ஐடா இசுகட்டர்
ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் (Ida Sophia Scudder, டிசம்பர் 9, 1870 – மே 23, 1960) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் மருத்தவராவார். இவர் வேலூரில் உள்ள கிருத்தவ மருத்துவக் கல்லூரியை நிறுவியதற்காக அறியப்படுகிறார்.
இளமைப்பருவம்
தொகுஇவரது பெற்றோர் அமெரிக்காவைச் சேர்ந்த, ஜான் ஸ்கடர் - சோஃபியா வெல்ட் ஸ்கடர் ஆவர். இவரின் தந்தையும் ஒரு மருத்தவராவார். அவர்கள் இராணிப்பேட்டையில் தங்கி மருத்துவத் தொண்டு புரிந்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் 1870 திசம்பர் 9 இல் பிறந்தார். எட்டு வயதுவரை தமிழ்நாட்டின் இராணிப்பேட்டையில் வளர்ந்த ஐடா பிறகு தன் பெற்றோர்களுடன் தாயகமான அமெரிக்காவுக்குச் சென்றார். அதன்பின் சமயத் தொண்டுக்காக சப்பான் நாட்டுக்குப் பயணமானார். அதனால் நார்த் பீல்டில் உள்ள கிறித்துவப் பெண்கள் பள்ளியில் சேர்ந்து விடுதியில் தங்கியிருந்து படிப்பைத் தொடர்ந்தார். பள்ளி இறுதித் தேர்வெழுதிய நிலையில் உடல்நிலை சரியில்லாத தாயாரைப் பார்பதற்காக இந்தியாவுக்குப் புறப்பட்டு வந்தார்.
அப்போது ஒருநாள் இரவு அந்தணர், முஸ்லிம், இந்து சமயத்தை சார்ந்தவர்கள் தங்கள் மனைவிகளின் பிரசவ உதவிக்காக அவர்கள் வீட்டுக்கு வந்து, ஐடாவை பெண் மருத்துவராக கருதி உதவ வேண்டினர். அவர்களிடம் தான் மருத்துவர் இல்லை என்றும், மருத்துவரான தன் தந்தையை அழைப்பதாகச் சொன்னார் ஆனால் அவர்கள் ஆண் மருத்தரிடம் காட்ட விரும்பாமல் திரும்பிச் சென்றனர். மறுநாள் அந்த மூன்று பென்களும் பிரசவத்தின்போது இறந்து அவர்களுடைய சவஊர்வலங்கள் சென்றன அதைக் கண்ட ஐடா வருந்தினார்.
இந்தியப் பெண்களின் அவலநிலை குறித்து ஆழமாகச் சிந்தித்த ஐடா மருத்துவம் படித்து மறைப்பணியில் ஈடுபட விரும்புவதாக தன் பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் மருத்துவம் படிக்க அமெரிக்கா சென்ற ஐடா ஸ்கடர், பிலடெல்ஃபியா மருத்துவக் கல்லூரியில் 1895 இல் சேர்ந்தார். மருத்துவப் படிப்பு முடிந்ததும், வேலூரில் பெண்களுக்கென மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஐடாவுக்கு இருந்தது. மருத்துவமனை தொடங்க எட்டாயிரம் அமெரிக்க டாலர்கள் தேவைப்பட்டது. நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது ஷெல் என்ற முதியவர் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கான காசோலையை ஐடாவிடம் தந்து, என் அன்பு மனைவி மேரி டேபர் ஷெல்லின் நினைவாக, வேலூரில் பெண்கள் மருத்துவமனை அமைக்க நிதியுதவி அளிக்கிறேன். அவர் உயிரோடு இருந்திருந்தாலும் உதவி செய்திருப்பார் என்று கூறினார்.
வேலூரில் மருத்துவமனை
தொகுதோழி ஆனி ஹான்காக்குடன் 1900 சனவரி மாதம் வேலூருக்கு வந்தார் ஐடா. இருவரும் மருத்துவப் பணியை உடனடியாகத் தொடங்கினர். கூடவே மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணியும் தொடங்கியது. திட்டமிட்டபடி நாற்பது படுக்கைகளுடன் பெண்களுக்கான மேரி டேபர் ஷெல் நினைவு மருத்துவமனை தொடங்கப்பட்டது. 1904 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் பரவியபிளேக் நோயைத் தடுப்பதில் டாக்டர் ஐடா பெரும் பங்கேற்றார்.
அப்போது போதிய பயிற்சி பெற்ற செவிலியர்கள் இல்லாதது, ஐடாவின் மருத்துவப் பணிக்குப் பெருந்தடையாக இருந்தது. இதன் தொடர்ச்சியாக செவிலியர் பயிற்சிப் பள்ளி ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ஐடாவின் மனதில் உதித்தது. செவிலியர் பள்ளியைத் தொடங்குவதற்கான பணியை ஐடா ஸ்கடர் 1908 இல் தொடங்கினார். சுற்றுவட்டார மிஷன் பள்ளிகளில் படித்த ஐந்து மாணவிகளுடன் செவிலியர் பயிற்சி பள்ளியைத் தொடங்கினார்.
மருத்துவக் கல்லூரி
தொகு1913-லேயே பெண்களுக்கென ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கவேண்டுமென்று டாக்டர் ஐடா திட்டமிட்டு அவர் எண்ணத்தை வெளியிட்டார். ஐடாவின் எண்ணத்தை, தென்னிந்திய மறைப்பணி மன்றம் ஏற்றுக்கொண்டது. வேலூரில் பெண்களுக்கான மருத்துவக் கல்லூரி தொடங்குவது என்றும் அதற்கு ஐடாவே முதல்வராக இருக்க வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்காக 200 ஏக்கர் நிலமும் தயாராக இருந்தது.
1914 இல் நெடு விடுப்பில் ஐடா அமெரிக்காவுக்குச் சென்றார். அதேநேரம் முதல் உலகப் போர் மூண்டது. 1915 இல் கடுமையான போர்ச் சூழலில் இந்தியா திரும்பிவந்தார், மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணியைத் விரைவுப்படுத்தினார் இதையணுத்து 1918 இல் பட்டைய மருத்துவப் படிப்புடன் பெண்களுக்கான மருத்துவப் பள்ளி நடத்துவதற்கான அனுமதியானது, சென்னை மாகாண மருத்துவத் துறை தலைவர் கர்னல் பிரைசனிடமிருந்து பெற்றார். 1918 ஆகத்து 12 இல் ஒன்றழய மறைப்பணி பள்ளியை சென்னை மாகாண கவர்னர் பென்ட்லண்ட் பிரபு தொடங்கி வைத்தார். 1948 இல் யூனியன் மருத்துவப் பள்ளி, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதுதான், பெண்களுடன் ஆண்களும் மருத்துவம் படிக்கத் தொடங்கினர்.[1]
விருதுகள்
தொகு- அம்மையாரைப் போற்றும்விதத்தில் இந்திய அரசு கெய்சர்-இ-இந்து என்ற பொற்பதக்கத்தை அளித்தது
- அமெரிக்கா 1935இல் டி.எஸ்ஸி பட்டம் அளித்துக் கௌரவித்தது. மேலும் எப் ஏசிஎஸ் என்னும் ஒரு மதிப்பியல் பட்டத்தையும் உவந்து தந்தது.
மறைவு
தொகு1960 மே 24 அன்று ஐடா கொடைக்கானலில் தம் தொண்ணூறாவதுவயதில் இயற்கை எய்தினார்.[2]
வெளியிணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ வ. செந்தில்குமார் (12 மே 2018). "சி.எம்.சி. 100: தென்னக மருத்துவப் பெருமிதம்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 12 மே 2018.
- ↑ அகிலம் போற்றும் அற்புதபெண்கள்எஸ.சரஸ்வதிதாமரைபப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.41-னுசிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,அம்பத்தூர்,சென்னை– 600 098.