கடல் குளிரூட்டல்

கடல் குளிரூட்டல் (Marine Refrigeration) என்பது கடல் பயணத்தின் போது பொருள்கள் அழுகிக் கெட்டுப் போகாமலும், இயற்கைத் தன்மை மாறாமலும் பாதுகாத்து எடுத்துச் செல்வதற்குத் தேவைப்படுகிறது.

குளிரூட்டும் பொருள்கள் தொகு

கடல் குளிரூட்டல் கருவியில் சில சமயங்களில், கப்பலில் எடுத்துச் செல்லப்படும் பொருட்களே குளிரூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக: அம்மோனியா, பெட்ரோலியப் பொருட்கள், புரோப்பேன், பியுட்டேன்.

விளக்கம் தொகு

விரைவில் அழுகிக் கெட்டு போகும் பொருட்கள் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் எந்த தட்ப வெப்ப நிலையில் இருக்க வேண்டுமோ அதே நிலையில் அலை கடல் குளிரூட்டல் மூலமாகப் பாதுகாக்கப்படுகின்றன. இந்த அறைகள் முழுவதும் நன்கு வெப்பக் காப்பிடப்பட்டு இருக்க வேண்டும். இல்லையெனில் வெளிப்புறம் நிலவக் கூடிய கடலின் தட்ப வெப்பம் அறைக்குள் புகுந்து அறையின் தட்ப வெப்ப நிலையை மாற்றுவதோடு பொருள்களை அழுகச் செய்துவிடும்.

பாதுகாப்பு அறைகளில் தேவையான தட்ப வெப்ப நிலையை ஏற்படுத்த நேரடியாக ஆவியாகக் கூடிய முறையே அனைத்து கடல் குளிரூட்டியிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் நீர்மக் குளிரூட்டி குளிர் சுருளுக்குள் செலுத்தப்படுகிறது. குளிரூட்டிச் சுருள், சரக்குகள் வைக்கப்பட்டுள்ள அறையில் அமைக்கப்பட்டிருக்கும். அந்த குளிர் சுருளுக்குள் உள்ள நீர்மகுளிரூட்டி அந்த அறையில் நிலவக் கூடிய வெப்பத்தை எடுத்துக் கொண்டு அந்த சுருளுக்குள் ஆவியாகிறது. இவ்விதம் ஆவியான குளிரூட்டி காற்று அமுக்கியை அடைகிறது. அங்கு ஆவிநிலையிலுள்ள குளிரூட்டி மிகுஅழுத்தத்திற்கு உட்படுத்தப்படுகிறது. உடன் இந்த மிகு அழுத்தம் ஆவிநிலையிலுள்ள குளிரூட்டி, குளிர் நீர்மமாக்கியை அடைந்து அங்கு நீர்ம நிலையை அடைகிறது.

நீர்ம நிலையில் மிகுந்த அழுத்தம் கொண்ட குளிரூட்டி ஒரு அழுத்தக்கலனில் தொகுக்கப்படுகிறது. இங்கிருந்து இந்த மிகுவழுத்த நீர்மக்குளிரூட்டி, குளிரூட்டி அடைப்பிழழில் (closed valve) மிகு அழுத்தத்திலிருந்து குறை அழுத்தத்திற்கு நெருக்கம் செய்யப்படுகிறது. இக்குறையழுத்தக் குளிரூட்டி, குளிர் சுருளை மீண்டும் அடைந்து அந்த அறையில் நிலவும் வெப்பத்தை எடுத்துக் கொண்டு ஆவியாகிக் காற்றழுத்தியை அடைகிறது. இவ்வாறு தொடர்ச்சியாக அ்ந்த அறையில் உள்ள வெப்பத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் ஆவியாவதால் அந்த அறைக்கு தேவையான தகுந்த தட்ப வெப்ப நிலை ஏற்படுத்தப்படுவதால், அங்குள்ள பொருள்களும் அவற்றின் இயற்கை தன்மை மாறாமலும் பாதுகாக்கப்படுகிறது.

நீர்மச் சரக்குகள் பாதுகாக்கும் முறை தொகு

நீர்மநிலையில் உள்ள வளிமங்களை நீர்ம நிலையிலேயே கடற்பயணத்தின் போது கொண்டு செல்லக் கடல் குளிரூட்டல் மிகவும் தேவைப்படுகிறது. நீர்மநிலையில் உள்ள வளிமங்கள் அம்மோனியா, குறைந்த அழுத்த நிலையில் உள்ள பெட்ரோலிய வளிமங்கள், புரோப்பேன், பியுட்டேன் ஆகியவை சாதாரண தட்ப வெப்ப நிலைக்கே ஆவியாகும். இந்த நீர்மநிலையில் உள்ள வளிமங்கள் நிரப்பப்பட்ட கலன்களை மிக குறைந்த வெப்ப நிலையிலேயே கடற்பயணத்தின் போது பாதுகாக்க வேண்டும்.

எந்த வளிமமும் அதன் நீர்மநிலையில் இருந்து, ஆவி நிலைக்கு மாறும் போது சிறிது உள்ளுறை வெப்பத்தை (latent heat) அதன் நீர்மத்தில் இருந்து கவர்ந்து கொள்ளும். ஆதலால், அந்த நீர்மத்தின் வெப்பநிலை சிறிது குறையும். இவ்வாறு தொடர்ச்சியாக ஆவியாகும் போது அந்த நீர்மத்தின் வெப்பநிலை மிக மிகக் குறைந்து விடும். இந்த அடிப்படையே கடல் குளிரூட்டலில் நீர்மநிலையில் உள்ள வளிமங்களை நீர்மநிலையில் நிலைத்திருக்கச் செய்கிறது. முழுமையாகக் காப்பிடப்பட்ட கலன்களில் நிரப்பப்பட்டுள்ள நீர்ம வளிமங்களில் ஏற்படக்கூடிய வளிமங்களை அகற்றி அந்த வளிமங்களை மிகு அழுத்தத்திற்கு அழுத்த வேண்டும். இவ்விதம் அந்தக்கலனில் உருவாகக்கூடிய வளிமங்கள் தொடர்ச்சியாக வெளியேறி நீர்மமாக அந்தக் கலத்திற்கே மீண்டும் அனுப்பி வைக்கப்படும். தொடர்ச்சியாக அந்த வளிமங்கள் அந்தக் கலனிலிருந்து வெளியேறுவதால் அந்தக் கலனில் வளிமங்கள் மீண்டும் மீண்டும் உருவாக இயலும். அதனால் அந்த நீர்மநிலை வளிமங்களின் வெப்ப நிலையை எந்த வெப்ப நிலையில் அவை நீர்மமாக நிலைத்திருக்குமோ, அதே வெப்ப நிலையில் கடற்பயணத்தின் போது பாதுகாக்கவும் முடியும். மேலும் இயற்கை வளிமங்களை நீர்ம நிலையில் கொண்டு செல்லும் போது, அந்த நீர்மத்தில் உருவாகக் கூடிய வளிமங்கள் கடல் கொதிகலனை இயக்கவும் பயன்படுகிறது. இவ்விதமாக அந்தச் சரக்குகள் குளிரூட்டியாகக் கடல் குளிரூட்டலில் பயன்படுகிறது.

கடல் குளிரூட்டலின் பயன்கள் தொகு

கப்பல் பயணம் செய்யக்கூடிய மாலுமிகளுக்கும், கப்பற் பயணிகளுக்கும் தேவையான உணவு வகைகளைக் கெட்டுப் போகாமல், சுவை குன்றாமல் பாதுகாக்கவும் இது மிகத் தேவையானது ஒருசில நீர்மச் சரக்குப் பொருள்கள், சாதாரண சுற்றுபுறத் தட்ப வெப்ப நிலைக்கே ஆவியாகும் தன்மையுடையவை. அவற்றை நீர்ம நிலையிலேயே கடற்பயணத்தில் பாதுகாக்க கடல் குளிரூட்டல் உதவுகிறது. மேலும், கப்பற் பயணிகளும் மாலுமிகளும் தங்கியிருக்கும் அறைகளில் குளிரூட்டிகளாக பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள் தொகு

"கடல் குளிரூட்டல்". அறிவியல் களஞ்சியம் தொகுதி-7. (திருவள்ளுவர் ஆண்டு 2022 மார்கழி திங்கள் 1991). Ed. பேராசிாியர் கே.கே.அருணாசலம். தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். 151. அணுகப்பட்டது 20 சூலை 2017. 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_குளிரூட்டல்&oldid=3622421" இலிருந்து மீள்விக்கப்பட்டது