ஒக்டோபர் எழுச்சி (இலங்கை)

சுண்ணாக எழுச்சி அல்லது ஒக்டோபர் எழுச்சி என்பது தீண்டாமைக்கும், சாதியத்துக்கும் எதிராக யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்ட ஊர்வலமும், அதைத் தொடர்ந்த எழுச்சியையும் குறிக்கிறது. தீண்டாமைக்கு எதிரான இந்தப் போராட்டத்தை இடதுசாரிகள், குறிப்பாக இலங்கைப் பொதுவுடமைக் கட்சி (சீன சார்பு) முன்னெடுத்தனர். சட்ட அனுமதி காவல்துறையினரிடம் கேட்கப்பட்ட போதும், அது தரப்படவில்லை. எனினும் ஊர்வலம் ஒக்டோபர் 21, 1966 ம் திகதி, சுண்ணாகத்தில் இருந்து புறப்பட்டு, யாழ் முற்றவெளி நோக்கி தொடங்கியது. அந்த ஊர்வலத்தை தடுத்த காவல்துறையினர், ஊர்வலத்தில் கலந்து கொண்டோரைக் கடுமையாகத் தாக்கினர், பலரைக் கைது செய்யதனர். இதைத் தொடர்ந்து, கலந்து கொண்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் நிலை உருவானது. இதைத் தவிர்க்க முழக்கங்கள் இன்றி ஊர்வலத்தைத் தொடர காவல்துறை அனுமதித்தது. ஊர்வலம் தொடர மேலும் பல மக்கள் சேர்ந்து கொண்டனர், மீண்டும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கொட்டும் மழையிலும் கூட்டம் முற்றவெளியில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வும், இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட போராட்டங்களுமே ஒக்டோபர் எழுச்சி என்று ஈழத்தில் அறியப்படுகிறது.[1]

பின்புலம்

தொகு

யாழ்ப்பாணத்தில் 1960 களிலும் தீண்டாமை பொது இடங்களிலும் தீவரமாகக் கடைப் பிடிக்கப்பட்டு வந்தது. தாழ்த்தப்பட்டோர் பல கோயில்களுக்குள் செல்ல முடியாது, பல பாடசாலைகளில் படிக்க முடியாது, பொது உணவகங்களில் உணவு உண்ண முடியாது, பொதுக் கிணற்றையோ, குளத்தையோ பயன்படுத்த முடியாது என பல விதங்களில் தீண்டாமை வெளிப்பட்டது. தீண்டாமை சாதியத்தின் கோர வெளிப்பாடாக இருந்தது. இது மிக மோசமான முறையில் யாழ்ப்பாணத்திலேயே வெளிப்பட்டது. இதனை எதிர்த்து நீண்ட காலமாக எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. எனினும் 1960 களில் சர்வதேசப் புரட்சிச் சூழ்நிலை, இந்தத் தளத்திலும் எதிர்ப்புப் போராட்டங்களைக் கூர்மைப்படுத்தியது. அதன் ஒரு திருப்பு முனையாக ஒக்டோபர் எழுச்சி பார்க்கப்படுகிறது.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. சி. கா செந்திவேல், ந. இரவீந்திரன். 1989). இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும். சென்னை: தெற்குப் பதிப்பகம்.