ஆக்சிசனேற்றி
ஆக்சிசனேற்றி அல்லது ஒக்சியேற்றி (Oxidizing agent) என்பது ஒடுக்க-ஏற்ற வேதிவினையின் போது எதிர்மின்னிகளை (எலக்ட்ரான்களை) ஏற்கக் கூடிய தாக்கி ஆகும். ஒரு வினையில் ஆக்சிசனேற்றி ஒடுக்கமடையும். பெரும்பாலான ஆக்சிசனேற்றிகளின் மூலக்கூறில் ஆக்சிசன் இருக்கும். எனினும் ஆற்றல் வாய்ந்த ஆக்சிசனேற்றியான புளோரினின் மூலக்கூறு வாய்பாடில் ஆக்சிசன் இல்லை. ஃபுளோரின் ஓர் எலக்ட்ரான் ஏற்பி ஆகும்.[1][2][3]
பிரதான இயல்புகள்
தொகு- தாக்கத்தின் போது மற்றைய தாக்கியிடமிருந்து இலத்திரன்களை ஏற்றுக் கொண்டு ஒக்சியேற்றி தாழ்த்தப்படும் (ஒடுங்கும்).
- இலத்திரன்களை வழங்கி தான் ஒக்சியேற்றமடையும் தாக்கி ஒடுக்கி அல்லது தாழ்த்தியாகும்.
- ஒக்சியேற்றி செயற்படும் போது அதன் அணுக்களின் ஒக்சியேற்றும் எண் மாற்றமடையும்.
- தாக்கிகளின் ஒக்சியேற்றும் நிலை மாறுபடும் போதே ஒடுக்க-ஏற்ற வேதிவினைத் தாக்கம் நடைபெறும்.
ஒக்சியேற்றலுக்கான உதாரணங்கள்
தொகுமக்னீசியம் ஒக்சிசனோடு தாக்கமடைந்து மக்னீசியம் ஒக்சைட்டை உருவாக்கல்:
2Mg + O2 → 2MgO
இங்கு தாக்கத்துக்கு முன்பு மக்னீசியத்தின் ஒக்சியேற்றும் எண்ணான 0 தாக்கத்தின் இறுதியில் 2+ ஆக மாற்றமடையும். ஒக்சிசனின் ஒக்சியேற்றல் எண் 0இலிருந்து 2- ஆக மாற்றமடைந்துள்ளது. இங்கு உண்மையில் இரு அரைத் தாக்கங்கள் நடைபெற்றுள்ளன.
- ஒக்சியேற்றல் அரைத் தாக்கம்: 2Mg → 2Mg2+ + 4e−
- தாழ்த்தல் அரைத் தாக்கம்: 2O2 + 4e− → 4O2−
இத்தாக்கத்தில் மக்னீசியம் தாழ்த்தியாகவும், ஒக்சிசன் ஒக்சியேற்றியாகவும் தொழிற்பட்டுள்ளன. இங்கு ஒக்சிசன் தாழ்த்தப்பட்டு, மக்னீசியம் ஒக்சியேற்றப்பட்டுள்ளது. ஒக்சியேற்றமடையும் போது மக்னீசியத்தின் ஒக்சியேற்றும் எண் அதிகரித்துள்ளதுடன், ஒக்சியேற்றியான ஒக்சிசனின் ஒக்சியேற்றும் எண் குறைவடைந்துள்ளது. எனினும் தாக்கிகளினதோ, விளைவுகளினதோ மொத்த ஒக்சியேற்றும் எண் 0 ஆகும்.
பொதுவான ஒக்சியேற்றிகள்
தொகுஒரு தாக்கம் நடைபெறும் போது மாத்திரமே ஒரு வேதிப் பொருளை தாழ்த்தி என்றோ ஒக்சியேற்றி என்றோ பிரித்தறிய முடியும். எனினும் பின்வரும் பதார்த்தங்கள் பொதுவாக ஒடுக்க-ஏற்ற வேதிவினையின் போது ஒக்சியேற்றிகளாகச் செயற்படக் கூடியன. இவை தாக்கமடையாத போது ஒக்சியேற்றி என அழைக்கப்பட மாட்டா. அனைத்துத் தாக்கங்களிலும் இவை ஒக்சியேற்றும் என்றும் வரையறுக்க முடியாது. எனினும் பொதுவான அவதானங்களைக் கொண்டு இவை இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன:
- ஆக்சிசன் (O2)
- ஓசோன் (O3)
- ஐதரசன் பரவொக்சைட்டும் (H2O2) வேறு அசேதன பரவொக்சைட்டுகள்
- ஃபுளோரின் (F2), குளோரீன் (Cl2), மற்றும் வேறு ஹலோஜன்கள்
- நைத்திரிக் அமிலம் (HNO3) மற்றும் நைத்திரேற்றுச் சேர்மங்கள்
- சல்பூரிக் அமிலம் (H2SO4)
- பர ஒக்சி இருசல்பூரிக் அமிலம் (H2S2O8)
- பரஒக்சி ஒற்றைச் சல்பூரிக் அமிலம் (H2SO5)
- குளோரைட்டு, குளோரேற்று, பரகுளோரேற்று மற்றும் இது போன்ற மற்றைய ஹேலோஜன்களின் சேர்மங்கள்
- ஹைப்போ குளோரைட்டுக்கள். உ-ம்: வெளிற்றும் தூளிலுள்ள சோடியம் ஹைப்போகுளோரைட்டு (NaClO).
- குரோமேற்று மற்றும் இருகுரோமேற்றுச் சேர்மங்கள்
- பரமங்கனேற்றுச் சேர்வைகள் உ-ம்: பொட்டாசியம் பரமங்கனேற்று
- சோடியம் பரபோரேற்று
- நைத்திரஸ் ஒக்சைடு (N2O)
- வெள்ளி ஒக்சைடு (Ag2O)
- ஒசுமியம் டெட்ரா ஒக்சைடு (OsO4)
ஒக்சியேற்றிகளின் விளைவுகள்
தொகுஇரசாயன தாக்கத்தின் போது ஒக்சியேற்றி தாழ்த்தப்பட்டுக் குறைந்த ஒக்சியேற்றும் எண்ணுடைய (மறைப் பெறுமானம்) விளைவைத் தோற்றுவிக்கும். பொதுவான ஒக்சியேற்றிகள் தாழ்த்தியால் தாழ்த்தப்படும் போது கிடைக்கும் விளைவுகள்:
ஒக்சியேற்றி | தாக்க விளைவுகள் |
---|---|
O2 ஆக்சிசன் | பல்வேறு ஒக்சைட்டுகள். உ-ம்: H2O, CO2 |
O3 ஓசோன் | கீட்டோன்கள், அல்டீகைட்டுக்கள், H2O மற்றும் பல. |
F2 புளோரீன் | F− |
Cl2 குளோரீன் | Cl− |
Br2 புரோமின் | Br− |
I2 அயோடின் | I−, I3− |
ClO− ஹைப்போ குளோரைட்டு | Cl−, H2O |
ClO3− குளோரேற்று | Cl−, H2O |
HNO3 நைத்திரிக் அமிலம் | NO நைத்திரிக் ஒக்சைடு NO2 நைதரசனீர் ஒக்சைடு |
CrO42− குரோமேற்று Cr2O72− இருகுரோமேற்று |
Cr3+, H2O |
MnO4− பரமங்கனேற்று MnO42− மங்கனேற்று |
Mn2+ (அமிலம்) அல்லது MnO2 (காரத் தன்மையானது) |
H2O2 மற்றும் ஏனைய பரவொக்சைட்டுக்கள் | பல்வேறு ஒக்சைடுக்களும், H2Oவும் |
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ N. G. Connelly, W. E. Geiger (1996). "Chemical Redox Agents for Organometallic Chemistry". Chemical Reviews 96 (2): 877–910. doi:10.1021/cr940053x. பப்மெட்:11848774.
- ↑ வார்ப்புரு:March6th
- ↑ Australian Dangerous Goods Code, 6th Edition