கதவடைப்பு

கதவடைப்பு எனப்படுவது தங்களுடைய கோரிக்கைகளுக்காகப் போராடும் தொழிலாளர்களைப் பணிய வைக்க நிர்வ

கதவடைப்பு எனப்படுவது தங்களுடைய கோரிக்கைகளுக்காகப் போராடும் தொழிலாளர்களைப் பணிய வைக்க நிர்வாகம் தானாகவே தொழில் நிறுவனத்தை மூடிக் கொள்ளும் நிலை. இந்தியத் தொழிலாளர் நலச் சட்டம் 2(L) பிரிவின்படி தொழில் நடக்கும் இடத்தைத் தற்காலிகமாக மூடுவது அல்லது தற்காலிகமாக தொழிலை நிறுத்தி வைத்தல் அல்லது தற்காலிகமாகத் தொழிலாளர்களுக்கு வேலை தர மறுத்தல் கதவடைப்பு எனப்படும்.

கதவடைப்பு உரிமை மீதான கட்டுப்பாடுகள் தொகு

கதவடைப்பு உரிமையானது தொழில் தொடங்கும் உரிமையைப் போன்று அடிப்படை உரிமையல்ல. எனவே கதவடைப்பு உரிமையின் மீது இந்தியத் தொழிற் தகராறுகள் சட்டம் -1947 பொதுப் பயன்பாட்டுப் பணிகளிலும், மற்ற பணிகளிலும் சில நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கிறது.

பொதுப்பயன்பாட்டுப் பணிகளில் கட்டுப்பாடுகள் தொகு

பொதுப்பயன்பாட்டுப் பணிகளில் வேலை நிறுத்தம் செய்வதற்குரிய நிபந்தனைகளே கதவடைப்பு செய்வதற்கும் பின்பற்றப்பட வேண்டும். அவை

  1. கதவடைப்பு செய்வதற்கு 6 வாரங்களுக்கு முன்பாக அதுகுறித்த அறிவிப்பு ஒன்றினை வழங்க வேண்டும்.
  2. அத்தகைய அறிவிப்பு தந்து 14 நாட்கள் முடிவதற்கு முன்பு கதவடைப்பு செய்யக் கூடாது.
  3. கதவடைப்பு செய்யப் போவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட நாளுக்கு முன்பாக கதவடைப்பு செய்யக் கூடாது.
  4. ஒரு கோரிக்கை அல்லது சமரச நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது அல்லது அந்த சமரச பேச்சுவார்த்தை முடிந்து 7 நாட்களுக்குள்ளாக அதே கோரிக்கை குறித்து கதவடைப்பு செய்தல் கூடாது.

சட்டவிரோத கதவடைப்பு தொகு

இந்த 4 நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றினை மீறினாலும் அக்கதவடைப்பு சட்டவிரோதமான கதவடைப்பு ஆகிவிடும்.

  • ஒரு வழக்கில் பொதுப் பயன்பாட்டுப் பணிகளில் ஒப்பந்தத்தை மீறி செய்யப்படும் வேலை நிறுத்தமும், சமரச நடவடிக்கைகள் நிலுவையில் இருக்கும் போது அல்லது அது முடிவடைந்த 7 நாட்களுக்குள் செய்யப்படும் கதவடைப்பும் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

பிற தொழில்களில் கதவடைப்பு தொகு

பிற தொழில்களில் வேலைநிறுத்தம் செய்வதற்குரிய நிபந்தனைகள் கதவடைப்பு செய்வதற்கும் பொருந்தும்.

  1. சில கோரிக்கைகள் குறித்து சமரச நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது அல்லது அவை முடிவு செய்யப்பட்டு 7 நாட்கள் நிறைவடையும் முன்பாக கதவடைப்பு செய்யக் கூடாது.
  2. தொழிலாளர் நீதிமன்றம், தொழில் தீர்ப்பாயம், தேசியத் தீர்ப்பாயம், இசைவுத் தீர்ப்பாயம் ஆகியவற்றில் வழக்கு நிலுவையிலுள்ள போது அல்லது அவை முடிவுக்கு வந்து இரண்டு மாதங்கள் முடிவடையும் முன்பாக அதே தாவாவின் காரணமாக கதவடைப்பு செய்யக்கூடாது.
  3. சில தாவாக்கள் குறித்து உடன்பாடுகள் அல்லது முடிவுகள் ஏதேனும் ஏற்பட்டு அது செயலில் இருக்குமானால் அதே பிரச்சனைகளுக்காக நிர்வாகம் கதவடைப்பு செய்யக் கூடாது.

சட்டவிரோத கதவடைப்பு தொகு

இந்த 3 நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றினை மீறினாலும் அக்கதவடைப்பு சட்டவிரோதமான கதவடைப்பு ஆகிவிடும்.

சட்டவிரோதமான கதவடைப்பின் விளைவுகள் தொகு

சட்டவிரோதமான கதவடைப்பு செய்யப்பட்ட காலம் முழுமைக்குமான சம்பளத்தை தொழிலாளர்களுக்குத் தர நிர்வாகம் கடமைப்பட்டுள்ளது.

  • ஒரு வழக்கில் சட்டவிரோதமான வேலை நிறுத்தத்தின் காரணமாகச் செய்யப்பட்ட கதவடைப்பு காலத்திற்குரிய சம்பளத்தைத் தொழிலாளர்கள் பெறமுடியாது.ஆனால் சட்டப்படியான வேலை நிறுத்தத்தின் காரணமாகச் செய்யப்படும் கதவடைப்பு காலத்திற்குரிய சம்பளத்தைத் தொழிலாளர்கள் பெறலாம் என முடிவு செய்யப்பட்டது.

வேலைநிறுத்தமும் கதவடைப்பும் தொகு

வேலை நிறுத்தமும், கதவடைப்பும் ஒன்று போல் தோன்றினாலும் இரண்டுக்கும் வேறுபாடுகள் உள்ளன.

வேலை நிறுத்தம் கதவடைப்பு
தொழிலாளர்கள் தரப்பு நடவடிக்கை. நிர்வாகத்தின் நடவடிக்கை.
தொழிலாளர்கள் கூட்டாகச் சேர்ந்து பொதுக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை செய்ய மறுப்பது. நிர்வாகம் தொழில் நடக்கும் இடத்தைத் தற்காலிகமாக மூடுதல் அல்லது தொழிலைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் அல்லது தற்காலிகமாக தொழிலாளர்களுக்கு வேலை தர மறுத்தல்.
நிர்வாகத்தைப் பணிய வைக்கத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் ஆயுதம். தொழிலாளர்களைப் பணிய வைக்க நிர்வாகம் பயன்படுத்தும் ஆயுதம்.
தொழிற் தகராறு காரணமாக ஏற்படுகிறது. ஏற்கனவே உள்ள தகராறு அல்லது தகராறு எழக்கூடிய அபாயம் காரணமாக எழுகிறது.
பொது வேலை நிறுத்தம், அடையாள வேலை நிறுத்தம் போன்று பல வகைகளில் மேற்கொள்ளப்படுகிறது. இதில் வகைப்பாடுகள் இல்லை.
சட்டப்பூர்வமானதாக இருக்கும் நிலையில் வேலை நிறுத்தக் காலத்திற்குத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். சட்டப்பூர்வமானதாக இருக்கும் நிலையில் நிர்வாகம் கதவடைப்புக் காலத்திற்குத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டியதில்லை.
சட்டவிரோதமாக இருக்கும் நிலையில் வேலை நிறுத்தக் காலத்திற்குத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டியதில்லை சட்டவிரோதமாக இருக்கும் நிலையில் நிர்வாகம் கதவடைப்புக் காலத்திற்குத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.

இதையும் பார்க்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதவடைப்பு&oldid=2114817" இலிருந்து மீள்விக்கப்பட்டது