கடற்கரை பள்ளி
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
கடற்கரை பள்ளி அல்லது கடற்கரை மசூதி (kadarkarai Palli or Kadarkarai Masudhi) என அழைக்கப்படுவது, தமிழ்நாட்டின் காயல்பட்டினம் நகரில் அமைந்துள்ள ஒரு பழமையான இஸ்லாமிய மசூதி ஆகும். இதுவே தமிழ்நாட்டின் முதல் மசூதியும், இந்தியாவின் இரண்டாவது மசூதியும் ஆகும்.
வரலாறு
தொகுஇஸ்லாமியர்களின் இறுதி நபியான முகம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் முதல் கலிபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அபூபக்கர் (ரலி) என்பவராவார். இவரது ஆட்சிக்காலத்தில் ஒரு வியாபார குழு 633 ஆம் ஆண்டு சுமார் 224 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் முதன்முதலாக காயல்பட்டினம் நகரில் வந்து தங்கியது. முகம்மது கல்ஜி என்பவர் அந்தக் குழுவுக்கு தலைமை ஏற்று வந்தார். அந்த சமயத்தில் அந்தப் பகுதியை ஆண்ட பாண்டிய மன்னனான அபிராம ராஜா அதிராஜ ராஜா ஜெயவீர ராஜுக்கர் என்பவர் அவர்களை வரவேற்று, அவர்கள் தங்குவதற்கும் வழிசெய்தார்.
பின் அங்கேயே தங்கி வியாபாரத்தில் ஈடுபட்ட அந்தக் குழுவினர், தங்கள் வழிபாட்டுக்காக, ஒரு மசூதியை கட்டினர். இதுவே கடற்கரை பள்ளி என அழைக்கப்படுகின்றது. இது இரண்டாவது கலீபாவான உமர் (ரலி) அவர்கள் காலத்தில் கட்டப்பட்டது.
முக்கியத்துவம்
தொகுஇந்த மசூதி கட்டப்பட்ட ஆண்டை அறுதியிட்டுக் கூற முடியாவிட்டாலும், இது தோராயமாக 633 முதல் 640 ஆம் ஆண்டுக்குள் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. மாலிக் பின் தீணார் என்பவரால் கேரள மாநிலம் கொடுங்கலூரில் 612 ஆம் ஆண்டு கட்டப்பட்ட, இந்தியாவின் முதல் மசூதியான சேரமான் ஜுமா மசூதிக்கு அடுத்து கட்டப்பட்ட இதுவே இந்தியாவின் இரண்டாவது மசூதி ஆகும். மேலும் இதுவே தமிழ்நாட்டின் முதல் மசூதி ஆகும்.
இன்றைய நிலை
தொகுஇன்று இந்த மசூதி கோஸ்மறை தர்கா அருகில் உள்ளது. இதன் பல பகுதிகள் இயற்கை சீற்றங்களினால் அழிந்துவிட்ட நிலையில் எஞ்சிய பகுதிகள் சிதிலமடைந்து உள்ளது. ஆனால் இங்கு இருக்கும் இரண்டு கல்வெட்டுகள் இந்த மசூதியின் வரலாற்று பெருமைகளை நினைவு கூறுகின்றன. இதில் முதலாவது கல்வெட்டு, இந்த மசூதிக்கு பாண்டிய மன்னன் நிலம் கொடுத்ததை நினைவு கூறுகின்றது. அடுத்தது அந்நாளில் வாழ்ந்த இஸ்லாமிய பெரியாவரான செய்யது அஹமது பின் சஹீது இப்நு முகம்மது கரீம் மதானி என்பவரை பற்றி கூறுகின்றது.