கந்தரத்தனார்

கந்தரத்தனார் (கந்தர் அத்தனார்) சங்ககாலப் புலவர்களில் ஒருவர். எட்டுப் பாடல்கள் இவர் பாடியனவாகச் சங்கத்தொகை நூல்களில் உள்ளன.

இவரது பாடல் சொல்லும் செய்திகள்

செடியினம்

தொகு

கந்தரத்தனார் இயற்கையில் பெரிதும் ஈடுபாடு உள்ளவர். பல செடிகொடிகளை உற்றுநோக்கி அவற்றின் தன்மைகளையும், பயன்பாடுகளையும் தம் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். அவை:

  • அலரி - எரி போன்ற இதழ் கொண்டது. பகன்றைப் பூவோடு சேர்த்துக் கட்டி உமணர் அணிந்துகொள்வர்.
  • இரும்பை (இதன் பூ மழையோடு விழும் பனிக்கட்டி போல் இருக்கும். நடப்போரின் காலில் உருத்தும். கரடிகள் விரும்பி உண்ணும்)
  • ஓமை - ஓமையம் பெருங்காடு என்று சொல்லும் அளவுக்கு மிகுதியாக இருக்கும்.
  • கோடல் (உடைந்த வளையல் போல் பூ உதிரும்)
  • தளவு(புதரில் பூக்கும்)
  • தினை - தந்தை விதைப்பான். மகள் கிளி ஓட்டுவாள். கதிர் அறுத்த பின் நிற்கும் இதன் தட்டைக்கு இருவி என்று பெயர்.
  • நொச்சி - மனை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்தது.
  • பகன்றை - வழியெல்லாம் பூத்துக் கிடக்கும். அலரிப் பூவோடு சேர்த்துக் கட்டி உமணர் அணிந்துகொள்வர்.
  • பதவின் பாவை(அறுகம்புல்லின் கிழங்கு) (இரலை மான் விரும்பி மேயும்)
  • பலா - கோள் முதிர் பெரும்பழம்.
  • பிடவம் - நெருக்கமான குலைகளை உடையது. மாலையில் பூக்கும்.
  • பெண்ணை - இதன் மடல்களால் குதிரை செய்து தலைவன் தன் காதல் நிறைவேறக் காதலியின் ஊரில் உலா வருவான்.
  • முல்லை - இதன் மென்மை மகளிர் மேனிக்கு உவமை சொல்லப்பட்டுள்ளது.
  • வில்லாப் பூ - ஒருக்கம் பூ. மடல்மா மேல் வருபவன் இதனை மாலையாகக் கட்டி அணிந்துகொள்வான்.
  • வெதிர் - மூங்கில். இதன் முளைகளை யானை விரும்பி உண்ணும்.

அகநானூறு 23

தொகு

பொருள் தேடச் சென்ற தலைவன் மீள்வேன் என்று சொன்ன மழைக்காலம் வந்துவிட்டது. இவர் வரவில்லை என்று சொல்லித் தலைவி ஏங்கும்போது மழையின் செழிப்பைக் கூறுகிறாள்.

தளவம், பிடவம் பூக்கள் மலர்ந்து காடே 'கம்' என்று மணக்கிறது. வலையல் உடைந்தது போல் கோடல் பூக்கள் உதிர்ந்து கிடக்கின்றன. இரலைமான் அறுகம்புல்லின் கிழங்கை மேய்ந்துவிட்டு ஆற்றுமணல் தெரிய ஓடும் ஊற்றுநீரைப் பருகுகின்றன. இவர் என்னை உண்ட நொச்சிச்செடி பூத்துக் கொட்டுகிறது. (அவர் வரவில்லை)

அகநானூறு 95

தொகு
 
இரும்பை மரம்

தலைவனுடன் ஓடிப்போக உடன்பட்ட தலைவி தோழியிடம் சொல்கிறாள். மழை பெய்யும்போது விழும் பனிக்கட்டி போல் உதிரும் இரும்பைப் பூவை மேயும் கரடிகள் நிறைந்த காட்டு வழியில் நான் செல்லப்போகிறேன். என் நெற்றி பசந்ததையும், மேனி வாடியதையும் கண்ட ஊர் கௌவை மொழியக் கேட்டு இது ஒவ்வாது என்று கூறிக்கொண்டிருந்த தாய் நான் ஓடிப்போனதைக் கேட்டால் என்ன ஆவாளோ? என்கிறாள்.

பைபயப் பசந்தன்று நுதலும்; சாஅய், ஐது ஆகின்று, என் தளிர் புரை மேனியும்; பலரும் அறியத் திகழ்தரும், அவலமும்; உயிர் கொடு கழியின் அல்லதை, நினையின் எவனோ? வாழி, தோழி! பொரிகால்

பொகுட்டு அரை இருப்பைக் குவிகுலைக் கழன்ற ஆலி ஒப்பின் தூம்புடைத் திரள் வீ, ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க, ஈனல் எண்கின் இருங் கிளை கவரும் சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார், 10 கௌவை மேவலர்ஆகி, 'இவ் ஊர் நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ புரையஅல்ல, என் மகட்கு' எனப் பரைஇ, நம் உணர்ந்து ஆறிய கொள்கை அன்னை முன்னர், யாம் என், இதற் படலே? 15

அகநானூறு 191

தொகு

பொருள்தேடச் செல்ல எண்ணிய தன் நெஞ்சுக்குத் தலைவன் சொல்கிறான்.

உமணர் காளைமாட்டின் மேல் உப்பை ஏற்றிக்கொண்டு ஊர் ஊராக விற்கச் செல்வர். அவர்கள் தம் கால்களில் தோல் செருப்பு அணிந்திருப்பர். ஊரைக் கண்டதும் மணி அடிப்பர். அதனைக் கேட்டதும் ஊர்மக்கள் வீளை(வாய்விசில்) அடித்துக்கொண்டு ஓடிவந்து அவர்களுக்குப் பாதுகாவலாக இருப்பர்.

இப்படிப்பட்ட ஓமை மரக் காட்டில், நெஞ்சே! நீ பொருள் தேடச் செல்லப்போகிறாயா? ஆயின் முலை போன்ற பற்களையும், ஆற்றறல் போன்ற கூந்தலையும் கொண்ட உன்னாளுக்குச் சொல்லும் வலிமை உனக்கு இருக்கிறதா? எனகிறான்.

குறுந்தொகை 155

தொகு

தலைவி ஏங்குகிறாள்.

புனக்காட்டில் விதை தெளித்த உழவர் தாம் விதை கொண்டு சென்ற வட்டி நிறைய பூவுடன் மாலையில் மீள்கின்றனர். இவர் வரும் தேர்மணி ஓசை வரவில்லையே!

நற்றிணை 116

தொகு
 
பலாப் பழம்

தலைமகள் கலங்குகிறாள்.

தீமை கண்டால் பெரியோர் திருத்துவர் என்பர். கற்குகையில் வாழும் குறிஞ்சிப் பெண்டிர் இன்னும் ஓவாது ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்கிறார்களே!

முளைத்து வளரும் மூங்கிலை சூலுற்ற பெண்யானை மேயத்தானே செய்யும். (இதுபோலத்தான் இவர்கள் பேசுகிறார்கள்)

கிளையில் பழுத்த பலாப்பழம் பாறைப் பிளவுக்கு இடையில் விழுந்தது போல் இருந்ததுவர் நெடுந்தொலைவு சென்றுவிட்டார்.

நற்றிணை 146

தொகு

பொருளுக்காகப் பிரிகின்றவன் தோழிக்குகு கேட்குமாறு சொல்கிறான்.

மடல் மாவில் வருபவனே! 'கடன்றி மன்னன் குடைநிழல் போல' இங்குத் தங்கிச் சொல்க என்று சொல்லக்கூடாதா?

எழுதி = ஓவியம்
ஐயள் = வியப்புக்குரியவள்
அணங்கினாள் = வருத்தினாள்

எழுதி அன்ன வனப்புடைய இந்த ஐயள்தானே அணங்கினாள். (அவள்தானே வருத்தத்தைப் போக்கவேண்டும்)

நற்றிணை 238

தொகு

இடி முழக்கமே! உன் குரல் நன்றாக இல்லை. கேட்டால் பாம்பு மாண்டுவிடுகிறது. அவர் பிரிந்துவிட்டதால் நானும் துடிக்கிறேன். வண்டு வாய் திறக்கும் பிடவம் பூவைத்தான் நீ மலரச் செய்கிறாய். அதுவும் எனக்குத் துன்பம் தரும் மாலையில் மலர்கிறது.

தலைவி குமுறுகிறாள்.

நற்றிணை 306

தொகு

தந்தை தினை விதைத்தான். கையில் தட்டையை வைத்துக்கொண்டு தட்டி மகள் கிளி ஓட்டிக் காவல் காத்துவந்தாள். அப்போது இருந்த அந்தப் புனம் இப்போது தினை அறுவடையாகி வெற்றுத் தட்டையுடன் திருவிழா முடிந்தபின் வெறிச்சோடிக் கிடக்கும் ஊர் போலப் பொலிவிழந்து இருக்கிறது.

சிறைப்புறம் = இல்லத்தின் சிறகு போல் அமைந்திருக்கும் இடம்

தலைவிக்காகச் சிறைப்புறம் காத்திருக்கும் தலைவன் தோழிக்குக் கேட்குமாறு சொல்கிறான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தரத்தனார்&oldid=4164399" இலிருந்து மீள்விக்கப்பட்டது