ஒலிபரப்பு இல்லம்

ஒலிபரப்பு இல்லம் என்பது பிபிசியின் தலைமையகத்தைக் குறிக்கும். அருகருகே அமைந்திருக்கும் போர்ட்லேண்ட் பிளேஸ், லங்கம் பிளேஸ் ஆகிய தெருக்களில் இக்கட்டிடம் அமைந்துள்ளது. முதல் வானொலி ஒலிபரப்பு இந்தக் கட்டிடத்திலிருந்து 15 மார்ச் 1932 அன்று செய்யப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு மே 15 அன்று இக்கட்டிடம் அலுவல்முறையில் திறந்துவைக்கப்பட்டது. பிபிசி ரேடியோ தியேட்டர் எனும் அரங்கம் இந்த இல்லத்தின் ஒரு பகுதியாகும். இந்த அரங்கத்திற்கு நேயர்களை வரவழைத்து பேச்சு, இசை ஆகியன பதிவு செய்யப்பட்டன.

அமைப்பு

தொகு

ஒலிபரப்பு நிலையத்தை மாற்றி அமைத்தல், விரிவாக்குதல் ஆகிய பணிகள் தொடர்ந்து நடந்துவந்துள்ளன. கட்டிடத்தின் கிழக்குப் பகுதி தரைமட்டமாக்கப்பட்டு, புதிய கட்டிடத் தொகுப்பு 2005 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இந்தக் கட்டிடத் தொகுப்பானது 2012 ஆம் ஆண்டில் ஜான் பீல் விங் எனப் பெயரிடப்பட்டது. உள்ளூர் ஒலி/ஒளிபரப்புச் சேவையான பிபிசி இலண்டன், பிபிசி அரபு மொழி தொலைக்காட்சி, பிபிசி பாரசீக மொழி தொலைக்காட்சி ஆகியன இந்தப் புதிய கட்டிடத் தொகுப்பில் அமைந்துள்ளன. பிபிசி ரேடியோ 1, பிபிசி ரேடியோ 1எக்ஸ்ட்ரா ஆகியவற்றின் வரவேற்பறையும் இந்தப் புதிய கட்டிடத் தொகுப்பில் அமைந்துள்ளன.

முதன்மைக் கட்டிடம் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டு, இல்லத்தின் பின்பகுதி விரிவுபடுத்தப்பட்டது. பிபிசி ரேடியோ 3, பிபிசி ரேடியோ 4, பிபிசி ரேடியோ 4 எக்ஸ்ட்ரா, பிபிசி உலகச் சேவை (வானொலி ஒலிபரப்பு) ஆகியன இங்கு நகர்த்தப்பட்டன. விரிவுபடுத்துதலின் மூலமாக பழையக் கட்டிடமானது ஜான் பீல் விங்குடன் இணைக்கப்பட்டுள்ளது. பிபிசி நியூஸ், பிபிசி நியூஸ் தொலைக்காட்சி அலைவரிசை, பிபிசி வேர்ல்டு நியூஸ் ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த செய்தியறை, ஒலி/ஒளிபரப்பு அரங்குகள் இங்கு அமைக்கப்பட்டன. இந்த மாற்றங்களுக்கான அனைத்துப் பணிகளும் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவுற்றன.[1]

ஒலிபரப்பு இல்லம் என அலுவல்முறையில் அழைக்கப்பட்டாலும், புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட கட்டிடத்தை புதிய ஒலிபரப்பு இல்லம் (new Broadcasting House) என்று பிபிசி குறிப்பிடுகிறது. முதலில் இருந்த கட்டிடத்தை பழைய ஒலிபரப்பு இல்லம் (old Broadcasting House) என பிபிசி குறிப்பிடுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. BBC(18 March 2013). "BBC News' television output moves to new studios at Broadcasting House". செய்திக் குறிப்பு.
  2. BBC(7 June 2013). "Her Majesty The Queen officially opens BBC's new Broadcasting House". செய்திக் குறிப்பு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிபரப்பு_இல்லம்&oldid=3800910" இலிருந்து மீள்விக்கப்பட்டது