ஒப்பிலாமணிப் புலவர்
ஒப்பிலாமணிப் புலவர் என்னும் புலவர் பாடியனவாக 27 பாடல்கள் புறத்திரட்டு நூலில் உள்ளன. அவற்றில் ஒன்று ஆசிரியப்பா. மற்றொன்று விருத்தம். ஏனையவை வெண்பாக்கள். இப் புலவர் ஊர் ஊராகச் சென்று அவ்வூரில் குடிகொண்டுள்ள இறைவனைப் போற்றிச் சுவை ததும்பும் பாடல்களைப் பாடியுள்ளார். இவரது பாடல்களின் நடை இவரைப் 18 ஆம் நூற்றாண்டுப் புலவர் எனக் கொள்ள வைக்கிறது.
ஒப்பிலாமணிப் புலவர் குமணனைப் பாடியதாக இரண்டு பாடல்கள் காட்டப்படுகின்றன.[1]
1
- ஆடெரி படர்ந்த கோடுயர் அடுப்பில்
- ஆம்பி பூப்பத் தீம்பசி உழல
- இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
- சுவைதொறும் சுவை தொறும் பால் காணாமல்
- குழவி தாய் முகம் நோக்க யாமும்
- நின் முகம் நோக்கி வந்தனம் குமணா
2
- அந்த நாள் வந்திலை அருந்தமிழ்ப் புலவோய்
- இந்த நாள் வந்து நீ நொந்து எனை அடைந்தாய்
- தலைதனைக் கொடு போய்த் தம்பி கைக் கொடுத்து அதன்
- விலைதனைப் பெற்று உன் வெறுமை நோய் களையே
இந்தப் பாடல்கள் புறநானூற்றுப் பாடல்களைத் தழுவி எழுதப்பட்டவை.[2][3]
இந்தப் புலவர் பாடியராக அகப்பொருள் பாடல் ஒன்றும் உள்ளது.
- அரவம் கரந்ததோ அச்சுமரம் இற்றுப்
- புரவி கயிறுருவிப் போச்சோ - இரவிதான் செத்தானோ
- இல்லையோ தீ வினையோ பாங்கி எனக்கு
- எத்தால் விடியும் இரா.[4]
இவரால் பாடப்பட்ட நூல் சிவரகசியம் எனவும் தெரியவருகிறது.[5]