கம்மம் கோட்டை
கம்மம் கோட்டை இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மாவட்டத்தில் உள்ள கம்மம் நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. ஒரு குன்றின்மீது கட்டப்பட்டுள்ள இக்கோட்டை, கம்மம் நகரைப் பார்த்தபடி அமைந்துள்ளது. இது கிபி 950ல் காகதீய வம்சத்தவரால் கட்டப்பட்டது. எனினும் இக்கோட்டையைப் பல்வேறு காலகட்டங்களையும், வம்சங்களையும் சேர்ந்த ஆட்சியாளர்கள் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 1512ல் இக்கோட்டை குதுப் சாகிகளால் கைப்பற்றப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டில் ஆசஃப் சாகி ஆட்சியாளர்கள் இதனைக் கைப்பற்றிக்கொண்டனர்.
கருங்கல்லினால் கட்டப்பட்ட இக் கோட்டையின் கட்டிடக்கலைப் பாணி இந்துக் கட்டிடக்கலைப் பாணியினதும், இசுலாமியக் கட்டிடக்கலைப் பாணியினதும் கலவையாக அமைந்துள்ளது ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம். இதைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆட்சியாளர்களில் பலர் இதில் திருத்த வேலைகளைச் செய்ததே இதற்குக் காரணம். இக்கோட்டையில் காணப்படும் பல பகுதிகள் குதுப் சாகி ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்டவை.
வரலாறு
தொகு10 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை தெலுங்குப் பகுதிகளை ஆண்ட காகதீய வம்சத்தினர் கிபி 950 ஆம் ஆண்டில் இக்கோட்டையைக் கட்டத் தொடங்கினர். பின்னர் முசுநுரி நாயக்கர்களும், வெலமா அரசர்களும் ம்லைமீதுள்ள கோட்டையின் கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்தனர். கிபி 1000ல் கட்டி முடிக்கப்பட்ட போது இக்கோட்டை ரெட்டி வம்சத்தவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. குதுப் சாகி இராச்சியக் காலத்தில் இது மேலும் மேம்படுத்தப்பட்டது. தற்போது இது ஒரு சுற்றுலா மையமாக உள்ளது.[1]
குறிப்புகள்
தொகு- ↑ "Kammam Fort, AP Tourism". பார்க்கப்பட்ட நாள் 18 November 2013.