கமினி அணுக்கரு ஆராய்ச்சி உலை
கமினி அணுக்கரு ஆராய்ச்சி உலை[1] (KAMINI, Kalpakkam Mini reactor) கல்பாக்கத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் செயல்படும் அணு உலையாகும். இந்த அணுவுலையில் யுரேனியம் 233 தனிமம் எரிபொருளாக பயன்படுகிறது. இந்த யுரேனியம் 233 எரிபொருள், வேக ஈனுலையில் தோரியம் தனிமத்தை எரிபொருளாகக் கொண்டு இயக்கும் பொழுது கிடைக்கப்பெறுகிறது. இதற்கான தொழில் நுட்பமும் இந்திய அறிவிய வல்லுனர்களின் முயற்சியால் உருவானதாகும். இந்தியாவில் போதிய அளவு யுரேனியம் தனிம எரிபொருள் கிடைக்காததால், இவ்வாறு யுரேனியம் 233 எரிபொருளை உற்பத்தி செய்வதை இந்திய அணுசக்தித் துறை ஒரு மிக முக்கியமான உத்தியாகக் கடைப்பிடித்து வருகிறது.
உல்கிலேயே முதல் முறையாக யுரேனியம் 233 தனிமத்தை எரிபொருளாக பயன்படுத்தி செயல்படுத்தும் அணு ஆராய்ச்சி உலை இங்கு தான் செயல்படுகிறது. பாபா அணு ஆராய்ச்சி மையத்திலும், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்திலும் பணிபுரிந்த இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் இதை வெற்றிகரமாக வடிவமைத்து செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் கனநீருக்குப் பதிலாக இலேசான நீரே இங்கு தணிப்பியாகப் பயன்படுகிறது.
கமினி அணு ஆராய்ச்சி உலை முக்கியமாக வேக ஈனுலையில் செயல்படுத்திய கதிர்வீச்சுக்கு உட்பட்ட எரிபொருளின் தன்மையை நியூட்ரான் கதிர்வீச்சு வரைவி (neutron radiography) மூலம் சோதித்துப் பார்ப்பதாகும்.[2] இதில் நிழற்படமெடுத்துப்பதிவு செய்யும் வசதியும், நிகழ்நேரப் படிம உருவாக்க வசதியும் கொண்டது. செயல் பகுப்பாய்வு (Activation Analysis) ஆய்வுகளையும் மேற்கொள்ளலாம்.
அணு உலையில் செயல்பட்ட எரிபொருளின் கதிர் இயக்க அளவை மிகையாக இருப்பதால், பொதுவாக பயன்படும் ஙீ-கதிர்-காமாகதிர் நகலியல் (conventional X-radiography) இங்கு சரிவராது. இது போன்ற சோதனைகளுக்கு நியூட்ரான் கதிர்வீச்சு வரைவியை பயன்படுத்துவதே சரியாகும். விண்வெளியில் பயன்படும் வெடிமுறைக் கருவிகளை (Pyro technique devices) சோதிக்கவும் நியூட்ரான் கதிர்வீச்சு வரைவி பயன்படுகிறது. மருத்துவ தடயம் சார்ந்த கூறுகள் (Analysis of forensic samples), வண்ணப் பூச்சின் கூறுகள் (Fire retardation paints/compounds), கனிமத்தில் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் மதிப்பீடு (assay for gold) ஆகியவற்றையும் சோதித்துப் பார்க்கலாம்.
கமினி அணு உலை புளுத்தோனியம் தயாரிக்க உதவுகிறது.[3] இதன் மூலம் அணு எரிபொருள் சுழற்சி முழுமை பெறுகிறது, கழிவுகளை முழுமையாக நீக்கவும் இயலுகிறது.[4]