கம்பன் தமிழ்ப் பள்ளி, பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி

கம்பன் தமிழ் பள்ளி என்பது அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம், சோமர்செட் கவுண்டி, பிரிட்ஜ்வாட்டர் நகரியத்தில், இலாப நோக்கற்ற தமிழ்க் கல்விக்கான தொண்டு நிறுவனமாகும். (non-profit organization). [1] இந்தப் பள்ளி நியூ ஜெர்சி மாநிலத்தில் தமிழ் மொழி கற்கும் குழந்தைகள், பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 3:30 முதல் மாலை 5 மணி வரை, பிரிட்ஜ்வாட்டர் நகரியத்தில் தமிழ் மொழி வகுப்புகளை நடத்துகிறார்கள். அமெரிக்க சூழ்நிலைக்கேற்ற எளிமையான முறையில் வகுக்கப்பட்ட கலிபோர்னியா தமிழ் அகாடமி (CTA) என்று முன்னர் அறியப்பட்ட உலகக் கல்விக் கழகத்தின் (ITA) பொதுப் பாட திட்டத்தை (common structure syllabus) பின்பற்றி தமிழ் மொழி வகுப்புகளை நடத்தி வருகிறார்கள்.[2]

கம்பன் தமிழிப் பள்ளியில் தமிழ் மொழிக் கல்வி

தொகு

புலம்பெயர்ந்து வாழும் குழந்தைகளுக்கும், பதின்ம வயதினருக்கும் கம்பன் தமிழ்ப் பள்ளியில் தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த மாணவர்களுக்கு பள்ளி நேரங்களைத் தவிர, விடுமுறை நாட்களில், வேடிக்கையான செயல்பாடுகள் மற்றும் விளையாட்டுகள் மூலம் மொழியைப் படிக்கவும், எழுதவும், உரையாடவும் கற்றுத்தரப்படுகிறது. [2] தமிழ் மொழிக் கல்வியுடன், கம்பன் பள்ளி இணைந்து நடத்தும் தமிழ் மரபு சார்ந்த விழாக்களில் இசை, பாடல், நடனம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளில் இக்குழந்தைகள் பங்கேற்பதன் மூலம் தமிழ்ப் பண்பாட்டினை உள்ளீர்த்துக்கொள்ள முடிகிறது.[3]

வரலாறு

தொகு

கம்பன் தமிழ் பள்ளி என்பது 2019 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 8 ஆம் தேதி, வெள்ளியன்று, பன்னாட்டு மகளிர் தினத்தன்று புலம் பெயர்ந்த குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கும் நோக்கத்துடன் பிரிட்ஜ்வாட்டர் நகரியத்தில் தொடங்கப்பட்டது. இலாப நோக்கற்ற அமைப்பாக, 501(c)(3) விதியின் கீழ் செயல்படும் இப்பள்ளி கூட்டாட்சி வரிவிலக்கு (Federal Tax Exempt) பெற்றுள்ளது. கட்டணம் மற்றும் நன்கொடை போன்றவற்றிற்கு இரசீது வழங்கப்படுகிறது. வருமான வரி விலக்குப் பெற இது உதவும். நியூ ஜெர்சியில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க தன்னார்வலர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. இப்பள்ளியில் முதலாண்டிலேயே 80 மாணவர்கள் சேர்ந்து தமிழ் மொழி பயின்றனர். இப்பள்ளி தமிழ் மொழிக் கல்விப் பணியில் மூன்றாண்டுகள் நிறைவு செய்துள்ளது.

பள்ளி பற்றிய முக்கிய தகவல்கள்

தொகு
  • பிரிட்ஜ்வாட்டர்-ரேரிடன் நடுநிலைப் பள்ளியில், (முகவரி: 128 மெரிவுட் சாலை, பிரிட்ஜ்வாட்டர் டவுன்ஷிப், NJ 08807) வகுப்பறைகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு, பாதுகாப்பான சூழலில், தமிழ் வகுப்புகள், வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை மாலை 03.30 மணி முதல் 05.00 வரை நடைபெறுகின்றன. போதிய வகுப்பறைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களைக் கொண்ட சிறந்த பள்ளி வளாகம் இதுவாகும். அமெரிக்கப் பொதுப் பள்ளி பின்பற்றும் கல்வியாண்டை ஒட்டி செப்டம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் முடிய மூன்று பருவங்களுடன் தமிழ் மொழி வகுப்புகள் நடைபெறுகின்றன. வாரத்திற்கு 1 1/2 மணி நேர வகுப்புகள் வீதம் ஒரு கல்வியாண்டில் மொத்தம் சுமார் 30 வகுப்புகள் நடைபெறுகின்றன.
  • சுதர்ஷன் கிருஷ்ணமாச்சாரி பள்ளி முதல்வராகவும்,. சரவணன் சுப்ரமணியன் துணை முதல்வராகவும், பணியாற்றி வருகின்றனர். [4] இப்பள்ளியின் அறங்காவலர் குழுவில் பிரபு (தலைவர்), ஹரிஷ் (துணைத் தலைவர்), அருள்மணி (பொருளாளர்), ஹரிணி (நிர்வாகி) ஆகியோர் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் பங்கேற்றுள்ளனர்.[5] கம்பன் தமிழ்ப் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் அனைவரும் தன்னார்வத் தொண்டர்கள் ஆவர். இவர்களின் சேவைகளுக்காக பள்ளியிலிருந்து பணம் எதுவும் வழங்கப்படவில்லை.[3]
  • வருடந்தோறும் 4 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகள் வெவ்வேறு தர நிலைகளில் இப்பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். முன் மழலையர் (Pre-Kindergarten) வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பொதுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் விடுமுறை நாட்களில் இப்பள்ளியில் சேர்ந்து தமிழ் மொழிக் கல்வி பெற்று வருகிறார்கள். கல்வியாண்டின் செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் இப்பள்ளி தொடங்கப்பட்டு ஜூன் மாதம் இரண்டாம் வாரம் வரை இப்பள்ளி நடைபெறுகிறது. [4] ஒவ்வொரு வகுப்பிலும் 15 குழந்தைகளுக்கு மிகாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
  • மாணவர்கள் ஊடாடும் விளையாட்டுகள், கதைகள், பாடல்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் வேடிக்கையான முறையில் தமிழ் கற்றுக்கொள்கிறார்கள். [4]
  • இவர்களிடமிருந்து ஆண்டிற்கு $225 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கல்விக் கட்டணம் $225 (முன் மழலையர் வகுப்பு & மழலையர் வகுப்புக்கான கட்டணம் $50), இது வகுப்பறை வாடகை, உலகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் (ITA) இணைய முகப்பு (Internet Portal) மற்றும் புத்தகங்கள் மற்றும் கற்பித்தலுக்கான பொருட்கள் ஆகிய செலவுகளை ஈடுகட்ட வசூலிக்கப்படுகிறது. உலகத் தமிழ் கல்விக் கழகத்தின் (கலிபோர்னியா) பாடநூல்கள் மற்றும் DVD ஆகியன இப்பள்ளி மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. [4]
  • தங்கள் குழந்தைகளின் முன்னேற்றம் மற்றும் அறிக்கைகளைக் கண்காணிக்க இணைய அடிப்படையிலான கையேட்டை (Handbook) பெற்றோர்கள் அணுகலாம். [4]
  • கம்பன் தமிழ்ப்பள்ளி பிரிட்ஜ்வாட்டர் இந்து கோவிலுடனோ அல்லது பிரிட்ஜ்வாட்டர் இந்து கோயிலுக்குள் இயங்கும் தமிழ்ப்பள்ளிக்கோ தொடர்பில்லை.[3]

தன்னார்வ சேவை விருது

தொகு

கம்பன் தமிழ்ப் பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்களாக மேற்கொள்ளும் கடின உழைப்பை அங்கீகரிக்கும் நோக்கில் அவர்களுக்கு பள்ளித் தலைவரின் தன்னார்வ சேவை விருதை (PVSA) வழங்கி வருகிறது. சமூக சேவை மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனத்திற்காக பல மணிநேரம் தன்னார்வத் தொண்டாற்றும் மாணவர்கள் இவ்விருதிற்குத் தகுதியானவர்கள் ஆவர்.[2] அமெரிக்க உயர்நிலைப் பள்ளிகளில் பயின்றுவரும் மாணவர்களுக்கு இத்தகைய தன்னார்வ சேவை சான்றிதழ்கள் கல்லூரியில் சேரும்போது பெரிதும் உதவக்கூடும்.

இருமொழி முத்திரை

தொகு

வெளிநாட்டு மொழியை கற்பிப்பதற்கான அமெரிக்க கவுன்சில் நிறுவனம் (American Council for Teaching Foreign Language (ACTFL) மொழித்திறனைச் சோதிப்பதற்கான மதிப்பீட்டுக் கோட்பாடுகளை வகுத்துள்ளது. இதன்படி தகுதிமிக்க ஆசியர்களால் மாணவர்களின் மொழி அறிவினைச் சோதிக்கவும், சோதனையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இருமொழி முத்திரை (Seal Of Bi-literacy) என்னும் அங்கீகாரத்தை வழங்கும் திட்டத்திற்கு இருமொழி முத்திரை வழங்கும் திட்டம் என்று பெயர்.[6][7]

உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெறுவதற்குள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அங்கீகரிப்பதற்காக ஒரு பள்ளி மாவட்டம் அல்லது மாநிலத்தால் வழங்கப்படும் விருதான Biliteracy முத்திரையைப் பெற மாணவர்களுக்கு கம்பன் தமிழ்ப் பள்ளி உதவுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Home கம்பன் தமிழ்ப் பள்ளி
  2. 2.0 2.1 2.2 2.3 About Us கம்பன் தமிழ்ப் பள்ளி
  3. 3.0 3.1 3.2 FAQ கம்பன் தமிழ்ப் பள்ளி
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 உலகக் கல்விக் கழகம்
  5. Kamban Tamil School (New Jersey) Kamban Thamizh Palli
  6. அமெரிக்காவில் தமிழ்: கடமை தவறிய தமிழகம் இந்து தமிழ் திசை Aug 23, 2018
  7. அமெரிக்காவில் இருமொழிக் கொள்கையில் தமிழுக்கு அங்கீகாரம் தினமலர் ஜூன் 29, 2016