ஓப்பன் ஆபிசு

ஒரு அலுவலக பணிகளை செய்யும் அனைத்து மென்பொருளையும் கொண்ட திறந்தமூல மென்பொருளாகும்
(ஓப்பன் ஆபீஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஓப்பன் ஆபிசு அல்லது திறந்த பணியகம் ஒரு அலுவலக பணிகளை செய்யும் அனைத்து மென்பொருளையும் கொண்ட ஒரு தொகுப்பு ஓப்பன் ஆபிசு ஆகும். இதில் செயற்செயலி (வேர்ட் பிராஸஸர்), விரிதாள் (ஸ்பெரட் ஷீட்), தரவுத்தளம் (டேட்டாபேஸ்), காட்சி (பிரசென்டேஷன்) என ஒரு தொகுப்பாக வருகிறது. இந்த ஓப்பன் ஆபிஸின் இன்னொரு சிறப்பு லினக்சு, விண்டோசு என பல இயக்கத்தளங்களில் நிறுவி பயன்படுத்தி கொள்ளலாம். இது மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் கொண்டுள்ள கோப்பு வடிவங்களையும் கொண்டிருப்பதால், எளிதாக கோப்புகளிடையே பணியாற்றி கொள்ளலாம்.[1][2][3]

ஓப்பன் ஆபிசு முதலில் ஒரு உரிமையாளருக்குரிய மென்பொருகளாக ஸ்டார் ஆபிஸ் என்ற பெயரில் ஜெர்மனியிலுள்ள ஸ்டார்டிவிஷன் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். பின் இந்த மென்பொருள் மூலக்குறியீடுகளுடன் சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டு வாங்கப்பட்டு, அதே ஆண்டு ஆகத்து மாதம் இலவசமாக அதன் 5.2 பதிப்பு வழங்கப்பட்டது.

பின்னர் 2000 ஆண்டு ஜூலை சன் மைக்ரோசிஸ்டம் இதன் மூலக்குறியீடுகளை (LGPL மற்றும் Sun Industry Standards Source License (SISSL) கீழ்) பொது நிரலாக்க மென்பொருளாக ஒரு சமூகத்தை உருவாக்கி அதன் கீழ் விநியோகம் செய்தது. இந்த புதிய திட்டம் தான் (OpenOffice.org என்ற பெயரில்) 2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இணைய தளத்தில் அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கு வந்தது.

உரிமங்கள்

தொகு

2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி சன் நிறுவனத்திடம் (OpenOffice.org) சமூகம் ஓப்பன் ஆபிஸிற்கு இரட்டை உரிமம் இருக்கக்கூடாது என்று தெரிவித்ததால், (SISSL) உரிமத்திலிருந்து விலக்கு அளித்து அன்றிலிருந்து (LGPL) உரிமம் மட்டுமே கொண்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

பதிப்பு மற்றும் வெளியீடுகள்

தொகு

2005 ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி ஓப்பன் ஆபிஸ் தனது 2.0 பதிப்பை பொதுவாக வெளியிட்டது. பின் எட்டு வாரத்திற்கு பின் அதன் மேம்படுத்தல் பதிப்பாக 2.0.1 வெளியிட்டது. இதில் சில சிறிய பிழைகள் திருத்தப்பட்டு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வாறு 2.0.1 பதிப்பிற்குப் பின் தங்கள் வெளியீடு சுழற்சியை 18 மாதங்களுக்கு ஒரு முறை என மாற்றி, சில பிழைத்திருத்தங்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என மாற்றியமைக்கப்பட்டது.

சிறப்பியல்புகள்

தொகு

ஓப்பன் ஆபிஸ் மென்பொருள் பல இயக்கத்தளங்களில் பயன்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயக்கத்தளத்திற்கும் ஏற்றவாறு இது உருவாக்கப்பட்டுள்ளது. இது விண்டோஸ், லினக்ஸ், மேக் மற்றும் சோலாரிஸ் இயக்கத்தளங்களில் இயங்குவது இதன் சிறப்பாகும். மேலும் இது ஓப்பன் டாக்குமென்ட் தரப்படுத்தப்பட்ட கோப்பு முறைமைகளையும் மற்றும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் 97-2003 கோப்பு வடிவங்களுக்கும் துணைபுரிவது இதன் மற்றொரு சிறப்பாகும். மேலும் இது மைக்ரோசாப்ட் ஆபிஸ் பயன்படுத்தும் பெரும்பாலான கோப்பு வடிவங்களை வாசிக்கவும், திருத்தவும் செய்கிறது. இதில் இன்னொரு விஷயம் மைக்ரோசாப்ட் ஆபிஸின் பழைய பதிப்பு கோப்புகளையும், பழுதடைந்த கோப்புகளையும் இது திறக்கிறது. ஆனால் மைக்ரோசாப்ட் ஆபிஸ் இதனை செய்ய தவறுகிறது என்பதே இதில் வேடிக்கையாகும்.

ஓப்பன் ஆபிஸ் திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், ஒரு பன்னாட்டு தரத்தில் ஒரு அலுவலகத்தொகுப்பை சமூகத்தின் மூலம் உருவாக்க வேண்டும். மேலும் அதனை இன்று பிரபலமாக உள்ள அனைத்து இயக்கத்தளங்களில் இயங்கவதாகவும் உருவாக்க வேண்டும். கடைசியாக மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருளுக்கு போட்டியாக சந்தையில் தங்களை நிறுத்தி கொள்ள வேண்டும்.

ஓப்பன் ஆபிஸ் தொகுப்பிலுள்ளவை

தொகு

ஓப்பன் ஆபிஸ் தொகுப்பு ரைட்டர், கால்க், இம்ப்ரஸ், பேஸ், ட்ரா, மேத் மற்றும் கியிக்ஸ்டார்டர் ஆகிய மென்பொருட்களை கொண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை மைக்ரோசாப்ட் ஆபிஸை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. இவை ஒவ்வொன்றையும் பற்றி கீழே விரிவாக பார்க்கலாம்.

ரைட்டர்

தொகு

இது ஒரு சொற்செயலி ஆகும். இது மைக்ரோசாப்ட் வேர்ட் போலவே செயல்பாடுகளையும் கருவிகளையும் கொண்டுள்ளது. மேலும் இதன் சிறப்பு என பார்த்தால், இதற்கு வேறு கூடுதல் மென்பொருள் இல்லாமல் PDF கோப்பாக எளிதாக மாற்றி சேமித்து கொள்ளும் செயல்பாட்டை கொண்டுள்ளது. அதுபோல WYSIWYG எடிட்டர் மூலம் இணைய பக்கங்களை உருவாக்கியும் அவற்றை திருத்தியும் கொள்ளலாம். மேலும், மைக்ரோசாப்ட் வேர்ட்டுக்கும் ரைட்டருக்கும் உள்ள இருக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் ரைட்டரில் அட்டவணையில் நீங்கள் விரிதாளில் (கால்க் போல) செய்யும் சூத்திரங்கள் மற்றும் எண் வடிவங்களை இதில் பயன்படுத்தி செய்து கொள்ளலாம்.

கால்க்(விரிதாள்)

தொகு

இது ஒரு விரிதாள் மென்பொருளாகும். இது மைக்ரோசாப்ட் எக்ஸெல் போன்ற தோற்றத்தோடு அதன் செயல்பாடுகளையும் கருவிகளையும் கொண்டிருக்கும். இது எக்ஸெல்லில் இல்லாத பல வசதிகளை கொண்டுள்ளது. வரைபடங்களின் வரிசையை தானாக பயனரின் தரவுகளுக்கு ஏற்ப கொடுக்கிறது. மேலும் இதிலும் நீங்கள் PDF கோப்புகளாக நேரடியாக மாற்றி கொள்ளலாம்.

இம்ப்ரஸ்

தொகு

இது ஒரு காட்சிகள் உருவாக்கும் நிரலாகும். இது மைக்ரோசாப்ட் பவர்பாயிண்ட் போன்ற தோற்றத்தை கொண்டிருக்கும். இதில் நாம் Adobe Flash (SWF) கோப்புகளாக எளிதாக மாற்றும் வசதியையும், PDF ஆக மாற்றும் வசதியையும் நேரடியாக செய்து கொள்ளலாம். அது போல ppt வடிவங்களையும் இதில் பார்த்து கொள்ளலாம். இதில் தயாராக உள்ள காட்சி வடிவங்கள் சற்று குறைவாகவே உள்ளது. எனினும் அவற்றின் மாதிரிகளை நீங்கள் இணையத்திலிருந்து பதிவிறக்க பயன்படுத்தி கொள்ளலாம்.

பேஸ்

தொகு

இது மைக்ரோசாப்ட் அக்சஸ் நிரல் போன்ற ஒரு தரவுத்தள நிரலாகும். இது தரவுத்தளங்களை உருவாக்கி கணக்கீடு செய்ய நம்மை அனுமதிக்கிறது. இது பல தரவுத்தள முறைகளுக்கு முகப்பு நிரலாக (front-end program) பயன்படுகிறது. அதாவது, JET, ODBC மற்றும் MySQL/PostgreSQL போன்ற தரவுத்தளங்களுக்கு இது துணைபுரிகிறது. இதில் நாம் மேலே குறிப்பிட்ட எந்த தரவுத்தள நிரலையும் நிறுவ வேண்டிய தேவையில்லை.

ட்ரா

தொகு

இது ஒரு வெக்டார் வரைகலை தொகுப்பியாக சமீபத்திய கோரல்ட்ராவின் பதிப்பின் வசதிகளை கொண்டுள்ளது. இது வடிவங்களுக்கிடையே உள்ள இணைப்பிகளை கொண்டுள்ளது. மேலும் ஒரு நிரலாக்க திட்டத்தை உருவாக்கும் ஃப்ளோசார்ட்களை உருவாக்கவும் பயன்படுகிறது. மேலும் அச்சிற்கு பயன்படும் நிரல்களான Scribus மற்றும் Microsoft Publisher போன்றவற்றின் வசதிகளையும் கொண்டுள்ளது.

மேத்

தொகு

இது மைக்ரோசாப்ட் ஈக்வேஷன் எடிட்டர் (சமன்பாடு தொகுப்பி) நிரல் போன்ற செயல்பாடுகளை கொண்டுள்ளது. இதில் நாம் கணித சூத்திரங்கள் உருவாக்கி தொகுத்தும் கொள்ளலாம். சூத்திரங்கள் வேறு ஓப்பன் ஆபிஸ் ஆவணங்களில், அதாவது ரைட்டரில் சேமிக்கப்பட்டிருக்கும். மேலும் இது பல எழுத்துருக்களுக்கு துணைபுரியும். இதிலும் PDF ஆக சேமிக்கும் வசதியை உள்ளது.

கியிக்ஸ்டார்டர்

தொகு

இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயக்கத்தளங்களில் பயன்படுத்தும் ஒரு சிறிய நிரலாகும். இதனை கணினி துவங்கியதும் முதலில் இயக்க வேண்டும். அவ்வாறு இயக்கும் போது ஓப்பன் ஆபிஸின் முக்கிய கோப்புகள் மற்றும் லைப்ரரி கோப்புகளை ஏற்றி வைத்து கொள்ளும், இதனால் ஓப்பன் ஆபிஸ் நிரலாக்கங்களை துவக்கும் போது விரைவாக அவற்றைத் திறக்கும். ஏற்கனவே பதிப்பு 1.0வில் ஓப்பன் ஆபிஸ் கோப்புகளை திறக்க நீண்ட நேரம் ஆகிறது என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்தது. இதனை தவிர்க்க இது ஒரு தீர்வாக இருக்கிறது.

மேக்ரோ ரிக்கார்டர்

தொகு

இது பயனர்கள் செயல்கள் மற்றும் அவற்றை மீண்டும் இயக்க உதவியாக இருக்கும் ஒரு தானியக்க செயல்பாடுகளை உள்ளடக்கிய மேக்ரோக்களை பதிவு செய்யும் ஒரு கருவியாகும். இதற்கு ஓப்பன் ஆபிஸ் பேசிக் பயன்படுகிறது.

ஓப்பன் ஆபிஸ் பேசிக்

தொகு

ஓப்பன் ஆபிஸ் பேசிக் என்பது மைக்ரோசாஃப்ட் விஷுவல் பேசிக் அப்ளிகேஷன்ஸ் (VBA) போன்ற ஒரு நிரலாக்க மொழியாகும். இது ரைட்டர் மற்றும் கேல்க் ஆகிய தொகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது இந்தப் பயன்பாடுகளில் மேக்ரோக்களை பயன்படுத்த இந்த நிரலாக்க மொழி பயன்படுகிறது. நாவல் பதிப்பில் (நாவலும் மைக்ரோசாஃப்ட்டும் ஒப்பந்தம் செய்து கொண்டதால் விரைவாக முடிக்கப்பட்டுள்ளது) ஓப்பன் ஆபிஸ் 2.0 பதிப்பில் மைக்ரோசாஃப்ட் VBA மேக்ரோக்களுக்கு துணைபுரியவதற்கான சேவை அளிக்கப்படுகிறது. அதுவே ஓப்பன் ஆபிஸ் முக்கியமான பதிப்பில் விரைவில் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு மேக்ரோவும் பல்வேறு பணிகளை செய்கிறது. முக்கியமாக, ஓப்பன் ஆபிஸ் பேசிக் பலமுறை செய்யப்படும் வேலையை செய்ய பயன்படுகிறது. இவை இந்தப் பயன்பாட்டில் இருக்காது.

இப்போது ஓப்பன் ஆபிஸில் உள்ள தரவுத்தள பயன்பாடான “பேஸ்” என்பதை எடுத்துக்கொண்டால், ரைட்டர் தொகுதியில் உருவாக்கிய அறிக்கைகள் மற்றும் படிவங்களை இதிலும் பயன்படுத்தி கொள்ளலாம். எனவே இதுவும் பேசிக்கில் நிரலாக்கப்படும் என சொல்லலாம்.

கோப்பு முறைமைகள்

தொகு

ஓப்பன் ஆபிஸின் முன்னிருப்பு கோப்பு முறைமையை ISO/IEC தரப்படுத்தப்பட்ட OpenDocument கோப்பு முறைமையை (ODF) கொண்டுள்ளது. இது பல உரிமையுள்ள கோப்பு முறைமைகளை வாசிக்க (மற்றும் சிலவற்றை எழுத) துணைபுரிகிறது. எடுத்துக்காட்டாக, WordPerfect, StarOffice, Lotus software, MS Works, Rich Text Format மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் கோப்பு முறைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

ஸ்டார் ஆபிஸ்

தொகு

சன் நிறுவனம் தனது வணிக மென்பொருளான ஸ்டார் ஆபிஸை ஓப்பன் ஆபிஸின் மூலக்குறியீட்டை அடிப்படை கொண்டு 6.0 பதிப்பினை சில கூடுதல் இணைப்புகளுடன் வெளியிட்டது அந்த கூடுதல் இணைப்புகளாவன:

கூடுதல் எழுத்துக்கள் (கிழக்கு ஆசிய மொழி எழுத்துருக்கள்) Adabas D தரவுத்தளம். கூடுதல் ஆவண மாதிரிஉருக்கள் கிளிப் ஆர்ட் ஆசிய பதிப்புக்களுக்கு வரிசைப்படுத்தல் கூடுதல் கோப்பு ஃபில்டர் Migration assessment tool (Enterprise Edition). Macro migration tool (Enterprise Edition). Configuration management tool (Enterprise Edition).

ஓப்பன் ஆபிஸ் உருவாக்கம் – ஓர் கண்ணோட்டம்

தொகு

ஓப்பன் ஆபிஸின் API Universal Network Objects (UNO) எனப்படும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இது CORBA- போன்ற முகப்பு மொழியில் குறிப்பிட்டது போல பரந்த நிலையில் முகப்புகளை கொண்டுள்ளது.

ஆவண கோப்பு வடிவம் XML மற்றும் சில ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஃபில்டர்கள் மூலம் பயன்படுத்தப்படுகிறது. ஓப்பன் ஆபிஸால் வாசிக்கப்படும் அனைத்து வெளியார்ந்த வடிவங்களின் மாற்றங்களும் உள்ளார்ந்த XML ஆல் குறிப்பிடப்படுகிறது. கோப்புகளை குறுக்குவது மூலம் XMLஐ வட்டில் சேமிக்கும் போது பொதுவாக மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் ஆவணங்களின் பைனரியை விடவும் சிறிய அளவில் சேமிக்கப்படுகிறது.

ஓப்பன் ஆபஸ் இணைய தளத்தில் இதன் உருவாக்க பதிப்பு சில வாரங்களுக்கு ஒரு முறை வல்லுநர் இடத்தில் வெளியிடப்படுகிறது. இது மென்பொருளின் புதிய வசதியை சோதிக்க விரும்புவர்கள் மற்றும் புதிய மாற்றங்களை பார்க்க விரும்புவர்கள் பதிவிறக்கி சோதித்து கொள்ளலாம்.

எதிர்கால திட்டங்கள்

தொகு

ஏற்கனவே திட்டமிட்டபடி ஓப்பன் ஆபிஸ் 3.0 செப்டம்பர் 2008 இல் வெளியிடப்படும். இதில் பல வசதிகள் திட்டமிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இங்கு பார்க்கலாம்:

Personal Information Manager (PIM), இது Thunderbird அல்லது Lightningஐ அடிப்படையாக கொண்டு இருக்கும். ட்ராவில் PDFஐ இறக்குமதி செய்யும் வசதி Web 2.0 இல் weblogகள் மற்றும் விக்கிகளுக்கு துணைபுரிய செய்தல். Office 2007 OOXML document import filter Mac OS X Aqua இயக்கத்தளத்திற்கு துணைபுரிதல் மேடம் வரைகலை முகப்பிற்கு மறுவடிவமைத்தல்.

பாதுகாப்பு

தொகு

ஓப்பன் ஆபிஸ் ஒரு பாதுகாப்பு குழுவை கொண்டுள்ளது. செப்டம்பர் 2007 இலிருந்து பாதுகாப்பு அமைப்பு Secunia எந்த பாதுகாப்பு தொடர்பான சிக்கலையும் அறிக்கையிடவில்லை. காஸ்பெர்ஸ்கை ஆய்வகம் ஒரு வைரஸை ஓபன் ஆபிஸ் கொண்டுள்ளதை நிரூபித்தது. ஆனால் இது எந்த தெரிந்த வன்மையான வைரஸ் எதையும் கொண்டிருக்கவில்லை.

ஒரு தனிப்பட்ட கூட்டத்தில் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம், மேக்ரோ தொடர்பான பாதுகாப்பு சிக்கல்களை எழுப்பியது. ஆனால் ஓப்பன் ஆபிஸ் மென்பொருள் வல்லுநர்கள், அவர்கள் குறிப்பிட்ட பாதுகாப்பு சிக்கல்கள் எதுவும் குறிப்பிடும்படியாக இல்லை எனவும், அவை எதுவும் “முக்கியமாக வரையறுக்கப்பட்ட படிநிலைகளில்” வரவில்லை எனவும் தெரிவித்தனர். எனினும், தொடர்ந்து இது தொடர்பான ஆராய்ச்சியாளர்களுடன் பேச்சு நடத்தி வருகிறார்கள்.

சந்தையில் இதன் பங்கு

தொகு

பொது சந்தையில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் 95% இடத்தைப் பிடித்து கொண்டாலும் 2004 வரை ஓப்பன் ஆபிஸ் மற்றும் ஸ்டார் ஆபிஸ் 14% எடுத்துக்கொண்டுள்ளது. மேலும் 2005 இல் இவை 19% ஆக அதிகரித்துள்ளது. ஓப்பன் ஆபிஸ் இணைய தளம் 98 மில்லியன் பதிவிறக்கங்கள் நடந்துள்ளதாக அறிக்கையிடுகிறது. எனவே இதன் வளர்ச்சி அதிகரித்த வண்ணமே உள்ளது.

இது பெரிய அளவில் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சகம், பிரிட்டிஷில் பிரிஸ்டல் அரசு நிர்வாகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரன்சிஸில் உள்நாட்டு மற்றும் தேசிய அரசு நிர்வாகங்களில் பெரும்பாலும் மற்றும் பிரஞ்சு ஜென்டர்மேரேயிலும் இது அதிகாரப்பூர்வமான ஆபிஸ் தொகுப்பாக பயன்பட்டு வருகிறது.

இந்தியாவில் ஐஐடிபாம்பே, உச்ச நீதிமன்றம் மற்றும் அலகாபாத் உயர்நீதி மன்றம் போன்றவற்றிலும் ஓப்பன் ஆபிஸே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் எங்கெல்லாம் லினக்ஸ் இயக்கதளம் பயன்படுத்துகிறார்களோ அங்கெல்லாம் ஓப்பன் ஆபிஸ் தான் பயன்படுத்துகிறார்கள்.

2005 ஆம் ஆண்டு அக்டோபர் 4 தேதி சன் மற்றும் கூகுள் தங்களுக்கு ஒரு கூட்டணியை அறிவித்தது. அவர்களின் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சன் ஓப்பன் ஆபிஸில் கூகுள் தேடும் பட்டையை சேர்த்தது. மேலும் சன் மற்றும் கூகுள் சேர்ந்து இதன் சந்தைப்படுத்தலிலும் பிற ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியிலும் சேர்ந்து பணியாற்றி, கூகுள் நிறுவனம் ஓப்பன் ஆபிஸை விநியோகிக்க உதவும் என அறிவித்தது.

ஜூலை 2007இல் முதல் பன்னாட்டு கணினியின் பிரிவும் மற்றும் உலகின் 9 ஆம் பெரிய கணினி விற்பனையாளரான எவரெக்ஸ் நிறுவனம் தங்கள் கணினிகளில் ஓப்பன் ஆபிஸ் நிறுவப்பட்டு வட அமெரிக்கா முழுவதும் விற்பனை செய்கிறார்கள்.

செப்டம்பர் 2007இல் ஐபிஎம் நிறுவனம் லோட்டர் சிம்பொனி என்ற பெயரில் ஓப்பன் ஆபிஸிற்கு சேவையளிப்பதாக அறிவித்தது. மேலும் ஐபிஎம் பணியாளர்கள் 35 பேர் ஓப்பன் ஆபிஸுக்காக பணியில் அமர்த்தப்படுவார்கள் எனவும் அறிவித்தது.

இவ்வாறு பல வகையில் வளர்ச்சியடைந்து வரும் ஓப்பன் ஆபிஸ் ஒரு சிக்கலில் சிக்கியது. சரி முதலில் நம் விஷயத்திற்கு வருவோம்.

ஸ்டார் ஆபிஸிலிருந்தே ஓபன் ஆபிஸை உருவாக்கினார்கள் என்பது நாம் அறிந்த ஒன்றே. எனவே, ஓபன் ஆபிஸ் மென்பொருள் உருவாக்கத்தில் அதன் முதல் பதிப்பில் அது பெரும்பாலும் Java Runtime Environment (JRE)வையே சார்ந்து உருவாக்கப்பட்டதாகும். இதில் சிக்கல் என்னவென்றால், இந்த JRE பொது நிரலாக்க மென்பொருள் இல்லை. சன் மைக்ரோசிஸ்டம் தான் இந்த இரண்டு மென்பொருளையும் உருவாக்கியது. ஓப்பன் ஆபிஸின் முதல் பதிப்பு JRE ஐ சார்ந்தே இருந்தது.

ஜாவா நிரலை ஓப்பன் ஆபிஸ் பயன்படுத்துகிறது என்ற சிக்கல் எப்படி வந்தது என்றால், மே 2005 ஆம் ஆண்டு ரிச்சர்ட் ஸ்டால்மேன் Free Software Foundation இணைய தளத்தில் ஓபன் ஆபிஸ் மென்பொருளை வெளியிட அழைப்பு விடுத்தார். பின் இது ஓப்பன் ஆபிஸ் சமுதாயம் (கம்யூனிட்டி), சன் நிறுவனத்தின் பணியாளர்களுக்கும் மற்றும் GNU Classpath இன்ஜினியர்கள் இடையே சன் ஜாவாவை இலவசமாக ஓபன் ஆபிஸுடன் கொடுக்க பல விவாதங்களை ஏற்படுத்தியது. இதன் விளைவாக நவம்பர் 13, 2006 இல் ஜாவா GNU பொது உரிமத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டது. இதனால் ஓப்பன் ஆபிஸ் பொது மென்பொருள் இல்லாத ஒரு மென்பொருளை சார்ந்துள்ளது என்பது சிக்கல் ஒரு முடிவுக்கு வந்தது.

ஓப்பன் ஆபிஸ் JRE ஐ பின்வருவனவை சார்ந்துள்ளவையாகும்

தொகு

யுனிக்ஸ் போன்ற முறைகளுக்கான மீடியா பிளேயர் ரைட்டரில் அனைத்து ஆவண வழிகாட்டிகள் அணுகல் கருவிகள் ரிப்போர்ட் ஆட்டோ பைலட் JDBC இயக்கி சேவை ஓபன் ஆபிஸ் பேஸில் பயன்படுத்தும் HSQL தரவுத்தளம் XSLT ஃபில்டர்கள் BeanShell, NetBeans ஸ்கிர்ப்ட் மொழி மற்றும் ஜாவா UNO bridge பாக்கெட் கணினிகளில் எக்ஸ்போர்ட் ஃபில்டர்கள் LaTeX க்கு எக்ஸ்போர்ட் ஃபில்டர்கள் MediaWiki's wikitext எக்ஸ்போர்ட் ஃபில்டர்கள்

மேலும் ஸ்டார் ஆபிஸில் மெயில் மெர்ஜ் வசதியில் மின்னஞ்சல் உருவாக்க Java API JavaMail ஐ பயன்படுத்தியது. ஆனால் ஓப்பன் ஆபிஸ் 2.0.1 அல் அதற்கு பதில் பைத்தான் பயன்படுத்தப்பட்டது.

கூடுதல் மாற்று மென்பொருட்கள்

தொகு

ஓப்பன் ஆபிஸ் மைக்ரோசாஃப்ட் ஆபிஸுக்கு (வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட், ஆக்ஸஸ், ஈக்வேஷன் எடிட்டர், விஷோ) மாற்றாக அனைத்து மென்பொருட்களையும் கொடுக்கிறது. அதுபோக மேலும் சில மென்பொருட்களையும் சேர்த்து கொடுக்கிறது.

மைக்ரோசாஃப்ட் அவுட்லுக் போன்று எவுலுஷன் அல்லது தண்டர்பேர்ட்/லைட்னிங் போன்றவற்றையும், ஓப்பன்ப்ராஜ் என்பதை மைக்ரோசாஃப்ட் ப்ராஜக்ட் என்பதற்கு மாற்றாக தன்னுடன் சேர்க்க வழிவகைகளை தேடுகிறது. ஏனெனில் இதில் சில உரிம சிக்கல்கள் இருக்கிறது. அடுத்து மைக்ரோசாஃப்ட் பப்ளிஷர் என்பதற்கு ஸ்கிரிபஸை கொடுக்கிறது.

தொழில்நுட்ப சிக்கல்கள்

தொகு

மற்ற அலுவலக தொகுப்புகளுடன் ஒப்பிடும் போது ஓப்பன் ஆபிஸ் அதிக நினைவகத்தை எடுத்து கொள்கிறது. அதுபோல துவக்கும் நேரம் அதிகமாக உள்ளது. எடுத்துக்காட்டாக, மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் மென்பொருளையும் இதனையும் ஒப்பிடும் போது ஒரு வெற்று கோப்பினை திறக்க 2 மடங்கு அதிகமாக மென்பொருளை ஏற்ற நேரம் எடுக்கிறது. அதுபோல சில பெரிய கோப்புகளை திறக்க 4.7 மடங்கு செயல்படுத்தல் நேரமும் 3.9 மடங்கு நினைவகம் எடுத்து கொள்ளும் நேரமும் ஆகிறது. இதற்கு காரணம் ஓப்பன் ஆபிஸ் முதல் JRE ஐயும் ஏற்ற வேண்டியுள்ளது. எனினும் 2.2 பதிப்பிலிருந்து அதன் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Lettice, John (1 May 2002). "OpenOffice suite goes 1.0". The Register. Situation Publishing. Archived from the original on 9 April 2004. பார்க்கப்பட்ட நாள் 16 October 2013.
  2. "Hacking". OpenOffice.org Wiki. Oracle Corporation. 27 January 2011. Archived from the original on 9 November 2017. பார்க்கப்பட்ட நாள் 20 August 2013.
  3. "3.4 Beta - Developer Snapshot - Release Notes". Oracle Corporation. Archived from the original on 27 September 2013. பார்க்கப்பட்ட நாள் 22 September 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓப்பன்_ஆபிசு&oldid=3889634" இலிருந்து மீள்விக்கப்பட்டது