கண்டப்பெயர்ச்சி

பூமியிலுள்ள கண்டங்களில் ஒன்றுக்கொண்று தொடர்புடன் நகர்வது கண்டப்பெயர்ச்சி (continental drift) ஆகும். இக்கருதுகோள் முதன்முதலில் 1596ஆம் ஆண்டு அபிரகாம் ஒர்டிலீயசு என்பவரால் முன்மொழியப்பட்டு, பின் 1912ஆம் வருடம் ஆல்பிரடு வேகனர் என்பவரால் கோட்பாடாக விளக்கப்பட்டது.[1] முன்னொரு காலத்தில் உலகிலுள்ள எல்லாக் கண்டங்களும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு மாபெரும் நிலப்பரப்பாக அமைந்திருந்தன என்ற கருத்தை வெளியிட்டார். அதற்கு பான்கையா (pangaea) என்ற பெயரை சூட்டினார். அதற்கு முழு உலகம் என்று பொருள். பான்கையாவைச் சுற்றி ஒரே ஒரு கடல்தான் இருந்தது. அதற்கு பாந்தாலசா (Panthalassa) என்று பெயர். அதற்கு முழுக்கடல் என்று பொருள். ஆக ஆரம்பத்தில் ஒரே ஒரு மாபெரும் கண்டமும், ஒரே ஒரு மாபெரும் கடலும் மட்டுமே உலகத்திலிருந்தன. பான்கையா விரிசல் கண்டு பல துண்டுகளாயிற்று. அந்தத் துண்டுகள் மெல்ல மெல்ல நகர்ந்து பிரிந்தன. பூமியின் நடுப்பகுதியிலுள்ள சூடான பாறைக் குழம்பில் மிதக்கிற கருங்கல் திட்டுகளை போல அவை பிரிந்து சென்றன என்று கூறினார். இது கண்டப்பெயர்ச்சி கொள்கை எனப்படுகிறது. 1950 களில் கடலடித் தரைகள் தீவிரமாக ஆராயப்பட்டு அட்லாண்டிக் கடலின் நடுவில் ஒரு பெரிய மலைத் தொடரும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அடலாண்டிக் கடலின் நடுவில் ஒரு மாபெரும் விரிசல் ஏற்பட்டு அது மெல்ல அகலமாகிக் கொண்டிருப்பது உணரப்பட்டது.

பான்கையா பிரிந்து செல்வதைக் காட்டு அசைப்படம்
பல கண்டங்களில் காணப்படும் புதைப்படிமம்

பின்னர் 1960ஆம் வருடங்களில் தக்க நிலவியல் சான்றுகளுடன் "தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு" என்ற கோட்பாட்டுடன், நகர்தலுக்கான காரணமும் கண்டறியப்பட்டது. 1968ஆம் ஆண்டில் அன்டார்டக்காவில் ஒரு புதை படிவ எலும்பு கண்டெடுக்கப்ட்டது. அது நீரிலும் நிலத்திலும் வாழ்கிற ஒரு விலங்கினுடையது. அது வெப்ப நாடுகளில் மட்டுமே வசிக்கக்கூடியது. அது எப்படித் தென் துருவக் குளிர்ப்பகுதிக்கு வந்தது என்ற கேள்வி எழுந்தது. முன்னொரு காலத்தில் அன்டார்டிக்கா சூடாக இருந்திருகலாமென்று வைத்துக் கொண்டால் கூட மற்ற கண்டங்களிலிருந்து கடலைத் தாண்டி அது அன்டார்டிக்காவுக்கு வந்திருக்க முடியாது என்று எண்ணப்பட்டது. 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அன்டார்டிக்காக் கண்டம் பூமியின் வெப்பப் பகுதியில் இருந்த போது அந்த விலங்கு அதில் வசித்திருக்கலாம். மாண்டு பூமியில் புதைந்திருக்கலாம். அண்டார்டிக்கா பிரிந்து தெற்கு நோக்கி நகர்ந்து வந்த போது அதன் எலும்பும் கூடவே வந்து விட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Wegener, Alfred (6 January 1912), "Die Herausbildung der Grossformen der Erdrinde (Kontinente und Ozeane), auf geophysikalischer Grundlage" (PDF), Petermanns Geographische Mitteilungen, 63: 185–195, 253–256, 305–309, archived from the original (PDF) on 4 அக்டோபர் 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டப்பெயர்ச்சி&oldid=3720351" இலிருந்து மீள்விக்கப்பட்டது