ஐக்கிய நாடுகள் பண்பாட்டு மரபு ஆண்டு

2002 ஆம் ஆண்டை அனைத்துலகப் பண்பாட்டு மரபு ஆண்டு என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 2001 நவம்பர் 21 ஆம் தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் (56/8) நிறைவேற்றப்பட்டது[1]. இக் கடைப்பிடிப்பில் முதன்மை நிறுவனமாகச் செயல்படும்படி யுனெசுக்கோவை அத் தீர்மானம் கேட்டுக்கொண்டது. "இணக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் முன்னுரிமை" என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள்.

பின்னணி

தொகு

ஆப்கானிசுத்தானில் இருந்த மிகவும் பெரியவையும், தொல்லியல் முக்கியத்துவம் கொண்டவையுமான பாமியன் புத்தர் சிலைகளை அந்நாட்டின் அப்போதைய அரசு அழித்ததைத் தொடர்ந்து, 2001 ஆம் ஆண்டு அக்டோபரில், யுனெசுக்கோ பொது மாநாட்டில் இது தொடர்பான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்தே ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆப்கானிசுத்தானில் இடம்பெற்ற நிகழ்வு உலக அபிப்பிராயத்தை ஆழமாக உலுக்கிவிட்டதுடன், இது ஒரு பண்பாட்டுக்கு எதிரான குற்றத்தின் சின்னமாகவும் கருதப்பட்டது. எனினும், ஆப்கானிசுத்தானில் மட்டுமன்றி பண்பாட்டுக்கு எதிரான குற்றங்கள் பல அண்மைக் காலத்தில் நிகழ்ந்துள்ளன. 1998 -1999 காலப்பகுதியில் கொசோவோவில் இடம்பெற்ற இன அழிப்பு நடவடிக்கைகளின் போது பல இசுலாமிய மரபுச் சின்னங்கள் அழிக்கப்பட்டன. இது போலவே, 1991-1999 காலப் பகுதியில் முன்னாள் யூகோசுலாவியப் பகுதியில் இடம்பெற்ற சண்டைகளின் போது பண்பாட்டுச் சின்னங்கள் வேண்டுமென்றே இலக்கு வைத்து அழிக்கப்பட்டன.

இவ்வாறு பண்பாட்டு மரபுச் சின்னங்கள், போர்களின்போது இராணுவ இலக்குகளாகவும்; அரசியல், இன, மத முரண்பாடுகளின்போது தாக்குதலுக்கு உள்ளாவனவாகவும் இருக்கின்றன. ஆனால், போர் முடிந்து அமைதி திரும்பும்போது, இத்தகைய சின்னங்களையும், பண்பாட்டு வெளிகள், பண்பாட்டு வெளிப்பாட்டு வடிவங்கள் முதலியவற்றையும் மீளக் கட்டுவது, தேசிய இணக்கப்பாட்டுக்கான வழிமுறைகளைப் பலப்படுத்துவதற்கும், பொருளாதார நடவடிக்கைகளை மீள்விப்பதற்கும் உதவக்கூடும். இவற்றை அடிப்படையாக வைத்தே இணக்கப்பாட்டையும், வளர்ச்சியையும் கருப்பொருளாகக் கொண்டு பண்பாட்டு மரபு ஆண்டு அறிவிக்கப்பட்டது.

குறிப்புக்கள்

தொகு
  1. ஐக்கிய நாடுகள் பொதுச் சபைத் தீர்மானம் A/RES/56/8

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு