எஸ்தாக்கியார் நாடகம்

நாட்டுக் கூத்து தொகு

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்க் கத்தோலிக்க மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற கலைநிகழ்ச்சி கிறித்தவ புனிதர்கள் மற்றும் அடியார்களின் வரலாற்றை எடுத்துக் கூறுகின்ற நாடகம் ஆகும். இது நாட்டுக் கூத்து என்றும் அழைக்கப்பட்டது. இவ்வகை நாடகங்கள்/நாட்டுக்கூத்துகள் பல யாழ்ப்பாணத்தில் படைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, தேவசகாயம்பிள்ளை நாடகம், ஞானசவுந்தரி நாடகம், மரியதாசன் நாட்டுக்கூத்து, விசய மனோகரன் நாட்டுக்கூத்து, எஸ்தாக்கியார் நாடகம் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

எஸ்தாக்கியார் வரலாறு தொகு

இவண் எஸ்தாக்கியார் நாடகம் பற்றி சில தகவல்களைப் பார்ப்போம். எஸ்தாக்கு/எஸ்தாக்கியார் என்னும் பெயருக்கு இணையான ஆங்கில வடிவம் Eustace/Eustachius/Eustathius (Greek: Ευστάθιος Eustathios, "good stability" or "fruitful")என்பதாகும். இவரைப் பற்றி மரபுவழி வந்த கதைக்கு வரலாற்று அடிப்படை இல்லை என்னும் காரணத்தால் இவரது பெயர் கத்தோலிக்கத் திருச்சபையின் வழிபாட்டு நாட்காட்டியிலிருந்து 1969இல் நீக்கப்பட்டது. "துணை நல்கும் பதினான்கு புனிதர்கள்" (Fourteen Holy Helpers) என்னும் வரிசையில் இவர் பெயர் உண்டு. எனவே பல காலமாக மக்கள் இவருக்கு வணக்கம் செலுத்தி, உதவி நாடிச் சென்றிருக்கிறார்கள்.

 
புனித எஸ்தாக்கியார் - 13ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து சுவடி - வெனிசு நகர்

புனித எஸ்தாக்கியார் வணக்கம் தமிழ் நாட்டில் குறிப்பாகத் தென்மாவட்டங்களிலும், ஈழத் தமிழரிடையேயும் நிலவியது. அவ்வணக்கத்தைப் பரப்பியதில் "எஸ்தாக்கியார் நாடகம்" பெரும்பங்கு வகித்தது.

எஸ்தாக்கியார் பற்றிய மரபுக் கதை இதோ: கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் பிலாசிது (Placidus) என்னும் பெயர் கொண்ட உரோமைப் படைத் தலைவர் ஒருவர் இருந்தார். அவர் திரையானு (Trajan) என்ற உரோமைப் பேரரசனின் கீழ் பணிபுரிந்துவந்தார். தம் மனைவியோடும் இரு பிள்ளைகளோடும் காட்டில் வேட்டையாடச் சென்ற அவர் அழகிய கலைமான் ஒன்றைக் கண்டு அதைப் பிடிப்பதற்காக துரத்திச் சென்றார். அதன் கொம்புகளுக்கு நடுவே ஒளிமயமான ஒரு சிலுவை தோன்றியதைக் கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துபோனார். கிறித்தவ சமயத்தைத் தழுவ கடவுள் தம்மை அழைக்கின்றார் என்று உணர்ந்த அவர் திருச்சபையில் திருமுழுக்கு (ஞானஸ்நானம்) பெற்று "எஸ்தாக்கு" என்னும் பெயரைச் சூடிக்கொண்டார். அவருடைய குடும்பத்தாரும் கிறித்தவராயினர்.

மகிழ்ச்சியோடு குடும்பம் நடாத்திய எஸ்தாக்கியாருக்குத் துன்பங்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தன. விவிலியத்தில் வருகின்ற "யோபு" (Job) என்னும் நேர்மையாளருக்கு நேர்ந்ததுபோல எஸ்தாக்கியாரின் செல்வமெல்லாம் பறிபோயிற்று; அவருடைய மனைவியாரைப் பிடித்துக்கொண்டு போயினர்; தம் இரு பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு ஓர் ஆற்றைக் கடந்துசென்ற வேளையில் அவர்தம் அன்பு மக்களை ஓநாயும் சிங்கமும் இழுத்துச் சென்றுவிட்டன. இத்துயரங்களுக்கு நடுவிலும் எஸ்தாக்கியார் கடவுள் மீது கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையை இழக்கவில்லை. இறுதியாக, கடவுளின் திருவருளால் அவர் தாம் இழந்த அனைத்தையும் திரும்பப் பெற்றார். இத்தோடு "எஸ்தாக்கியார் நாடகம்" முற்றுப்பெறுகிறது.

ஆதிரியன் (Hadrian) பேரரசன் காலத்தில் எஸ்தாக்கியார் தம் கிறித்தவ நம்பிக்கையில் உறுதியாயிருந்ததால் கொலைத்தண்டனைக்கு ஆளானார் என்பது மரபுவழி வரலாறு.

பாடிய புலவர் தொகு

எஸ்தாக்கியார் நாடகத்தைப் பாடியவர் மதுரகவிப்புலவர் மாதகல் வ. சூசைப்பிள்ளை (1877-1955). பாடுவித்தவர் யாழ்ப்பாணத்தைச் சார்ந்த ம.கி. பொன்னுத்துரை. பாடப்பட்ட ஆண்டு 1903. பல இடங்களில் நடிக்கப்பட்ட அந்த "நாட்டுக்கூத்து" முதல் முறையாக 1928இல் அச்சேறியது. நூலைப் பார்வையிட்டு, நாடகமாக நடிப்பதற்கு இசைவு வழங்கியவர் நல்லூர் ஞானப்பிரகாச அடிகளார் என நூலில் காணப்படுகிறது.

மேலும், பாடலாசிரியர் இயற்கைப் புலமை மிக்கவராகத் திகழ்ந்தார் என்றும், இவரது புலமைத் திறனைக் கண்டுணர்ந்த மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் இவருக்கு "மதுரகவிப் புலவர்" என்னும் பட்டமளித்துச் சிறப்பித்தனர் என்றும், அவரது பிற படைப்புகள் சங்கிலியன் நாடகம், கருங்குயிற் குன்றத்துக் கொலை நாடகம் முதலியவாகும் எனவும் நூல் தொடக்கத்தில் உள்ளது.

உசாத்துணை தொகு

மதுரகவிப் புலவர் மாதகல் வ. சூசைப்பிள்ளை, எஸ்தாக்கியார் நாடகம், யாழ்ப்பாணம் 1928 (1962).

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்தாக்கியார்_நாடகம்&oldid=1496284" இலிருந்து மீள்விக்கப்பட்டது