கட்டாய உரிமம்

கட்டாய உரிமம் என்பது சட்டப்படியான உரிமம் அல்லது கட்டாயக் கூட்டு மேலாண்மை என்றும் அறியப்படும். இதன்படி, கட்டாய உரிமம் கேட்பவர் முதலில் உரிமையாளரிடம் தனக்கு அந்த மருந்தை தயார் செய்ய உரிமம் கேட்கவேண்டும். உரிமையாளர் ஒப்புக்கொள்ள வில்லை என்றால்தான் கட்டுப்பாட்டாளரிடம் மனு கொடுக்க முடியும். ஆகையால் கட்டாய உரிம சட்டம் காப்புரிமையின் சொந்தக்காரரின் உரிமையை மறுப்பதாகாது.[1] மேலும், உரிமையாளருக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை கட்டணமாக வழங்கப்படும்.

இந்தியாவில் கட்டாய உரிமம்

தொகு

கட்டாய உரிமம் சட்டத்தை மறு ஆய்வு செய்ய 1957இல் ஜஸ்டிஸ் என்.ராஜகோபால அய்யங்கார் மத்திய அரசால் பணிக்கபட்டார். 1959இல் அவர் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார் .அந்த அறிக்கையில் அவர் கூறுவது என்ன வென்றால் காப்புரிமைகள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் கண்டுபிடிப்பாளரின் நலனை பேணுவதல்ல; நாட்டின் பொருளாதார நலனைப் பேணுவதே.ட்ரிப்ஸ் ஒப்பந்தத்திலும் இது போல உரிமம் வழங்குவதை உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் மற்றவரின் உபயோகம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பை அதன் உரிமையாளரோ அவருடைய அனுமதி பெற்ற ஒருவரோ தான் உபயோகிக்க முடியும். அவரிடம் எவரேனும் அனுமதி கேட்டு அவர் மறுத்தால் அவர் ஒப்புதல் இல்லாமல் சில சூழ்நிலைகளில் உரிமம் வழங்கப்படும்.இந்திய சட்டத்தில் எந்த நிபந்தனைக்குள்பட்டு கட்டாய உரிமம் வழங்கலாம் என்று வரையறுத்துள்ளார்கள். அதனை முடிவு செய்பவர் பொது கட்டுப்பாட்டாளர். அந்த நிபந்தனைகள் பின்வருமாறு :

  • அ) ஏற்புடைய அளவிற்கு குறிப்பிட்ட காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பை பொறுத்து பொது மக்களின் தேவை பூர்த்தியாகவில்லை,
  • ஆ) குறிப்பிட்ட காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பு பொதுமக்களுக்கு ஏற்புடைய அளவிற்குக் கட்டுபடியாகும் விலையில் விற்கப்படுவதில்லை;
  • இ) இந்திய எல்லைக்குள் காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பை செயல்படுத்தவில்லை.

இதில் ஏதாவது ஒரு நிபந்தனை பூர்த்தி ஆனாலும் போதும், கட்டாய உரிமம் வழங்கலாம்.[1]

நெக்சாவார்

தொகு

காப்புரிமைக்கு உரிமையாளரான பாயர் கம்பெனி ஒரு வருடத்திற்கு இந்திய மக்களின் தேவை 20,000 மருந்து பெட்டிகள் என்று சொன்னது. கட்டாய உரிமத்திற்கு விண்ணப்பித்த நாட்கோ கம்பெனியோ இந்தியாவின் ஒரு வருடத்தின் தேவை 70,000 மருந்து பெட்டிகள் என்று கூறியது. ஆனால் பாயர் கம்பெனி விற்றது 593 பெட்டிகள்தான். இது மிகக்குறைவே.ஆகவே பொது மக்களின் தேவை என்கிற நிபந்தனை பூர்த்தியாகவில்லை .அடுத்ததாக பாயர் கம்பெனி நிர்ணயித்த விலை கட்டுபடியாகும் விலையா என்ற கேள்வியில் , பாயரின் தரப்பு, விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு தங்களுக்கு ஆகும் செலவைக் கணக்கிட்டால் மாதத்திற்கு ரூபாய் 2,80,000 என்பதுதான் சரியான விலையாக இருக்கும் என்றது. கட்டுப்படியாகும் விலை என்பது விற்பவரைப்பார்த்து கணிப்பது அல்ல, பொதுமக்களுக்கு வாங்க கட்டுபடியாகுமா என்று பார்த்து கணிப்பது. இந்திய மக்களின் வருமானம் மற்றும் வாங்கும் திறனைக் கருத்தில் கொண்டு இந்த விலை பொதுமக்களுக்குக் கட்டுபடியாகும் விலை என்கிற நிபந்தனை பூர்த்தியாகவில்லை .இந்த கண்டுபிடிப்பு இந்திய எல்லைக்குள் செயல்படுத்தப்பட்டதா இல்லையா என்று காண வேண்டும். அப்படி என்றால் , இந்த மருந்தை இறக்குமதி செய்தால் போதுமா, அல்லது, இங்கேயே மருந்தை தயார் செய்யவேண்டுமா என்பது விவாதிக்க பட்டது.கட்டுப்பாட்டாளர் இங்கேயே தயார் செய்வது அவசியம் என்றார். பாயர் கம்பெனி மருந்தை இங்கு தயார் செய்யாததால் இந்த நிபந்தனையும் பூர்த்தியாகவில்லை.[1] அதன் விளைவாக இந்தியாவில் முதன்முதலில் நெக்சாவார் (Nexavar) அல்லது சொரொபெனிப் டோசிலேட் (Sorafenib Tosylate) என்ற புற்றுநோய்க்கான மருந்திற்கு கட்டாய உரிமம் வழங்கப்பட்டது. இக்கட்டாய உரிமத்தின்படி நேக்டோ ஃபார்மா (Nacto Pharma) என்ற நிறுவனம் இம்மருந்தின் பொதுவான வகையை தயாரித்து விற்கலாம், மேலும் இம்மருந்துக்கான உரிமையாளரான பாயர் நிறுவனத்திற்கு (Bayer Corporation) 7 சதவீதம் உரிமைத்தொகைக் கட்டணம் (Royalty) செலுத்த வேன்டும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 பிரபா ஸ்ரீதேவன். "அறிவுசார் சொத்துரிமையும் கட்டாயக் காப்புரிமையும்!". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டாய_உரிமம்&oldid=2718612" இலிருந்து மீள்விக்கப்பட்டது