கப்பல் புழு
கப்பல் புழுக்கள் (shipworms) கடல்வாழ் மெல்லுடலிகள் ஆகும். இவை டெரிடினிடே (Teredinidae) குடும்பத்தைச் சேர்ந்த கடல்நீர் கிளாம்கள் ஆகும். இவை நீண்ட மென்மையான உடலைப் பெற்றுள்ளன. இவை கடல்நீரில் அமிழ்ந்துள்ள மரத்தைத் துளைத்து அழிக்கின்றன. இவை மரக் குத்தூண்கள், துறைமுகக் கட்டுமேடைகள், கப்பல்கள் ஆகியவற்றையும் அழிக்கின்றன; இவை தம் ஒருமுனையில் அமையும் இரு கரட்டுக் கவைகளால் மரத்தை அரித்து உள்புகுகின்றன. இவை "கடல் கரையான்கள்" எனவும்[1] டெரிடோ புழுக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் பலகோடி ரூபாய் மதிப்புள்ள கப்பல் மரப்பலகைகள் துறைமுகங்களில் நடப்பட்டுள்ளன. மரத்தூண்கள், கட்டு மரத்தோணிகள் போன்றவை கப்பல் புழுக்களால் அழிவடைகின்றன. கொலம்பசின் நான்காம் கடற்பயணத்தின் போது இப்புழுக்களால் அவர் கப்பல்கள் அழிந்தன. அனைத்துக் கடல்களிலும் காணப்படினும் வெப்பக் கடல்களிடையே இப்புழுக்களின் முனைப்புடைய செயலால் கேடுகள் மிகுதியாகின்றன. இந்திய நாட்டுக் கிழக்குக் கடற்கரைக் கப்பல் புழுக்களில் 23 இனங்களும் மேற்குக் கடற்கரைப் புழுக்களில் 10 இனங்களும் காணப்படுகின்றன. இவற்றில் டெரிடோ பேங்கியா நாசிடோரா போன்றவை வலிமையான மரப்பலகைகளையும் துளைத்து அழித்து விடுன்றன. பொதுவாக ஆழம் குறைந்த அண்மைக் கடல்களிலேயே மிகுந்த அளவிலேயே இவை காணப்பட்டாலும் ஆயிரம் மீட்டருக்கும் மேல் உள்ள ஆழ்கடல்களிலும் இவை வாழ்கின்றன.
கடல்நீரில் வாழ்ந்த கப்பல் புழுக்கள் உப்புத்தன்மை குறைவான நீர் நிலைகளை அடையும்போது இறக்க நேரிடுவது குறிப்பிடத்தக்கது. இச்செயலைப் பயன்படுத்தி இப்புழுக்களால் தாக்கப்பட்ட கப்பல்களை, நன்னீர் நிலைகளில் ஆழ்த்தி, புழுக்களைக் கொல்லமுடியும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Garcia, Sierra (2021-12-24). "How "Termites of the Sea" Have Shaped Maritime Technology". JSTOR Daily (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-01.
- ↑ அறிவியல் களஞ்சியம் - தொகுதி 7 - தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு 63-7, டிசம்பர் 1991, பக்கம் 542.
மேலும் படிக்க
தொகு- Borges, L. M. S., et al. (2014). Diversity, environmental requirements, and biogeography of bivalve wood-borers (Teredinidae) in European coastal waters. Frontiers in Zoology 11:13.
- Powell A. W. B., New Zealand Mollusca, William Collins Publishers Ltd, Auckland, New Zealand 1979 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-00-216906-1
வெளி இணைப்புகள்
தொகு- "Ship-worm". New International Encyclopedia. (1905).