ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு என்பது 18 வல்லுனர்களை உள்ளடக்கிய ஒரு ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகும். குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் பன்னாட்டு ஒப்பந்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அவையின் 162 உறுப்பு நாடுகளிடமிருந்து பெறப்படும் அறிக்கைகளை ஆராய்வதும், விருப்பு நடபடிகளுக்கு அடங்கிய 112 நாடுகள் தொடர்பான முறையீடுகளை ஆய்வு செய்வதும் இக் குழுவின் பணி. இக் குழு ஆண்டுக்கு மூன்று முறை கூடுகிறது. வசந்த காலத்தில் நியூ யார்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அவையின் தலைமை அலுவலகத்திலும், கோடையிலும், இலையுதிர் காலத்திலும் செனீவாவில் உள்ள அலுவலகத்திலும் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இக் குழு ஐக்கிய நாடுகள் அவையுடன் தொடர்புடையனவும், வெவ்வேறு மனித உரிமைகள் ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட 9 மனித உரிமைகள் ஒப்பந்த அமைப்புக்களில் ஒன்று.[1][2][3]

மனித உரிமைகள் குழு, பட்டய அடிப்படையிலான உயர்மட்ட அமைப்பான மனித உரிமைகள் ஆணையம் அல்லது அதன் மாற்றீடாக உருவான மனித உரிமைகள் மன்றத்திலிருந்தும் வேறானது. மனித உரிமைகள் குழுவின் உறுப்பினர்கள் நல்லொழுக்கம் உடையவர்களாகவும், மனித உரிமைகள் துறை தொடர்பில் தகுதி வாய்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும். இவர்களை உறுப்பு நாடுகளே தெரிவு செய்கின்றனவெனினும், இவர்கள் நாடுகளின் சார்பாளர்களாக அல்லாமல் தனிப்பட்ட முறையிலேயே தெரிவு செய்யப்படுகின்றனர்.

இதன் முதலாவது விருப்பு நடபடிகளை 112 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இதன்படி மேற்படி நாடுகளின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள், அந்தந்த நாடுகளில் குறித்த மனித உரிமை ஒப்பந்தங்கள் மீறப்பட்டுள்ளனவா என்பதை தீர்மானிப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவிடம் முறையிடலாம். இந்நாடுகளைப் பொறுத்தவரை மனித உரிமைகள் குழு, மனித உரிமைகள் மீறலுக்கான ஒரு குறை தீர்க்கும் பொறிமுறையாகச் செயல்படுகிறது. முதலாவது மனித உரிமைகள் நடபடி 1976 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.

இதன் இரண்டாவது விருப்பு நடபடி மரணதண்டனை ஒழிப்புத் தொடர்பானது. இது 1991 ஆம் ஆண்டு சூலை 11 ஆம் தேதியில் இருந்து நடைமுறையில் உள்ளது. இந்த நடபடியை 71 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Jakob Th. Möller/Alfred de Zayas, The United Nations Human Rights Committee Case Law 1977-2008, N.P.Engel Publishers, Kehl/Strasbourg, 2009, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-88357-144-7
  2. "Monitoring the core international human rights treaties". United Nations Human Rights. Office of the High Commissioner. பார்க்கப்பட்ட நாள் 30 June 2016.
  3. "United Nations Human Rights Committee". 14 January 2014.