத்துக்கான எண்ணக்கரு எவ்வொராவின் அதிமேற்றிராணியாராக இருந்த ஜோக்கிம் சேவியர் பொத்தெலோ டி லிமாவின் இறப்பைத் தொடர்ந்து தோன்றியது. இவர் இறக்கும்போது ஏராளமான் பெறுமதி வாய்ந்த நூல்களை விட்டுச் சென்றார். இவை ஏற்கெனவே கட்டப்பட்டு, வகை பிரிக்கப்பட்டு இருந்தன. 1802 ஆம் ஆண்டில் திருத்தந்தை மனுவேல், எவ்வொராவின் புதிய அதிமேற்றிராணியாராகத் தெரியப்பட்டர். 1803 ஆம் ஆண்டில் மேற்றிராணியார் அரண்மனையின் மேற்குப் பகுதியில் அமைந்திருந்த 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மண்டபம் நூலகத்துக்காகத் திருத்தப்பட்டது. அதே வேளை அதிமேற்றிராணியார் புதிய நூலகத்துக்கான பிற வேலைகளையும் செய்துவந்தார். 1805 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி, நூலகத்தின் தட்டுக்களில் முதல் நூலான the Polyglota Ximens வைக்கப்பட்டது என்று அதிமேற்றிராணியார் மனுவேல் தனது நாட்குறிப்பில் எழுதியுள்ளார். 1806 ஆம் ஆண்டு இளவரசு ஆட்சிப்பொறுப்பாளரான டொம் ஜான் இந்நூலகத்துக்கு வந்திருந்தார். அப்போது நூலகத்தில் ஏறத்தாள ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட நூல்கள் இருந்தன.
தீவக்குறைப் போரும் நூலகமும்
தொகுதீவக்குறைப் போரின்போது ஜெனரல் லூயிசு என்றி லொயிசன் தலைமையிலான நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் எவ்வொராவில் முகாமிட்டு நகரைச் சூறையாடின (யூலை 1808). அப்போது படையின் மூத்த அதிகாரிகள் அதிமேற்றிராணியாரின் அரண்மனையில் தங்கியிருந்தனர். அவர்களிற் சிலர் அங்கிருந்த பல நூல்கள் கையெழுத்துப்படிகள் போன்றவற்றைச் சேதமாக்கியதுடன், உரோமர், விசிகோத்துகள், முசுலிம்கள், போர்த்துக்கேயர் ஆகியோரின் காலங்களைச் சேர்ந்தனவாக அங்கிருந்த நாணயங்கள், தங்கம், வெள்ளி ஆகியவற்றாலான பதக்கங்கள் போன்றவற்றையும் கொள்ளையடித்தனர்.
இக்காலத்தின் பின்னர் திருத்தந்தை செனாக்கிளின் மனுவேலின் முயற்சியால் நூலகம் மீளமைக்கப்பட்டு 1811 செப்டெம்பர் 21 ஆம் தேதி அதற்கான சட்டவிதிகளும் வெளியிடப்பட்டன. இவர் 1814 ஆம் ஆண்டு சனவரி 24 ஆம் தேதி காலமானார். அப்போது நூலகத்தில் மூன்று இலட்சம் நூல்களுக்கு மேல் இருந்ததன.
ஆங்கிலேய உள்நாட்டுப்போரும் நூலகமும்
தொகுஆங்கிலேய உள்நாட்டுப் போர்க் காலத்தில் (1828 - 1834), 1832 ஆம் ஆண்டில், சிசுட்டேர்சிப் பிரிவுக் குருமடத்தில் வரலாற்றெழுத்தர், திருத்தந்தை புனித பொனாவென்ச்சரின் போர்ட்டுனாட்டோ நூலகத்தை மூடுமாறு உத்தரவிட்டதுடன் பணியாளர்களையும் நீக்கிவிட்டார். 1834ல் அதனை எசுட்ரெமோசு நகருக்கு அகற்றுமாறும் ஆணையிட்டார். சில நூல்கள் வண்டிகளில் போர்த்துகலின் முதலாம் மிகேலின் படைகளுடன் எடுத்துச்செல்லப்பட்டன. இவர் உரோமில் நாடுகடந்து வாழ்ந்த காலத்தில் இறந்தபின்னர் இந்நூல்கள் காணாமல் போய்விட்டன.
காலப்போக்கில், நன்கொடைகள் மூலமும், விலை கொடுத்து வாங்குவதன் மூலமும் நூல்கள் சேகரிக்கப்பட்டன. 1834ல் இல்லாது போய்விட்ட குருமடங்களின் நிதிகளும் இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டன.
புதுக் காலம்
தொகுபோர்த்துகலில் தாராண்மைவாதம் நடைமுறைக்கு வந்த பின்னர், இந்த நூலகம் பொது நிறுவனம் ஆகியது. இதன் முதலாவது நூலகராக, மருத்துவரும் நில உடைமையாளருமான சோக்கிம் ட கூஞ்ஞ ரிவேரா எலியோடோரசு (1838 - 1855) போர்த்துகலின் இரண்டாவது மரியாவால் பதவியில் அமர்த்தப்பட்டார். இவர் காலத்தில் இந்நிறுவனம் முறையான ஒழுங்கமைப்பும், உறுதிநிலையும் கொண்டு அமைந்தது. புதிய கட்டிடங்களும் அமைக்கப்பட்டு நூலகம் விரிவாக்கப்பட்டது. எவ்வொரா பொது நூலகக் கையெழுத்துப்படிகளுக்கான விபரப் பட்டியல் உருவாக்கம் இவர் காலத்திலேயே தொடங்கியது எனினும் 1871 ஆம் ஆண்டிலேயே இது நிறைவு பெற்றது. அகசுத்து பிலிப்பே சிமோய்சு (Augusto Filipe Simões) (1864 - 1872) என்னும் நூல்கத்தின் பணிப்பாளர் ஒருவரும் அதன் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்காற்றினார். நெருக்கடியாகவும், போதிய பராமரிப்பு இன்றிச் சிதையும் நிலையில் இருந்த இதை ஒழுங்கமைத்ததுடன், புதிய அறைகளையும் அமைத்து விரிவாக்கினார்.
1916 ஆம் ஆண்டில், இந்நூலகமும், எவ்வொரா மாவட்ட ஆவணக் காப்பகமும் இணைக்கப்பட்டு, "எவ்வொரா பொது நூலகமும் மாவட்ட ஆவணக் காப்பகமும்" என்னும் பெயர் கொண்ட நிறுவனம் உருவானது. எனினும், 1997 ஆம் ஆண்டில் பொது நூலகமும், ஆவணக் காப்பகமும் பிரிக்கப்பட்டுத் தனித்தனி நிறுவனங்கள் ஆயின.
உள்ளடக்கம்
தொகுபோர்த்துகலில், மிகப் பழையவற்றுள் ஒன்றும், நல்ல நிதிவளம் கொண்டதுமாகக் கருதப்படும் எவ்வொரே பொது நூலகம், தொடக்ககால அச்சுமுறையில் அமைந்த 664 நூல்களையும், 16ம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட 6445 நூல்களையும், ஏராளமான கையெழுத்துப்படிகள், நிலப்படங்கள் போன்றவற்றையும், 20,000 தலைப்புக்களிலான சஞ்சிகைகளையும், கொண்டுள்ளது. இந்த நூலகத்திலுள்ள மொத்த நூல்களின் எண்ணிக்கை 612,000க்கும் அதிகம் ஆகும்.