கம்யூனிஸ்ட் அகிலம்
பொதுக் கொள்கைகள்
தத்துவங்கள்
பொதுவுடமைவாதிகள்
|
கம்யூனிஸ்ட் அகிலம் பொதுவுடைமை அனைத்துலகம் (Communist International) என்பது ஒர் அனைத்துலக பொதுவுடைமை அமைப்பு ஆகும். இது நான்கு அகிலங்களைக் கொண்டது. முதல் அகிலம் கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் எங்கெல்சு ஆகியோரால் தலைமை தாங்கப்பட்டது.
மூன்று அகிலங்கள்
தொகுகம்யூனிஸ்ட் அகிலம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
- முதல் அகிலம் (1864-1872)
- இரண்டாம் அகிலம் (1889-1914)
- மூன்றாம் அகிலம் (1918)
- நான்காம் அகிலம்
முதல் அகிலம் (1864-1872)
தொகுமார்க்சும் – ஏங்கெல்சும் இங்கிலாந்தில் இருந்த போது சார்ட்டிஸ்டுகளுடனும், பிரான்சு, செருமனி மற்றும் இதர நாட்டு தொழிலாளர் குழுக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தனர். இந்நிலையில் 1847ஆம் ஆண்டு "நீதியாளர் கழகம்" என்ற பெயரில் செயல்பட்டு வந்த அமைப்பு, மார்க்ஸ் – ஏங்கெல்சுடன் தொடர்பு கொண்டு, அவர்களைத் தங்களது அமைப்பில் இணையும்படி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மார்க்சும் – ஏங்கெல்சும் இவ்வமைப்பில் இணைந்துக் கொண்டதோடு, நீதியாளர் கழகமாக இருந்த இவ்வமைப்பின் பெயரை “கம்யூனிஸ்ட் அகிலம்” என்று மாற்றினர். 1864 செம்படம்பர் 28 இல் லண்டனில் சில நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர் சங்கங்கள், மற்றும் சனநாயக இயக்கங்களின் கூட்டத்தில் அகிலம் நிறுவப்பட்டது. அக்கூட்டத்தில் சர்வதேசத் தொழிலாளர் சங்கம் நிறுவுவது என முடிவும் செய்யப்பட்டது. புதிய அமைப்பின் விதிமுறைகள் அமைக்கும் பொறுப்பு கார்ல் மார்க்சுக்கு அளிக்கப்பட்டது. [1]
கார்ல் மார்க்சின் வழிகாட்டுதலோடு துவக்கப்பட்டு இயங்கியதுதான் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Working men’s Association); பின்பு அது முதல் சர்வதேச அகிலம் (First International)[2] 1864-1876 என குறிப்பிடப்பட்டது.
மார்க்ஸ் பங்கு பெற்ற கம்யூனிஸ்ட் அகிலம் அமைப்பின் பொதுவான வழி காட்டுதலில் இன்றைய தொழிலாளர் இயக்கத்திற்கான தத்துவார்த்த, ஸ்தாபன அடிப்படையினை முதல் அகிலம் உருவாக்கியது[3]. தொழிலாளர் இயக்கத்தை உருவாக்க முயன்ற சில தலைவர்களும், அறிவாளிகளும் பிரான்சு, செருமனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, உருசியா போன்ற நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்கள் ஒன்று கூடி லண்டன், பாரிசு மற்றும் பிரசெல்சு ஆகிய நகரங்களில் அமைத்தது தான் கம்யூனிஸ்ட் அகிலம். அதற்காக மார்க்ஸ் - எங்கெல்ஸ் அறிக்கை தயாரித்து பிப்ரவரி 1848-ல் வெளியிட்டனர்.
”அனைத்து நாடுகளிலும் சோசலிசத்தின் வெற்றிக்கான விஞ்ஞானம்; கம்யூனிச சமூகம் கட்டப்படுவதற்கான விஞ்ஞானம்” என்று பின்பு ஸ்டாலினால் விளக்கிச் சொல்லப்பட்ட மார்க்சிய தத்துவத்தை உலக கண்ணோட்டத்தை, விஞ்ஞான சோசலிசத்தை தொழிலாளி வர்க்கத்திடையே எடுத்துச் செல்லும் பணியினை முதல் அகிலம் நிறைவேற்றியது.
பொதுவாக, அரசின் வர்க்கத் தன்மை பற்றி, குறிப்பாக முதலாளித்துவ அரசின் தன்மை பற்றி தெளிவுபடுத்தி தொழிலாளி வர்க்கம் எடுக்க வேண்டிய கொள்கை நிலை பற்றியும், தொழிற்சங்கங்களின் பணி பற்றியும், ஜனநாயக வாக்குரிமை பற்றியும், பெண்கள் நிலை பற்றியும் விவாதித்து ஒரு கூட்டு சிந்தனைக்கான தளத்தை அந்த அகிலம் உருவாக்கியது. அத்துடன் நீதியாளர் கழகத்தின் உறுப்பினர் அட்டைகளில் “அனைத்து மனிதர்களும் சகோதரர்களே” என்ற கோஷம் இடம் பெற்றிருந் ததை அகற்றி விட்டு, “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!” என்ற புரட்சிகரமான முழக்கத்தை முன்வைத்தனர்.
தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் கட்சி உருவாக்கப்படுவதன் தேவையினை எடுத்துக் காட்டி, அதன் அடிப்படை நடைமுறைகளை விளக்கிச் சொன்னது; விவசாய வர்க்கத்துடனான அதன் உறவு, யுத்தம் பற்றி அதன் கண்ணோட்டம் மற்றும் தேசிய இனப்பிரச்சனை குறித்து அதன் பார்வை, ஏன் ஆயுதம் தாங்கிய போராட்ட வழிமுறைகள் பற்றி கூட பாரிஸ் கம்யூன் (Paris_Commune, 1871) அனுபவம் மூலம் அகிலத்திற்கு கிடைத்தது. தொழிலாளி வர்க்கம் அதன் உடனடி கோரிக்கைகளை புரட்சி லட்சியங்களோடு எப்படி இணைப்பது என்றும் அகிலம் விவாதித்தது.
1866-ல் ஜெனிவாவில் நடந்த அகிலத்தின் மாநாட்டில் மார்க்ஸ் எழுதி முன்மொழியப்பட்ட தீர்மானம், மார்க்ஸ் எழுதிய பிரான்சின் உள்நாட்டுப் போர் போன்ற ஆவணங்கள், அப்போது வெளியிடப்பட்ட மார்க்சின் மூலதனம் நூலின் முதல் பகுதி போன்றவை தொழிலாளி வர்க்கத்திற்கு வழி காட்டின. பல நாடுகளில் - ஐரோப்பிய நாடுகளில், வேலை நிறுத்தங்களுக்கும், அரசியல் போராட்டங்களுக்கும் அகிலத்தின் வழி காட்டுதல் கிடைத்தது; தொழிற்சங்கங்கள் கட்டப்பட்டன; சோசலிச கோட்பாடுகளை பல்வேறு வடிவங்களில் செயல்பட முனைந்த சோசலிஸ்ட் கட்சிகள் உருவாவதற்கான அடித்தளம் போடப்பட்டது; முதலாம் அகிலத்தின் குழந்தை என எங்கெல்சால் “பாரிஸ் கம்யூன்” குறிப்பிடப்பட்டது.
முதல் அகிலத்தில் பிரதானமாக பங்கேற்ற மார்க்சிய தலைமை கடுமையான தத்துவார்த்தப் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. முதல் அகிலத்தில் பல்வேறு குழுக்கள் பங்கு பெற்றிருந்தன. நடைமுறை உத்திகளை மேற்கொள்ளாது சோசலிசம் பற்றிய கற்பனை வாத அணுகுமுறையின் தாக்கம் இருந்தது; வர்க்கப் போராட்டத்தை மறுக்கும் குட்டி பூர்ஷ்வா கருத்தோட்டம் கொண்ட புருதோன் போன்றவர்களின் தாக்கமும் இருந்தது; தொழிலாளர்களும், விவசாயிகளும் முதலாளிகளிடமிருந்தும், நிலப்பிரபுக்களிடமிருந்தும் விடுதலை பெறுவது இயலாது என்றும், பெண்களின் இடம் வீடு தானே தவிர அரசியல் அல்ல என்ற கருத்தையும் முன் வைத்தவர் புரூதோன். இத் தகைய பிற்போக்குத்தனமான கண்ணோட்டத் தோடு அவர் எழுதிய வறுமையின் தத்துவம் என்ற நூலுக்கு மார்க்ஸ் தத்துவத்தின் வறுமை என்று எழுதி தெளிவு படுத்த வேண்டியிருந்தது. ஆயுதம் தாங்கி சில சதி வேலைகளின் மூலம் மாற்றம் காண்பதில் நம்பிக்கை கொண்டிருந்த பகுனின், பிளாங்கி போன்றவர்களின் கருத்துக்களை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது; தொழிற்சங்கச் சுவர்களைத் தாண்டி எதுவும் இல்லை என்ற கருத்தை எதிர்த்து அரசியல் ரீதியான அனைத்து ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பணியினை தொழிற்சங்கங்கள் ஏற்க வேண்டும் என்று மார்க்ஸ் சுட்டிக் காட்டினார். தொழிலாளர்கள் ஒரு அமைப்பாக சேர்வதிலும், வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடுவது குறித்தும் நம் பிக்கையற்ற ஜெர்மனியின் பெர்டினண்டு லசாலே போன்றவர்களின் கருத்துக்களை எதிர்த்து மார்க்ஸ் தத்துவார்த்தப் போராட்டத்தை நடத்தினார்.
இரண்டாவது அகிலம் (1889–1914)
தொகுஇரண்டாவது அகிலத்தின்[4] காலகட்டம் (1889–1914)
1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிஸ்ட் தொழிலாளர்களின் ‘சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது” 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். ஏங்கெல்ஸூம், பிரபல சோசலிஸ்ட் தலைவர்களான ஆகஸ்ட் பெல், வில்லியம் லீப்னெக்ட் உட்பட பலர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டமே இரண்டாவது அகிலத்தின் துவக்கமாக அமைந்தது.
இரண்டாம் அகிலம் கலைக்கப்படுதல்
தொகு1914 இல் முதல் உலகப் போர் தொடங்கியபோது இரண்டாவது அகிலத்தின் தலைவர்கள் சந்தர்ப்பவாதத்திற்கு உள்ளானதால் இரண்டாம் அகிலம் 1914 இல் கலைக்கப்பட்டது. [5]
இவற்றையும் பார்க்க
தொகுமூலம்
தொகு- ↑ எப், வோல்கவ் (1987), "பாட்டாளி வர்க்க இயக்க தலைவர்கள்", கம்யூனிசம் என்றால் என்ன?, முன்னேற்றப் பதிப்பகம், p. 292, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-01-001467X
- ↑ http://www.marxists.org/history/international/index.htm
- ↑ http://www.marxists.org/history/international/iwma/index.htm
- ↑ http://www.marxists.org/history/international/social-democracy/index.htm
- ↑ லெனின், விளாதிமிர் (1982), சந்தர்ப்பவாதமும் இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சியும், முன்னேற்றப் பதிப்பகம், p. 43