கன்னியாகுமரி இணைப்பு போராட்டம்

திருவாங்கூர்-கொச்சி பகுதிக்கு உட்பட்டிருந்த தமிழர் பகுதிகளை தமிழகத்துடன் இணைப்பதற்காக நடைபெற்ற போராட்டமே குமரி இணைப்பு போராட்டம் ஆகும். இது தெற்கெல்லை போராட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. 1945 ஆம் ஆண்டு தொடங்கி 1956 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இந்த போராட்டம் பல உயிர்பலிகளை சந்தித்த போராட்டமும் ஆகும்.

ஆரம்ப வரலாறு:

தொகு

தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு ஆகிய தாலுகாக்களில் தமிழர்கள் பெருவாரியாக வசித்து வந்தனர். தமிழர் பகுதிகளில் மலையாளம் அலுவல் மொழியாக இருந்தமையும், தமிழ் பள்ளிகள் மிகக் குறைவாக இயங்கி வந்ததும் தமிழர்களுக்கு பல இன்னல்களை தோற்றுவித்து வந்தன. மொழி சம்பந்தமாக தமிழர்கள் விடுத்த கோரிக்கைகளை திருவாங்கூர் அரசு தொடர்ந்து புறக்கணித்து வந்தது1.

மலையாள மொழி பேசப்படும் பகுதிகளை ஒருங்கிணைத்து கேரள மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு 'திருவாங்கூர் சமஸ்தான காங்கிரஸ்' கட்சி ஆதரவு அளித்து வந்ததால், அக்கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தலைவர்கள் சிலர் அக்கட்சியை விட்டு வெளியேறினர். அவர்கள் 1945 ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று நாகர்கோவிலில் கூடி வழக்கறிஞர் சாம் நத்தானியேல் தலைமையில் 'அகில திருவாங்கூர் தமிழர் காங்கிரஸ்' எனும் அரசியல் இயக்கத்தை தொடங்கினர். திருவாங்கூரின் தமிழர் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.2

திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் (தி.க.நா.கா.):

தொகு

1946 ஆம் ஆண்டு ஜுன் 30 தேதியன்று இரவிபுதூரில் கூடிய தமிழர் காங்கிரஸின் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் பெயரை 'திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்' என பெயர்மாற்றம் செய்து கொண்டனர். தோவாளை, அகஸ்தீஸ்வரம் தாலுக்காக்களில் மட்டுமே தமிழர்கள் மத்தியில் தி.த.நா.கா. செல்வாக்கு பெற்றிருந்தது. தமிழ்நாட்டு தலைவர்களில் ம.பொ.சிவஞானம் தி.த.நா.க.விற்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டு வந்தார்.3

இந்திய விடுதலைக்குப் பிறகு திருவாங்கூரில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தி.த.நா.கா. தமிழர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு பெறத் தொடங்கியது. விளவங்கோட்டைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் ஏ. நேசமணி 1947 செப்டம்பர் 8-ஆம் தேதியன்று நாகர்கோவில் ஆலன் நினைவு அரங்கில் தமது ஆதரவாளர்களின் கூட்டத்தை கூட்டியிருந்தார். அக்கூட்டத்தில் தி.த.நா.கா. வில் இணைந்து செயல்படுவதென முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, கல்குளம்-விளவங்கோடு தாலுகாக்களில் தி.த.நா.கா. மக்கள் செல்வாக்கினை பெறத் தொடங்கியது.4

1948 துப்பாக்கிச் சூடு:

தொகு

தேர்தல் பிரச்சாரத்தின் போது கல்குளம்-விளவங்கோடு தாலுகாக்களில் வசிக்கும் பெரும்பான்மை தமிழ் சாதியினரான நாடார்களுக்கும், மலையாள ஆதிக்கச் சாதியினரான நாயர்களுக்குமிடையே மோதல்கள் நிகழ்ந்தன. மலையாள போலீசார் தமிழர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டனர். 1948 பெப்ரவரி மாதம் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தமிழர்கள் கொல்லப்பட்டனர்.5

அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.த.நா.கா. தமிழர் பகுதிகளில் சட்டமன்ற தேர்தலில் தி.த.நா.கா. தமிழர் பகுதிகளில் 14 தொகுதிகளை கைப்பற்றிச் சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. தி.த.நா.கா.வின் சட்டமன்ற கட்சித் தலைவராக நேசமணி தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது தலைமையிலேயே இந்த எல்லைப் போராட்டமானது வழிநடத்திச் செல்லப்பட்டது.6

1952 பொது தேர்தல்:

தொகு

1950 ஆம் ஆண்டு சமஸ்தான காங்கிரஸிற்கும், தி.த.நா.கா.விற்குமிடையே சமரசம் ஏற்படுத்தும் வண்ணம் பாளையங்கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டு நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்ததால், தி.த.நா.கா. தலைவர் பதவியிலிருந்து சாம் நத்தானியல் விலகிக் கொண்டார். கட்சியின் புதிய தலைவராக நேசமணியின் ஆதரவாளர் பி. ராமசாமி பிள்ளை தேர்வு செய்யப்பட்டார்.7

1952 ஆம் ஆண்டு நாடு முழுவதும் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி.த.நா.கா. எட்டு சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றியது.

.1952 தேர்தலில்

மனுவேல் சைமன்

வில்லியம்

நூர் முகம்மது

பி. இராமசாமி பிள்ளை

பொன்னப்ப நாடார்

ஏ. கே. செல்லையா

சிதம்பரநாதன் நாடார்

தேவியப்பன் ஆகியோர் தமிழர் பிரநிதிகளாக வெற்றி பெற்றனர்

தி.த.நா.கா.வின் ஏ. சிதம்பரநாதன் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். நாகர்கோவில் மக்களவை தொகுதியில் ஏ. நேசமணியும், மாநிலங்களவை தேர்தலில் எ. அப்துல் ரசாக்கும் வெற்றி பெற்று தி.த.நா.கா. உறுப்பினர்களாக பாராளுமன்றத்திற்கு சென்றனர்.8

தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் அரசு போதிய அக்கறை காட்டவில்லை என்று குற்றம் சாட்டி கூட்டணியிலிருந்து தி.த.நா.கா. விலகிக் கொண்டதால் ஆட்சி கவிழ்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டது. 1954ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.த.நா.கா. 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது.9

பொன்னப்ப நாடார்,.பி. இராமசாமி பிள்ளை,தங்கையா குஞ்சன் நாடார்,அலெக்சாண்டர்,மனுவேல் சைமன்,டி.டி. இடானியல்,டி. ஆனந்தராமன்,வில்லியம்தாணுலிங்க நாடார்,சிதம்பரநாத நாடார்,நூர் முகம்மது,எஸ். எஸ். சர்மா  ஆகியோர் 1954 தேர்தலில் வெற்றி பெற்றனர்

1954 துப்பாக்கிச்சூடு:

தொகு

திரு-கொச்சி மாநில முதல்வராக பதவி வகித்த பட்டம் தாணுபிள்ளை தமிழர் போராட்டத்திற்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். குறிப்பாக தேவிகுளம், பீர்மேடு பகுதி தமிழர்கள் மலையாள போலீசாரின் ஆராஜகங்களுக்கு ஆளாகி வந்தனர். போலீசாரின் அத்துமீறல்களை கண்டித்து நாகர்கோவில் பகுதி தி.த.நா.கா. தலைவர்கள் மூணாருக்குச் சென்று தடையை மீறி போராட்டம் நடத்தி கைதாயினர். இதனால் தென் திருவாங்கூர் பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.10

அரசின் அடக்குமுறைகளை கண்டித்து ஆகஸ்ட் 11 ஆம் தியதியன்று தி.த.நா.கா. அறிவித்திருந்த 'விடுதலை நாள்' போராட்டத்தின் போது ஊர்வலங்களும், பொதுக்கூட்டங்களும் நடைபெற்றன. மார்த்தாண்டம் மற்றும் புதுக்கடை ஊர்களில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான தி.த.நா.கா. தொண்டர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டனர். போலீசாருக்கு அஞ்சி தமிழர்கள் பலர் தமிழகப் பகுதிகளில் தலைமறைவாயினர். இறுதியில் பட்டம் தாணுபிள்ளையின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகே தமிழர் பகுதிகளில் அமைதி திரும்பியது.11

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுதல்:

தொகு

மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பசல் அலி கமிஷன் 1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தியதியன்று தமது அறிக்கையை வெளியிட்டது. தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின்கரை தாலுகாக்களை புதிதாக அமையவிருக்கும் கேரள மாநிலத்துடன் இணைக்க கமிஷன் பரிந்துரைத்தது.12

1956 ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் தியதி அன்று தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு தாலுகாக்கள் கன்னியாகுமரி மாவட்டம் என்ற பெயரில் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன. செங்கோட்டை பகுதி நெல்லை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. தி.த.நா.கா. கோரிக்கை விடுத்த பகுதிகளில் பெரும்பாலான பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டு தி.த.நா.கா. கலைக்கப்பட்டது.13

குறிப்பு:

தொகு
  1. V. Sathianesan - Tamil separatism in Travancore.
  2. ஆர். ஐசக் ஜெயதாஸ் - கன்னியாகுமரி மாவட்டமும் இந்திய சுதந்திர போராட்டமும்.
  3. D. Daniel - Tranvancore Tamils : struggle for identity.
  4. பி. யோக்சுவரன் - திருவாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு.
  5. D. Daniel - Tranvancore Tamils : struggle for identity.
  6. டி. பீட்டர் - மலையாளி ஆதிக்கமும் தமிழர் விடுதலையும்.
  7. பி. யோக்சுவரன் - திருவாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு.
  8. பி. யோக்சுவரன் - திருவாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு.
  9. பி. யோக்சுவரன் - திருவாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு.
  10. ஆர். குப்புசாமி - சத்திய யுத்தத்தின் சரித்திர சுவடுகள்.
  11. டி. பீட்டர் - மலையாளி ஆதிக்கமும் தமிழர் விடுதலையும்.
  12. B. Mariya Jhon- Linguistic Reorganisation of Madras presidency.
  13. டி. பீட்டர் - மலையாளி ஆதிக்கமும் தமிழர் விடுதலையும்.