கத்தி போடுதல்
கத்தி போடுதல் என்பது இறைவனுக்கு தன்னுடைய உடம்பில் கத்தியால் குத்தி காயங்களை ஏற்படுத்தும் நேர்த்திக்கடனாகும்.[1] இராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு, தேவாங்கர் இனத்தினைச் சேர்ந்தவர்கள் இந்த நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள்.[2] கத்தி போடுதலின் போது ஆடல், பாடலுடன் மார்பிலும், கையிலும், கத்தியால் காயத்தினை ஏற்படுத்துகிறார்கள். இவ்வாறு பாடப்படும் புகழ் பாடல்கள் தண்டகம் என அழைக்கப்படும். கத்தி போடுதலின் போது ஏற்படும் காயங்களுக்கு பண்டாரம் எனப்படும் மஞ்சள் மட்டுமே பூசப்படுகிறது. காயத்திற்கு மருத்துவரை அணுகுதல் தெய்வக் குத்தமாக கருதப்படுகிறது.
இதனை அலகு சேவை என்றும் அழைக்கின்றனர்.
தொன்மம்
தொகுதேவலரின் ஏழாவது அவதாரமான தேவதாஸ் ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவில் ஒன்று அமைத்து அதில் ஸ்ரீ ராமலிங்க சவுடேசுவரியாக எழுந்தருள வேண்டி ஸ்ரீசைலத்தில் உறையும் ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமியையும் ஸ்ரீ பிரமராம்பா தேவியையும் அழைக்கிறார். அவரது அழைப்பை ஏற்ற ஈசனும் அம்மனை முதலில் அழைத்து செல்லும் படி கூறினார். வரும் வழியில் யாரும் திரும்பி தன்னை பார்க்கக் கூடாது என்ற கட்டளையுடன் தேவதாசனோடு அம்மன் பயணமாகிறார். அம்மனது பாத சலங்கை ஒலியின் மூலம் அவர் தங்களோடு வருவதை அனைவரும் அறிந்து கொண்டனர். வழியிலே நதியை கடக்கும் போது அந்த ஒலியானது யாருடைய செவிகளையும் எட்டவில்லை, எனவே அனைவரும் திரும்பி பார்க்கின்றனர். இதனால் கோபமடைந்த பிரமராம்பிகை நீரில் மறைந்து போகிறார். மன்றாடி அழைத்தும் வராத போது அனைவரும் கத்தியால் குத்தி உடலை காயப்படுத்தி கொண்டனர். மனமிரங்கிய அம்மன் நீரில் இருந்து மீண்டும் சவுடேசுவரி அம்மனாக வெளிப்பட்டு அவர்களுடன் வந்து திருக்கோயிலில் எழுந்தருளினார். இதனால் இன்றளவும் நீர் நிலைகளின் அருகே கத்தி போட்டு சவுடேசுவரி அம்மனை அழைப்பது வழக்கமாக உள்ளது.இதனால் சந்ததிகள் காக்கப்படுகின்றன என்பது நம்பிக்கையாகும். மேலும் இதன் நினைவாக ஸ்ரீசைலம் தேவாங்கரின் புண்ணிய தலமாக விளங்குகிறது,கொடியேற்றும் உரிமையும் தரப்பட்டுள்ளது.