கடன்சொல் (loan word) என்பது, குறித்த ஒரு மொழியில், இன்னொரு மொழியில் இருந்து பெற்று மொழிபெயர்ப்புச் செய்யாது அப்படியே பயன்படுத்தப்படும் சொல்லைக் குறிக்கும். சொல்லைக் கொடுக்கும் மொழி கொடைமொழி எனவும், பெற்றுக்கொள்ளும் மொழி பெறுமொழி எனவும் அழைக்கப்படுகின்றன.

கடன்பெறுவதற்கான சூழல்கள் தொகு

வெவ்வேறு மொழிகளைப் பேசுவோர் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளும்போது, ஒரு மொழிச் சொல் இன்னொரு மொழியில் கலப்பது இயல்பானது. அயலில் உள்ள வெவ்வேறு மொழியினர் கலந்து பழகுவதனாலும், பண்பாட்டுத் தொடர்புகளினாலும், குறுகியதூர, தொலைதூர வணிகங்களினாலும், இடப்பெயர்வுகள் மூலமும், படையெடுப்பு, அரசியல் ஆதிக்கம் என்பவற்றாலும் இவ்வாறான மொழிக்கலப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன.

சொற்களைக் கடன்பெறுவதற்கான காரணங்கள் தொகு

முதன்மையாக இரண்டு நோக்கங்களுக்காகச் சொற்கள் கடன்வாங்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[1]

  1. தேவை நோக்கம்
  2. கௌரவ நோக்கம்

ஒரு மொழியைப் பேசுவோர் இன்னொரு மொழிபேசும் மக்களிடம் இருந்து ஏதாவது புதிய பொருளையோ, புதிய கருத்துருக்களையோ அறிந்துகொள்ளும்போது அவற்றைக் குறிப்பதற்குச் சொற்கள் தேவைப்படுகின்றன. சிலவேளைகளில், இப்பொருட்களையும், கருத்துருக்களையும் மட்டுமன்றி அவற்றுக்கான சொற்களையும் அவற்றை அறிமுகப்படுத்தியவர்களிடம் இருந்தே பெற்றுக்கொள்கின்றனர்.[2] இது தேவை நோக்கத்துக்காகச் சொற்களைக் கடன் பெறும் வகையாகும். மிகப் பழைய காலத்திலேயே இந்து, பௌத்த, சமண மதக் கருத்துக்கள் தமிழ் மக்களிடையே அறிமுகமான காலத்தில் அவற்றைத் தமிழில் வெளிப்படுத்துவதற்கான சொற்களும், சமசுக்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டன. இதுபோலவே அண்மைக்காலத்தில் மேனாட்டவர் அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் முன்னிலை வகிப்பதன் காரணமாக, அவர்களின் கண்டுபிடிப்புக்களும், புத்தாக்கப் பொருட்களும் அவற்றுக்கான பிறமொழிப் பெயர்களுடனேயே கீழைநாடுகளைச் சென்றடைகின்றன. தமிழிலும், கார், பஸ், ரேடியோ, பல்ப் போன்ற சொற்கள் தமிழில் கலந்தன.

சோறு என்னும் நல்ல தமிழ்ச் சொல் இருக்க சாதம் என்னும் சமசுக்கிருதச் சொல்லைப் பயன்படுத்துவதும், நூல், பொத்தகம் போன்ற சொற்கள் இருக்க புக் என்று ஆங்கிலச் சொல் பயன்படுவதும் கௌரவ நோக்கத்துக்கான கடன்வாங்கல் ஆகும்.

குறிப்புகள் தொகு

  1. கருணாகரன், கி., ஜெயா, வ., 2007, பக். 203.
  2. Campbell, Lyle., பக். 64.

உசாத்துணைகள் தொகு

  • கருணாகரன், கி., ஜெயா, வ., மொழியியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2007.
  • Campbell, Lyle., Historical Linguistics - An Introduction, The MIT Press, Cambridge, Massachusets, 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடன்சொல்&oldid=3938954" இலிருந்து மீள்விக்கப்பட்டது