கன்னியாகுமரி திவ்ய தேசங்கள்

108 திவ்ய தேசங்களின் ஒரு பகுதி

கன்னியாகுமரி மாவட்ட திவ்ய தேசங்கள் என்பவை ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடல்) செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரண்டு திவ்ய தேசங்களாகும். அவை பின்வருமாறு:

  1. திருப்பதிசாரம்: கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர் ஆகும். இது நாகர்கோவிலிலிருந்து ஆரல்வாய்மொழிக்குச் செல்லும் முக்கிய சாலையில் சற்று ஒதுங்கி, 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 108 திவ்ய தலங்களில் இதுவும் ஒன்று. மூலவர் திருவாழிமார்பன் ஆவார். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவ மாமுனிவர் நம்மாழ்வார் இத்திருத் தலத்தில் பிறந்ததால், இவ்விடம் பெரும் புகழ்பெற்றது. ’வான்பரிசாரத்து இருந்த என் திருவாழ்மார்பர்’. வைணவ நூல்களில் இவ்வூர் 'திருவாம்பரிசாரம்’ என்றே குறிக்கப்படுகிறது. திரு என்கிற இலக்குமியை மார்பில் கொண்டுள்ளதால் இங்கு தாயாருக்கு தனி சந்நிதி இல்லை. ஊர்மக்களின் முக்கிய தொழில் பயிர்த்தொழிலேயாகும். வயலும் தென்னந்தோப்புகளும் அதிகம் காணப்படும்.
  2. திருவட்டாறு: கன்னியாகுமாரி மாவட்டம் கல்குளம் வட்டத்தில் திருவட்டாறு அமைந்துள்ளது. இவ்வூர் நாகர்கோவிலிலிருந்து 23 கி.மீ. தொலைவிலுள்ளது. அருகிலுள்ள தொடருந்து நிலையம் குழித்துறை இரயில் நிலையமாகும். இவ்வூரை, பறளியாறு மூன்று பக்கமாகச் சுற்றி வருவதால் திருவட்டாறு என பெயர்பெற்றது. அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் தலத்தின் மூலவராவார். நிலமடந்தையும் திருமடந்தையும் தேவியராவர். புனித நீர்- வாட்டாறு இராமதீர்த்தம் , தலமரம்-செண்பக மரம். அருமையான கோவில். புரட்டாசி மாதம் 3 முதல் 9ஆம் நாள் வரையிலும் பங்குனி மாதம் 3 முதல் 9ஆம் நாள் வரையிலும் சூரியன் மறையுமுன் கருவறை நோக்கி தன் கதிர்களைப் பரப்பி அஞ்சலிப்பது சிறப்பாகும். நம்மாழ்வாரால் பாடப்பெற்ற திருத்தலமாகும். சைதன்ய மகாபிரபு இத்தலத்திலிருந்து பிரம்மசம்கிதைக்கு உரை எழுதினார். இன்னொரு சிறப்பு இவ்விடத்தினைச் சுற்றி 12 சிறப்புமிக்க சிவாலயங்கள் உள்ளன. தூய்மையாகப் பராமரிக்கப்படும் இக்கோவிலில் அநேக சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன. வயல்களும் சோலைகளும் அழகு சேர்க்கின்றன. ஆடி, தை இரு மாதங்களில் 108 பதார்த்தங்களுடன் பூசை செய்து பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தங்கும் வசதிகளும் உள்ளன. 108 வைணவ திவ்யதேசங்களில் இரண்டு இம்மாவட்டத்திலுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  • தமிழ்நாடு மாவட்ட விவரச்சுவடிகள் -2006